மனைவியை மதிப்போம்; இறையன்பை வெல்வோம்!

மனைவியை மதிப்போம்; இறையன்பை வெல்வோம்!
Updated on
2 min read

முழுமையான இறை நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் நற்குணம் கொண்டவரே அவர்களில் சிறந்தவர். அந்த நற்குணம் கொண்டவர்களில் சிறந்தவர் தங்கள் மனைவியிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவர் என்று முகமது நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்.

அதாவது நீங்கள் ஊருக்கும் சமூகத்துக்கும் நல்லவராக இருந்தாலும், வீட்டுக்கு நல்லவராக இருந்தால் மட்டுமே இறைவனால் நல்லவராகக் கருதப்படுவீர்கள் என்பதே இதன் மூலம் அவர் நமக்கு உணர்த்தும் சேதி.

நல்ல மனிதராக வாழ்வதற்கு இறை வணக்கம், ஐந்து வேளை தொழுகை, நோன்பு, ஹஜ் பயணம், ஏழை எளியவர்களுக்கு உதவி போன்ற நல்ல காரியங்கள் மட்டும் நமக்குப் போதாது. இறைவனின் நேசத்தைப் பெறுவதற்குத் தனிப்பட்ட குடும்ப வாழ்வில் நாம் எப்படி வாழ்கிறோம், மனைவியை எப்படி மதிக்கிறோம் என்பது போன்றவையே முக்கியக் காரணிகளாக உள்ளன.

மனைவியை எப்படி நடத்த வேண்டும்?

மனைவியை அடிமைபோல நடத்துவதும் தூங்கும் மனைவியை எழுப்பி வேலை வாங்குவதும் மனைவியின் சுதந்திரத்தைப் பறிப்பதும் மிகவும் தவறான செயல் என்பதை நபிகள் (ஸல்) தனது சொந்த வாழ்க்கையில், தன்னுடைய மனைவியைக் கண்ணியமாக நடத்தும் விதம் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.

மனைவிக்குக் கணவர் செய்ய வேண்டிய கடமை குறித்து அவர் கூறும்போது, “கணவன் சாப்பிடும்போது மனைவியையும் சாப்பிட வைக்க வேண்டும். கணவர் சாப்பிடும் அதே உணவை மனைவிக்கும் சாப்பிடக் கொடுக்க வேண்டும். புதிய உடை எடுக்கும்போது, மனைவிக்கும் நல்ல உடை எடுக்க வேண்டும்.

மனைவியை அடிக்கக் கூடாது. மனைவியின் மனத்தை நோகடிக்கக் கூடாது. குடும்ப விஷயங்களில் ஏற்படும் மனஸ்தாபங்களை வீட்டுக்குள் தவிர வெளியிடங்களில் மனைவியின் மீது காட்டக் கூடாது” என்று அவர் கூறுகிறார்.

யார் நல்ல மனிதர்?

மனைவியின் சுய மரியாதையைப் போற்றுபவரே நல்ல கணவனாக மட்டுமல்லாமல் நல்ல மனிதராகவும் இருக்க முடியும். மனைவியை அடிமையைப் போல் நடத்துவதோ, அடிப்பதோ நல்ல பண்பு கிடையாது என்கிறார். நபி (ஸல்) தன்னுடைய மனைவியை ஒருபோதும் அடித்ததில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மனைவியின் சுயமரியாதையைப் பறிப்பது என்பது இழிவான செயல். பலர் முன்னிலையில், பொது இடங்களில் மனைவியைத் திட்டித் தீர்த்து, அவர் சுயமரியாதையைப் பறிப்பது நிச்சயமாக நல்ல பண்பல்ல! அந்தத் தீய பண்பை நீங்கள் விட்டொழிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

மலரும் இறையன்பு

மனைவி என்பவர் அறிவும் உணர்வும் கொண்ட தனி ஆளுமை. அவருக்கென்று தனியாக விருப்பு, வெறுப்புகள் உண்டு. அவருக்கென்று தனி ரசனைகள் உண்டு. ஆனால், மனைவியின் விருப்பு, வெறுப்பு, ரசனைகளைப் புறந்தள்ளி அவர் மீது ஏகபோக உரிமை கொண்டாடும் ஆணாதிக்கப் போக்கு கணவர்களிடம் அதிகம் இருக்கிறது.

இன்றும் பெரும்பாலான வீடுகளில் வேலை செய்யும் ஒரு மனித இயந்திரத்தைப் போல்தான் மனைவியர் நடத்தப்படுகிறார்கள்.

மனைவியர் மீது நடத்தப்படும் இத்தகைய அத்துமீறல்கள் மிகவும் தவறானவை என்று நபிகள் (ஸல்) தமது வாழ்நாளில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறார்.

முக்கியமாக, மனைவியை எப்படிக் கண்ணியமாக நடத்த வேண்டும், அவரது சுதந்திரத்துக்கு எப்படி மதிப்பளிக்க வேண்டும், அவரது சுயமரியாதையை எப்படிப் போற்ற வேண்டும் என்பது போன்ற வற்றுக்கு நபிகளாரின் (ஸல்) சொந்த வாழ்க்கையே நமக்கான வழிகாட்டியாக உள்ளது. அவர் வழிகாட்டும் பாதையில் நடைபோடுவது, நம்மை நல்ல மனிதராக்கும்; இறையன்பையும் நம்முள் மலரச் செய்யும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in