

இந்த வேடனின் சிற்பத்தைப் பாருங்கள்; எவ்வளவு அழகாக வாய்விட்டுச் சிரிக்கும் கோலத்தில் இருக்கிறது. சிரிக்கும்போது தெரியும் பற்களை எப்படி நுணுக்கமாகவும் தத்ரூபமாகவும் வடித்திருக்கிறார் சிற்பி! ஆறடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் கம்பீரமாகப் பரந்துவிரிந்த மார்புடன் இடுப்பை ஒசித்து வளைந்து நிற்கும் வேடன் சிற்பத்தின் மார்பளவு ஓவியம் இது.
சிரிக்கும்போது ஏற்படும் உதடுகளின் நளினத்தையும் பற்களின் அமைப்பையும் அவ்வளவு அற்புதமாக வடித்துள்ளது வெகு சிறப்பு.
கண்கள்கூடச் சிரிக்கின்றனவே! முறுக்கிவிடப்பட்ட குறுவாள் போன்ற மீசையும் தலையில் வித்தியாசமான அணிகலன்களுடன் கூடிய அழகிய கொண்டையும் அதில் பறவைகளின் இறகுகள் போன்ற அணிகலன்களைச் சூடியிருக்கும் அமைப்பும் கொள்ளை அழகு.
இடது பக்கம் பெண்கள் போடும் கோடாலி முடிச்சு போன்ற கொண்டையுடன் காதுகளில் இன்றைய நவநாகரிக பெண்கள் அணிவது போன்ற பெரிய காதணிகளையும் அணிந்துள்ளார். கழுத்திலும் தோள்களிலும் மார்பிலும் கைகளிலும் புதுமையான வடிவில் ஆபரணங்களை அணிந்துகொண்டு இன்றைய நவநாகரிகத் தோற்றத்தின் முன்னோடியாக அல்லவா காட்சியளிக்கிறார்!
இடது கையில் வித்தியாசமான அமைப்பில் வில்லும் வலது கையில் அம்பும் முதுகில் அம்பறாத்தூணியுடனும் இருக்கிறார். நெற்றியில் நெற்றிக்கண் போன்ற அமைப்பு உள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது இவர் அர்ஜுனனுடன் போர்புரிந்த கிராத மூர்த்தியோ என்று எண்ணத் தோன்றுகிறது.
திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயத்தில் நுழையும்போது, நந்தி தேவரின் இடது புறத் தூண் ஒன்றில் இந்த வேடன் காட்சியளிக்கிறார். நெல்லையப்பர் ஆலயம், பொது ஆண்டு (கி.பி.) ஆறாம் நூற்றாண்டில் நின்ற சீர்நெடுமாறன் என்கிற கூன் பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டது. அதிலிருக்கும் இந்தச் சிலை பொது ஆண்டு (கி.பி.) 13ஆம் நூற்றாண்டில் நாயக்க மன்னர்கள் காலத்தில் வடிக்கப்பட்டது.
இவற்றை நேரில் அணுவணுவாக ரசித்துப் பார்க்கும்போதுதான் இதை உருவாக்கிய சிற்பியின் அபார திறமையும் சிற்பத்தில் உள்ள நளினமும் மிக நுட்பமான வேலைப்பாடுகளும் நமக்குத் தெள்ளத்தெளிவாகப் புலப்படும்.