

பிள்ளையார் கோயில் இல்லாத இடமே தமிழ்நாட்டில் இருக்காது. எந்தக் காரியம் செய்வதற்கு முன்னாலும் பிள்ளையாரை வணங்குவது இந்தியா முழுவதும் தொடர்ந்து வரும் வழக்கம். யானை முகமுடைய கணேசக் கடவுளின் திருவுரு இந்தியப் பண்பாட்டின் அடையாளமாகவும் சர்வதேச அரங்கில் பார்க்கப்படுகிறது.
இந்த கணேசக் கடவுள் உருவான வரலாறு சுவாரசியம் மிக்கது. சிவனுக்கும் பார்வதிக்கும் மகனாகப் பிறந்தவர் என்கிற புராணக் கதைகள் இந்தக் கடவுளுக்கு உள்ளதுபோல் நாட்டார் கதைகளும் இவருக்கு உண்டு.
சிறு தெய்வ வழிபாட்டிலும் பெரிய கடவுள்
பெருந்தெய்வம், சிறு தெய்வம் ஆகிய இரு வழிபாடுகளிலும் கணேசர் இருந்திருக்கிறார். பக்திக்கு அப்பாற்பட்ட பண்பாட்டு அடையாளமும் இந்தக் கடவுளுக்கு உண்டு. தாண்டவம் ஆடும் புகழ்பெற்ற நடராஜரைப் போல் கணேசக் கடவுளின் சிலைகளும் இந்திய அடையாளமாகப் பிரசித்தி பெற்றவை. நிஷ்கலங்கமான ஆனை முகமும் குள்ள உருவமும் இதற்குக் காரணம் எனலாம்.
பெளத்த சமயத்தைப் பின்பற்றிய குஷாணப் பேரரசுக் காலகட்டத்தைச் சேர்ந்த தாமிர நாணயங்களில் கணேசக் கடவுளின் உருவம் கண்டறியப்பட்டுள்ளது. பொது ஆண்டின் இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள் அவை.
குப்தப் பேரரசு காலகட்டத்தைச் சேர்ந்த உதயகிரி சமணக் குடைவரைக் கோயிலில் காணப்படும் விநாயகரின் சிற்பம் இந்திய அளவில் கணேசக் கடவுளின் முதல் கற்சிற்பம் எனச் சொல்லப்படுகிறது. இது பொ.ஆ.ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இதற்கு முன்பே வேதத்திலேயே இந்தக் கடவுளைக் குறித்துப் பெயரளவில் குறிப்புகள் உள்ளதாகச் சொல்லப்பட்டாலும், இன்றைக்குப் பிரம்மாண்டமான அளவில் வளர்ந்துள்ள கணபதியின் தெய்விகத் திருவுரு பெளத்த, சமண விநாயகரை ஒத்தது எனலாம்.
உழவர்களின் கடவுள்
இனவியல் பேராசிரியர் பி.ஏ.குப்தே, கணேசர் உழவர்களின் கடவுள் என்றும் அவரது உருவமே அதன் அடிப்படையில் உருவானது என்றும் ஆராய்ந்து கூறியிருக்கிறார். உழவர்கள் சுமந்து செல்லும் சோளத்தட்டைதான் கணபதி உருவக் கற்பனைக்கு வித்திட்டது என்பது அவரது துணிபு. வேளாண் நிலத்தில் உள்ள எலியே அவரது வாகனமாகவும் ஆனது என்கிறார் அவர்.
கணபதி வழிபாடு குப்தப் பேரரசு காலத்தில் பொ.ஆ. ஐந்தாம் நூற்றாண்டில் தொடங்கிவிட்டதாக இந்திய வரலாற்றறிஞர் எம்.கே. தவாலிகர் குறிப்பிடுகிறார். தத்துவவியலாளர் தேவி பிரசாத் சட்டோபாத்யாய தனது ‘லோகாயுத’ நூலில் திராவிடப் பழங்குடியின் சூரிய வழிபாட்டுடன் கணேச வழிபாட்டுக்குத் தொடர்புண்டு எனச் சொல்கிறார். இதே கருத்தை இந்தியக் கலை தத்துவவியலாளரான ஆனந்த குமாரசாமியும் வலியுறுத்துகிறார்.
வாதாபி கணபதியின் வரலாறு
பல்லவர்களுக்கும் சாளுக்கியர்களுக்கும் பொ.ஆ. ஏழாம் நூற்றாண்டில் நடந்த போர் வழியாக இங்கே இந்தப் புதிய விநாயகர் வடிவம் வந்ததாகக் கருதப்படுகிறது. சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசியை முதலாம் நரசிம்ம பல்லவனின் படைத் தளபதி பரஞ்சோதி சாளுக்கியத் தலைநகரான வாதாபியில் வெற்றிகொண்டார். இந்தப் படையெடுப்பில் விநாயகர் சிலையை அவர் தனது ஊரான திருச்செங்கட்டான்குடியில் நிறுவினார். இவர்தான் பின்னாளில் 63 நாயன்மார்களில் ஒருவரானார். கர்னாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் ‘வாதாபி கணபதிம்’ என்கிற கீர்த்தனையின் ஆதாரம் இந்த வரலாறுதான்.
குடைவரைக் கோயிலிலும் விநாயகர்
தமிழில் திருமுறைகளில்தான் விநாயகர் குறித்த குறிப்புகள் கிடைக்கின்றன. சம்பந்தரும் நாவுக்கரசரும் விநாயகக் கடவுளைப் பற்றிய குறிப்புகளைத் தருகிறார்கள். புராணக் கதைகளை ஒட்டியே இந்தக் கருத்துகள் இருக்கின்றன. பாண்டியர், முத்தரையர் காலகட்டத்துக் குடைவரைக் கோயில்களில் விநாயகர் சிற்பங்களைக் காண முடிகிறது.
பாண்டியர் காலகட்டத்தைய பிள்ளையார்பட்டி குடைவரைக் கோயிலில் சுற்றுப் பிரகாரத் தெய்வமாக விநாயகர் உருவம் இருக்கிறது. இந்தக் கோயில் தொடக்கத்தில் சிவனை முதன்மைக் கடவுளாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கோகர்ணம், குன்றக்குடி, திருக்கோளக்குடி போன்ற குடைவரைகளில் விநாயகர் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
பல்லவ, பாண்டிய, முத்தரையர் கால கட்டத்தில் சுற்றுப் பிரகார தெய்வமாக இருந்த விநாயகர், சோழர் ஆட்சிக் காலத்தில் அஷ்டப் பரிவாரத் தெய்வமானதாக வரலாற்றாய்வாளர் இரா.கலைகோவன் தன் கட்டுரையில் சொல்கிறார்.
கணேசன் எனும் அம்சம்
கணேசக் கடவுளைப் பிற்காலத்தில் பிரபலப்படுத்தியதில் பொ.ஆ.14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மோரியா கோசாவி என்னும் துறவிக்கு முக்கியப் பங்குண்டு. விஷ்ணு, சிவன், சக்தி, சூரிய வழிபாட்டுடன் கணேச வழிபாட்டையும் ஓர் அம்சமாகப் பிரச்சாரம் செய்தார். இன்றைக்கும் வட இந்திய பிள்ளையார் சதுர்த்தி வழிபாட்டில் ‘கணபதி பாபா மோரியா’ எனப் பக்தி கோஷம் எழுப்பப்படுவதைக் கேட்கலாம்.
புனேக்கு அருகில் சிஞ்ச்வாத் என்னுமிடத்தில் கணேசக் கடவுளுக்கு இவர் கோயில் அமைத்தார். இவருக்கு முன்பே பொ.ஆ.எட்டாம் நூற்றாண்டில் ஆதி சங்கரர் நெறிப்படுத்திய இந்து மதத்தின் ஆறு பிரிவுகளில் காணபத்யம் எனப்படும் விநாயகர் வழிபாடும் ஒன்றாக இருந்தது. ஆதி சங்கரர் ‘கணேச பஞ்சரத்தினம்’ என்னும் துதிப் பாடலையும் எழுதியுள்ளார்.
பண்பாட்டுத் தொடர்பு
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர், 1893இல் மிகப் பெரிய மக்கள் திரளுடன் பிள்ளையார் சதுர்த்தியைக் கொண்டாடினார். அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் இந்தக் கொண்டாட்டம் எழுச்சியாகப் பரவியது. ‘சர்வஜன கணேச உற்சவம்’ என இந்த எழுச்சியைத் திலகர் அழைத்தார்.
மராட்டிய மன்னன் சிவாஜி காலகட்டத்தில் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டதாகச் சான்று இருந்தாலும் திலகரின் இந்த இயக்கம் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத்தின்வழி பரவியது. 19ஆம் நூற்றாண்டில் வட இந்திய கணேசக் கடவுள் வழிபாட்டுப் பண்பாடு பிரபலம் அடைவதற்கு முன்பே தமிழகத்தில் விநாயகர் வழிபாடு இருந்தது. என்றாலும் இந்தக் காலகட்டத்தில் கணேசர் வழிபாடு பரவலானது. இது இயக்கமாகவும் நம்பிக்கையாகவும் வளர்க்கப்பட்டு இன்று பெரும் வழிபாடாக நிலைபெற்றுள்ளது.