

நம்மாழ்வாரின் ‘ஆயிரத்துள் இப்பத்தும்’ என்னும் வார்த்தை யைக் கொண்டு கண்ணிநுண் சிறுதாம்பை பன்னிரண்டாயிரம் முறை ஓதி, பல்லாண்டு தொடக்கமாக ஆழ்வார்களின் ஈரச் சொற்களால் திருவாய் மலர்ந்து அருளிய திவ்யப் பிரபந்தம் நாலாயிரத்தையும் பெற்றுத் தந்தார் ஸ்ரீமன் நாதமுனிகள்.
அவர் பெற்றுத் தந்த ஆழ்வார்களின் அருளிச் செயல்களை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் ‘ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம்’ என்கிற நூலை மூன்று பகுதிகளாக அமைத்துள்ளார் சுஜாதா தேசிகன்.
வாசிப்புக்கு உதவும் வகையில் பதங்கள் பிரித்திருப்பது, குழுவாகப் பாராயணம் செய்யும்போது எங்கெங்கு நிறுத்த வேண்டும் என்னும் குறிப்பு, இருமுறை சேவிக்கும் பாசுரங்களைப் பற்றிய குறிப்போடு இந்தத் தொகுப்பு வந்திருப்பது சிறப்பு.
இப்பதிப்பில் பிரபந்தம் இரண்டு பாகமாகவும், அத்துடன் அனுபந்தம் தனிப் புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பல்லாண்டு முதல் பெரிய திருமொழி ஆயிரம் முடிய முதல் நூலாகவும், இயற்பா ஆயிரமும் திருவாய்மொழி ஆயிரமும் இரண்டாவது நூலாகவும் அமைக்கப்பட்டுள்ளன.
அனுபந்தத்தில், வண்ணப்படத்தில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரங்கமன்னார், ஆழ்வார்கள், ஆச்சாரியர்களின் திருநட்சத்திரங்கள், வாழித் திருநாமங்கள், 108 திவ்ய தேசங்கள், அதற்கு வழிகாட்டும் க்யூ-ஆர்-கோட், பாடல் முதல் குறிப்பகராதி, பாசுரப்படி திருவாராதனக்ரமம் முதலான தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பெருமாளின் 1,008 திருநாமங்களைத் தொகுத்து அத்துடன் தாயாரின் திருநாமங்கள் 108 கொடுக்கப் பட்டுள்ளன.
ஆழ்வார்களைக் குறித்த கல்வெட்டுகள், ஆழ்வார் பாசுரங்களில் காணப்படும் வண்டு, கிளி, குயில் போன்ற குறிப்புகளும் சேர்த்து நிறைவான தொகுப்பாக இந்தப் புத்தகங்கள் மிளிர்கின்றன.
ஆழ்வார்கள் திருவாய் மலர்ந்து அருளிய நாலாயிர திவ்யப் பிரபந்தம் (மூன்று பகுதிகள் – பாகம் 1, பாகம் 2, அநுபந்தம்)
ராமானுஜ தேசிக முனிகள் அறக்கட்டளை வெளியீடு
நூல் ஆக்கம், வடிவமைப்பு: சுஜாதா தேசிகன், தொடர்புக்கு: 9845866770, www.rdmctrust.org, rdmctrust@gmail.com