

குடும்பத்துக்குள்ளும் சரி, வெளியேயும் சரி உறவுகளையும் நட்பு வட்டத்தையும் தக்கவைத்துக் கொள்வது மனித வாழ்வின் நீடித்த போராட்டம். ஒரு மனிதன் சுயநலத்தின் மீதே கண்ணாக இருக்கும்போது உறவிலும் நட்பிலும் சிக்கல் வெடிக்கிறது. சுயநலம், பாதுகாப்பற்ற உணர்வின் முதன்மை வடிவம்.
பிலிப்பியர் புத்தகத்தின் இரண்டாம் அதிகாரத்தில் நான்காவது வசனம் ‘உங்களுடைய நலனில் மட்டுமே அக்கறை காட்டாமல், மற்றவர்களுடைய நலனிலும் அக்கறை காட்டுங்கள்.
அப்போது உங்களைப் பாதுகாக்க உங்களை அறிந்தவர் மட்டுமல்ல; அறியாதவர்கூட வந்து நிற்பார்கள்’ என்று சொல்கிறது. அதேசமயம், ‘நேர்மையான காரணம் இருந்தாலன்றி நீங்கள் அறிந்திராத ஒருவர் தரும் சலுகைகளையோ இலவசங்களையோ பெற்றுக்கொள்ளாதீர்கள்; அதைச் செய்பவருக்கு ஓர் எதிர்பார்ப்பு இருக்கக்கூடும்’ என்றும் கூறுகிறது.
இதைத்தான் தவறான மனிதர்களுடன் உறவோ, நட்போ ஏற்படுத்திகொள்ள வேண்டாம் என்று விவிலியத்தின் கொரிந்தியர் புத்தகம் அதிகாரம் 15ஆவது வசனம் 33 இல் ‘ஏமாந்துவிடாதீர்கள்; கெட்ட சகவாசம் நல்ல ஒழுக்க நெறிகளை கெடுத்துவிடும்’ எனச் சொல்லப்பட்டிருக்கிறது. தங்களுடைய நலனுக்காக உங்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வரும் மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். உங்களுடைய நண்பர்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள்.
ஒரு தவறான நபரை நண்பனாகத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்குப் பெரும் சிக்கல் காத்திருக்கும். அவர்களின் கெட்ட பழக்கங்கள் உங்களுக்கும் தொற்றும்.
‘நல்ல, மனத் தூய்மையான நண்பரை இந்த லௌகீக உலகில் நான் எங்கே போய்த் தேடுவேன்..’ என நீங்கள் கேட்கலாம். வெகு எளிதானது! நீங்கள் பின்பற்ற விரும்பும், அல்லது பிடிவாதமாகப் பின்பற்றிவரும் நல்ல குணங்களில் பலவும் யாரிடம் இருக்கின்றனவோ, அவர்கள்தான் உங்களின் சரியான தெரிவு. அப்படியானவர்களோடு நண்பராகுங்கள்.
உதாரணத்துக்கு, மரியாதையாக நடந்துகொள்கிறவர்கள், தாராள குணமுள்ளவர்கள், தயக்கமின்றி உபசரிக்கிறவர்கள்.. என நல்ல குணமுள்ளவர்களை ஒரு சிறு கால இடைவெளியில் நீங்கள் அடையாளம் காண முடியும். மத்தேயு புத்தகம் 7:12இல் சொல்வதை மறந்துவிடாதீர்கள்: ‘மற்றவர்கள் உங்களுக்கு எதையெல்லாம் நண்மையாகச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அதையெல்லாம் நீங்களும் அவர்களுக்குச் செய்ய வேண்டும்’.