

இந்தியச் செவ்வியல் கலைகளில் பரதநாட்டியம் பிரபலமானது. இந்தக் கலை இன்று இந்தியாவில் பல பகுதிகளில் ஆடப்பட்டாலும் இதன் பூர்விகம் தமிழகம். தமிழில் ‘சதிராட்டம்’ என அழைக்கப்படும் ஆட்டம்தான், பரதநாட்டியமாகப் பின்னாளில் நிலை நிறுத்தப்பட்டது எனச் சான்றுகள் சொல்கின்றன. ராகத்துக்கும் தாளத்துக்கும் பொருளுக்கும் ஏற்ப ‘பாவம்’ காண்பித்து ஆடுவது பரதநாட்டியம்.
தமிழ்நாட்டுச் சமயமான சைவத்தின் கடவுளான நடராஜரின் தாண்டவச் சிற்பம் உலகப் புகழ்பெற்றது. இதில் தாண்டவம் என அழைக்கப்படுவதும் பரதநாட்டிய நடன முறைதான். பரதநாட்டியத்தில் சொல்லப்படும் நூற்றியெட்டு கரணங்களும் தஞ்சைப் பெரிய கோயிலில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பரதநாட்டியத்துக்குத் தமிழகம் தந்த சிறப்பிடம் புலனாகும்.
தமிழகத்தின் இந்தப் பரதநாட்டியப் பாரம்பரியத் தொடர்ச்சி இன்றுவரை தொடர்கிறது. இசைவேளாளர் சமூகத்தினர் மட்டும் ஆடிவந்த இந்தக் கலை, சுதந்திரத்துக்குச் சற்று முன் பொதுக் கலையாகப் பிரபலம் அடையத் தொடங்கியது. மற்ற சமூகங்களைச் சேர்ந்தவர் பலர் இந்தக் கலையைக் கற்றனர்.
கோயில் சார்ந்த கலையாக இருந்த இந்தக் கலை, தனிக் கலையாக மேடையில் நிகழ்த்தப்படும் வழக்கமும் உருவானது. இசைவேளாளர் மரபில் வந்த மயிலாப்பூர் கெளரி அம்மாள், பந்தய நல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஆகியோர் இந்தக் கலையைப் பலருக்கும் கற்றுக் கொடுத்தனர். சுதந்திர இந்தியாவில் பரதநாட்டியக் கலையில் கோலோச்சிய ருக்மிணி தேவி, தஞ்சாவூர் பாலசரஸ்வதி, மிருணாளினி போன்ற நடனக் கலைஞர்கள் பலரும் இவர்களின் மாணவர்கள்தாம்.
சுதந்திர இந்தியாவில்தான் இந்தக் கலை நவீன வடிவம் பெற்று புதிய அந்தஸ்து பெற்றது. ருக்மிணி தேவியும் பாலசரஸ்வதியும் இந்தக் கலையைப் பிரபலப்படுத்தியவர்களில் முதன்மையானவர்கள். இவர்களின் கலையால் உந்தப்பட்ட அடுத்த தலைமுறைக் கலைஞர் சந்திரலேகா. எந்தத் தென்னிந்தியப் பின்னணியும் இல்லாத சந்திரலேகா, சதிராட்டம் கற்பதற்காகவே தமிழகம் வந்து பாலசரஸ்வதியின் நட்டுவனார் எல்லப்பரிடம் நடனம் பயின்றதாகச் சொல்லப்படுகிறது. இவர், பாலசரஸ்வதியிடம் நெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார்.
ஒரு கலகக் குரலாகப் பரதநாட்டிய உலகுக்குள் இவர் ஒலித்தார். பரதநாட்டியம், பெண் உடலைக் காட்சிப் பொருளாகச் சித்தரிக்கும் வடிவமாக இருப்பதாகக் கருதி, அந்த வடிவத்தின் சாத்தியங்களை உடலிலிருந்து நகர்த்தப் புதிய நடன முறைகளை சந்திரலேகா பரிசோதித்துப் பார்த்தார். அதுபோல் கலைக்கென உருவாக்கப்பட்ட பிராந்திய எல்லைகளைத் தகர்க்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டார். இதனால் சந்திரலேகா பெரும் விமர்சனத்துக்கும் ஆளானார்.
கேரளப் போர்க் கலையான களரிப் பயிற்றுவையும் யோகாவையும் பரதநாட்டியத்துடன் இணைத்துப் புதிய வடிவத்தை உருவாக்கினார். இதனால் தூய்மைவாதிகளின் எதிர்ப்பைச் சம்பாதித்தார். பரதநாட்டிய விழாக்களில் சந்திரலேகா நிராகரிக்கப்பட்டார். சென்னை, பெசன்ட் நகரில் `ஸ்பேசஸ்' என்னும் நிறுவனத்தை நிறுவி கலையை ருக்மிணி தேவியைப் போல் அடுத்த தலைமுறைக்குப் பயிற்றுவித்தார். சந்திரலேகா, இறக்கும் வரை பரதநாட்டியத்துக்காகவே தனித்து வாழ்ந்தார்.
சந்திரலேகாவின் பாணியில் பரதநாட்டியத்தில் புதுமையைப் புகுத்தியவர் அனிதா ரத்னம். நடனம் கற்றுக்கொண்டவுடன் பாரம்பரிய முறையில் ஆடிப் பாராட்டுப் பெறுவதை அவர் விரும்பவில்லை. தமிழ் எழுத்தாளரும் கூத்துப் பட்டறை நிறுவனருமான நா. முத்துசாமியிடம் நவீன நிகழ்த்து முறையைப் பயின்றார். புராணக் கதையான அகலிகையில் நவீன கருத்துகளுடன் குறுக்கீட்டை நிகழ்த்திய புதுமைப்பித்தனின் ‘சாபவிமோசனம்’ கதையை அனிதா ரத்னம் நடனமாக நிகழ்த்தியுள்ளார்.
அனிதா, பாரம்பரிய நடன முறையிலிருந்து சந்திரலேகா போல் பல கலைகளின் கூட்டிணைவாக பரதநாட்டியத்தை நிகழ்த்தினார். நடன அசைவுகளைச் சிற்பங்களைக் கொண்டும் தீர்மானித்தார். அமெரிக்காவில் தொலைக்காட்சிகளில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு நடன அரங்கை வடிவமைப்பதில் அக்கறை செலுத்தினார்.
புராணக் கதைகளில் உள்ள பெண் திருவுருக்களை நவீனப் பெண்ணியக் கருத்துகளுடன் மோதச் செய்தார். அனிதாவின் இந்த அம்சத்தால் இவரும் விமர்சனத்துக்கு உள்ளானார். அவர் ஆடுவது நடனமே இல்லை என்றும் பாரம்பரியக் கலைத் துறை விமர்சகர்கள் எழுதினர். ஆனால், பார்வையாளர்கள் அனிதாவின் நடனத்தை வரவேற்றனர். அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டுசெல்வதில் இந்தக் கலகக்காரர்களின் பங்கு முக்கியமானது என்பதை இன்றைய நவீன காலத்தில் உணர முடிகிறது.