

இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டு நிறைவை நாடே கொண்டாடிவருகிறது. அன்பைப் பரவலாக்குவதே சுதந்திரத்தின் லட்சியம். எல்லா சமயங்களும் சக மனிதர்களிடத்தில் அன்பை வளர்க்க வேண்டும் என்பதையே சொல்கின்றன. அன்பையும் அருளையும் ஒருங்கே அளிக்கும் ஆன்மிகத் தலங்கள் சிலவற்றைப் பற்றிய தொகுப்பு:
பிரம்மாண்டமான ஆன்மிக கேந்திரத்தின் மையப்புள்ளி
திருப்பதி ஸ்ரீவேங்கடேஸ்வரப் பெருமாள் கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இந்தக் கோயில் உட்பட திருமலையில் உள்ள 12 கோயில்களை நிர்வகிப்பதற்கு திருமலை தேவஸ்தானம் (TTD) என்னும் நிர்வாக அமைப்பு 1932இல் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டது.
திருப்பதியிலிருந்து திருமலைக்கு மலையில் ஏறிச் செல்வதற்காக இரண்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாகனங்களில் பயணிப்பதற்கும் இரண்டு சாலை வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2015இல் திருப்பதியில் ஒரு விமான நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆந்திர அரசு திருப்பதியை தனி மாவட்டமாக அறிவித்தது.
திருமலை கோயிலுக்கு ஒரு நாளைக்கு தோராயமாக 75,000 பக்தர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. அன்னதானத் திட்டத்தின் மூலம் தினமும் சுமார் 15,000 பேருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. பக்தர்கள் அளிக்கும் நன்கொடை இதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பேருந்து, தங்குமிடங்கள், முடி காணிக்கை செலுத்துவதற்கான இலவச வசதிகள். மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இலவச சேவைகள் கடந்த 75 ஆண்டுகளில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
கோயிலுக்குள்ளேயே இருக்கும் மடப்பள்ளியில் தயாரிக்கப்படும் லட்டு பிரசாதத்துக்கு 2009இல் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் போலிகள் தடுக்கப்பட்டன. இந்துக்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலமான திருமலை வேங்கடேஸ்வரப் பெருமாள் கோயில் இந்தியாவின் மிக முக்கியமான ஆன்மிக கேந்திரத்தின் மையப் புள்ளியாக அமைந்துள்ளது.
- கோபால்
ஞானத்தைப் பரப்பும் புத்த கயா
பிஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவிலிருந்து 96 கிலோமீட்டர் தொலைவில் புத்த கயா கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்கான அடித்தளத்தை அமைத்தவர் மௌரியப் பேரரசர் அசோகர். பொ.ஆ.மு. (கி.மு.) மூன்றாம் நூற்றாண்டில் புத்தர் ஞானம் பெற்றதாகச் சொல்லப்படும் போதி (அரச) மரத்தைக் கௌரவிக்கும் வகையில் அங்கே ஒரு மடாலயத்தை அசோகர் உருவாக்கினார்.
12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள புத்த கயா கோயிலில் ஐந்து சிறப்புக் கட்டிடங்கள் உள்ளன. அதில் உள்ள முதன்மையான துறவி மடமே மகா போதி கோயில். அந்தக் கோயிலின் நாலாபுறமும் இரண்டு மீட்டர் உயரம் கொண்ட கல்லாலான தடுப்பு அமைப்புகள் உள்ளன.
இந்த தடுப்பு அமைப்புகளில் யானை பூஜை செய்கிற கஜலட்சுமியின் சிற்பமும், குதிரைகள் பூட்டிய தேரில் சூரியன் வருவது போன்ற சிற்பமும் அழகுற இடம்பெற்றுள்ளன.
புத்த கயா கோயிலின் கோபுரம் படிக்கட்டு அடுக்குகளைக் கொண்ட பிரமிடு வடிவ அமைப்பைக் கொண்டுள்ளது. அதன் கோபுரத்தில் கிரேக்க-ரோமானிய கட்டிடக் கலை நுட்பங்கள் பொதிந்துள்ளன. உலகெங்கும் இருக்கும் புத்த மதத்தினர் ஒன்றுகூடி வழிபடுவதைப் பார்த்தபடி சுமார் 80 அடி உயரம் கொண்ட புத்தரின் சிலை அங்கே இன்றும் கம்பீரமாக உயர்ந்து நிற்கிறது.
- நிஷா
அருளைப் பொழியும் ரமணாஸ்ரமம்
பன்னெடுங்காலமாக சித்தர்களுக்கும் ஞானிகளுக்கும் தவபூமியாகத் திகழ்வது திருவண்ணாமலை. இத்தகைய புண்ணிய பூமியாகிய திருவண்ணாமலை, விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் பிறந்த வேங்கடராமனையும் ஈர்த்தது. `நான் யார்?' என்னும் கேள்வி அடிக்கடி வேங்கடராமனைத் துரத்தியது.
திருவண்ணாமலை கோயிலின் பாதாள லிங்கம் அருகில் கடுமையான தியானத்தில் மூழ்கிய வேங்கடராமனுக்கு `நான் யார்?' என்ற கேள்விக்கான பதில் கிடைத்தது. ‘மவுன குரு’ என்றே அழைக்கப்பட்ட வேங்கடராமன், அவரின் அத்யந்த சீடர் காவ்யகண்ட கணபதி முனி என்பவராலேயே ‘ரமண மஹரிஷி’ என்று அழைக்கப்பட்டார்.
ஆன்மிக உலகுக்கு ரமணர் அருளிய அருட்கொடைகள் அளப்பரியவை. ரமணரின் உபதேசங்கள் தொகுக்கப்பட்டு பல புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அவற்றில் முதன்மையானது ‘நான் யார்?’ என்ற புத்தகம்.
ஆதிசங்கரரின் ‘ஆத்மபோதம்’ கருத்துகளைத் தமிழில் ரமணர் வெண்பாக்களாக வழங்கியுள்ளார். உள்ளது நாற்பது, ஏகான்ம பஞ்சகம், ஆன்ம வித்தை உள்ளிட்ட பல நூல்களும் ரமணரின் அருட்கொடைகளே. உலகெங்கிலும் இருந்து தங்களைப் பற்றிய கேள்விகளோடும் தேடலோடும் ஆசிரமத்துக்கு வருபவர்களுக்கு பதிலாக இருக்கிறார் ரமணர்.
- யுகன்
மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும் நாகூர் தர்கா
பொ.ஆ. (கி.பி.) 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹஜ்ரத் சையது சாகுல் ஹமீது எனும் மகான் அடக்கம் செய்யப்பட்ட இடமே நாகூர் தர்கா. இங்கே இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், இந்துக்களும் அதிக அளவில் கூடி வழிபடுவது இயல்பாக உள்ளது. இங்கே அடக்கம் செய்யப்பட்டிருக்கும் ஹஜ்ரத் சாகுல் ஹமீதை இந்து மக்கள் ‘நாகூர் ஆண்டவர்’ என்று அழைக்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் இங்கு கொண்டாடப்படும் நாகூர் கந்தூரி விழா இந்திய அளவில் இன்றும் பிரபலமான விழாவாக உள்ளது. பொதுவாக இந்த விழா, நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். கடலில் செல்லும் கப்பல்களைப் புயலிலிருந்தும், பெரும் மழையிலிருந்தும் நாகூர் ஆண்டவரே காப்பாற்றிக் கரை சேர்க்கிறார் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கின்றது.
இந்தத் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், இலங்கை, மயன்மார், மலேசியா, அரபு நாடுகள் ஆகியவற்றிலிருந்து 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் நாகூருக்கு வருகை தருகின்றனர். பொதுவாக, வியாழக்கிழமைகளில் அங்கே மக்கள் கூட்டம் மிகுதியாக இருக்கும். புறாக்களைப் பறக்கவிட்டு வழிபடும் முறையும் இங்கு உண்டு.
இந்த தர்காவின் முன்னால் அமைந்திருக்கும் 90 அடி உயரமுள்ள மினார், தஞ்சையை ஆண்ட பிரதாப்சிங் எனும் மராட்டிய மன்னரால் நிறுவப்பட்டது. இந்த மினார் தவிர அங்கே நான்கு கூண்டுகள் உள்ளன. கடலிலிருந்து பார்த்தால் இவை நன்றாகத் தெரியும். நாகூர் ஆண்டவர் தர்கா மீது பொன்னாடை போர்த்தும் உரிமை இந்துக்களுக்கு இன்றும் வழங்கப்படுகிறது. இந்தியாவின் முக்கிய புனிதத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படும் இந்த தர்கா, இந்து-இஸ்லாம் ஒற்றுமைக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாக இன்றும் திகழ்கிறது.
- நஸ்ரின்
அமைதியை போதிக்கும் ஆலயம்
சாதி, மத, இன பேதமில்லாமல் அனைவரும் வழிபடும் ஆலயமாகத் திகழ்வது இந்தியாவின் தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் தாமரை கோயில். இந்தக் கோயில் புகழ்பெற்ற கட்டிடக் கலை நிபுணர் ஃபரிபோஸ் ஷபா என்பவரால் 1986ல் வெள்ளை சலவைக் கற்களைக் கொண்டு, நிர்மாணிக்கப்பட்டது.
ஆலயத்தைச் சுற்றிலும் ஒன்பது குளங்களும் தோட்டங்களும் உள்ளன. இந்த ஆலயத்திற்கான இடத்தை வாங்குவதற்கான பணம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹர்திஷீர் ருஸ்தன்பூர் என்பவரால் வழங்கப்பட்டிருக்கிறது.
ஒரு பக்கத்துக்கு மூன்று இதழ்கள் என, ஒன்பது பக்கங்களில் 27 இதழ்கள் புடைசூழ தாமரை வடிவில் எழுந்திருக்கும் கோயில் இது. இதற்கு ஒன்பது வாசல்கள். எந்த வாசலில் நுழைந்தாலும் ஆலயத்தின் மையப்பகுதிக்கு செல்லமுடிவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ஆலயத்தின் மையத்தில் 1500 பேர் அமரும் வசதி உள்ளது.
இந்தக் கோயிலுக்குள் எந்தவிதமான உருவ வழிபாடோ, சடங்குகளோ நடத்தப்படுவதில்லை. மனம் உருகிப் பாடலாம். ஆனால் எந்தவிதமான வாத்தியங்களையும் வாசிப்பதற்கு அனுமதி இல்லை. அமைதி. அமைதி. அமைதி… அதுதான் இந்த ஆலயத்தின் பிரதான நோக்கம்.
- யுகன்
குளத்தின் நடுவே பொற்கோயில்
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ள ஹர் மந்திர் சாகிப் என்றழைக்கப்படும் பொற்கோயில் சீக்கிய மதத்தின் முக்கியமான குருத்வாரா (கோயில்) மட்டுமல்லாமல், ஆன்மிக-கலாச்சார மையமாகவும் இயங்கிவருகிறது.
சீக்கியர்களின் நான்காம் குருவான ராம்தாஸ், அமிர்தசரஸ் என்னும் குளத்தை வெட்டினார். ஐந்தாம் குருவான அர்ஜுன் தேவ் குளத்தின் நடுவே கோயிலைக் கட்டினார். குளத்தின் பெயராலேயே ஊரும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலுக்குள் சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த சாகிப் வைக்கப்பட்டுள்ளது.
அமிர்தசரஸ் கோயிலுக்குள் அனைத்து மதத்தவருக்கும் அனுமதி உண்டு. ஆனால் கோயிலுக்குள் நுழைவதற்கு முன் பாரம்பரிய ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும், தலையை துணியால் மூடிக்கொள்ள வேண்டும், கோயிலின் புனிதத்தைக் களங்கப்படுத்தும் பொருள்களைத் தவிர்க்க வேண்டும். அங்கு அளிக்கப்படும் உணவை வீணடிக்கக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் உறுதியாக பின்பற்றப்படுகின்றன.
இந்தியாவின் முக்கியமான ஆன்மிகத் தலங்களில் ஒன்றான பொற்கோயிலுக்கு தினமும் தோராயமாக ஒரு லட்சம் பேர் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொற்கோயிலுக்கு வந்து செல்கிறார்கள். பொற்கோயில் வளாகத்தில் மிகப் பெரிய சமையலறை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும் உணவின் மூலம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பசியாற்றப்படுகிறது.
- கோபால்
பாகுபலி - ஒரே கல்லில் உருவான அதிசயம்
சமண மதத்தின் 24 தீர்த்தங்கரரில் முதலாவது தீர்த்தங்கரராக அறியப்படுபவர் ஆதிநாத் என்கிற ரிஷபதேவர். ரிஷபதேவருக்கும் சுனந்தாவுக்கும் 100 பிள்ளைகள் பிறந்தனர்.
அதில் முதலாவதாகப் பிறந்தவர் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த பரதர். இரண்டாவ தாகப் பிறந்தவர் பாகுபலி. ரிஷபதேவர் தன்னுடைய 100 மகன்களுக்கும் ஆட்சியைப் பிரித்துத் தந்து, துறவறம் செல்ல முடிவெடுத்தார். எனவே, பரதருக்கு அயோத்தியாவையும் பாகுபலிக்கு அஸ்மகாவையும் பிரித்துக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டார்.
இதில், பரதர் தனது சக்ராயுதத்தை உபயோகித்து உலகின் பல பகுதிகளை வென்று பெரும் சாம்ராஜ்யத்தை நிறுவி அயோத்திக்குத் திரும்பினார். பாகுபலி ஆண்டுகொண்டிருந்த பிரதேசத்தையும் கேட்டு போருக்கு அழைத்தார் பரதர். ஆனால் எதிர்பாராதவிதமாக பரதர் போரில் தோல்வியுற்று பாகுபலி வென்று விடுகிறார்.
போரில் வென்றபோதும் பாகுபலிக்கு அந்த வெற்றி மகிழ்ச்சியைத் தரவில்லை. போரினால் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் கண்டு வேதனையடைந்த பாகுபலி, தந்தையைப் போலவே துறவறம் மேற்கொண்டார். ரிஷபதேவர் தவம் செய்துவந்த விந்தியமலைக்குச் சென்று நின்ற நிலையில் தியானத்தில் ஈடுபட்டு இறை நிலையை அடைந்தார்.
பாகுபலி என்கிற கோமதேஸ்வரர் நிர்வாண நிலையில் தீட்சை பெற்ற இந்த இடத்தில்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 57 அடி உயரத்தில் அவருக்குச் சிலை வடிக்கப்பட்டது. கி.பி.983இல் நிறுவப்பட்ட இந்தச் சிலையானது, கர்நாடக மாநிலம் ஹசன் மாவட்டத்தில் உள்ள சரவணபெலகுளா என்கிற இடத்தில் உள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், இந்தச் சிலை முழுவதும் ஒரே கருங்கல்லால் ஆனது. பாகுபலி எனப்படும் கோமதேஸ்வரருக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்பட்டு `மகாமஸ்தக்' என்கிற அபிஷேகம் செய்யப்படுகிறது.
- ஆர்.மனோஜ்
ஷீர்டி சாய் பாபா ஆலயம்
சாதி, மத, இன, மொழி பேதங்களைக் கடந்து இன்று எல்லாராலும் பக்தியோடு கொண்டாடப்படுபவர் மகான் ஷீர்டி சாய் பாபா. மகாராஷ்டிர மாநிலத்தில் பிறந்தார்.
வெங்குசா (இவர்தான் பாபாவின் குருவாக கருதப்படுகிறார்) என்பவரின் பாதுகாப்பில் வளர்ந்தார். மதரீதியான ஒடுக்குமுறைகளை கடுமையாக எதிர்த்தவர் பாபா. அனைவரது வாழ்வும் மேம்பட எல்லாரும் அன்புடன் கூடிய ஒற்றுமையை கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.
பாபா தான் தங்கியிருக்கும் துவாரகாமாய் மசூதியில் தினமும் தீபம் ஏற்றுவது வழக்கம். அவருக்கு எண்ணெய் தருபவர்கள் ஒருமுறை அவரின் சக்தியை சோதிக்க எண்ணி, தீபம் ஏற்றுவதற்கான எண்ணெய்யை தராததால், எண்ணெய்க்கு பதில் தண்ணீரை ஊற்றி தன் அற்புத ஆற்றலை அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.
வேப்ப மரத்தடியில் பாபா தவமிருந்ததால், அந்த வேப்ப மரத்தின் இலைகளில் கசப்புத் தன்மை இன்றி, இனித்ததாக பக்தர்கள் கருதினர். இவ்வாறு அவர் ஷீர்டியில் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.
துவாரகாமாய் என்ற மசூதியை இருப்பிடமாகக் கொண்டாலும் மழைக் காலத்தில் அங்கு தங்கமுடியாத சூழலில், அருகாமையில் இருக்கும் சாவடியில் பாபா தங்கினார்.
சாய்பாபா துவாரகாமாயிலிருந்து சாவடிக்குச் செல்வதை ஒரு திருவிழாவாக அந்நாளில் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இன்றைக்கும் ஷீர்டியில் சாய்பாபாவின் திருவுருவச் சிலையை வியாழன் தோறும் துவாரகாமாயிலிருந்து சாவடிக்கு ஊர்வலமாக கொண்டுசெல்வதை ஒரு கோலாகல வைபவமாகவே பக்தர்கள் நடத்துகின்றனர். ஷீர்டி ஒரு புண்ணிய ஸ்தலமாக இன்றளவும் கருதப்படுகிறது.
- ஜி. சுரேஷ்
புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம்
புதுச்சேரியின் முக்கியமான ஆன்மிக வழிபாட்டுத் தலமாக அரவிந்தர் ஆசிரமம் விளங்குகிறது. இந்த ஆசிரமம் 1926ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 20 வழிபாட்டாளர்களுடன் தொடங்கப்பட்ட ஆசிரமத்தில் இன்றைக்கு 1600 சீடர்கள் ஆசிரமத்தைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான பக்தர்களோடு இணைந்து சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மிகப்பெரிய சமூக நல்லிணக்க மையமாக அரவிந்தர் ஆசிரமம் விளங்குகிறது. இங்குள்ள கல்வி நிலையத்தில் சுமார் 400 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.
நாட்டிற்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்ற கருத்தை தனது பத்திரிகையான ‘வந்தே மாதரத்’தில் வெளிப்படையாக முன்வைத்த அரசியல் தலைவர் அரவிந்தர். தேசத்துரோகத் குற்றத்துக்காக இரண்டு முறையும், சதி செய்ததாக ஒரு முறையும் பிரிட்டிஷ் அரசு அரவிந்தரின் மேல் வழக்கு தொடர்ந்தது.
அரவிந்தர் பரோடாவில் இருந்தபோது யோகாசனப் பயிற்சிகளைப் பயின்று, அதன் ஆன்மிகத் தன்மைகளை உணரலானார். இதன் காரணமாக 1910ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகி புதுவைக்கு வந்த அவர், ஆழ்மன தியான வாழ்க்கைக்குத் தன்னை மாற்றிக் கொண்டு சேவை செய்யலானார். அவருடன் ஆன்மிகப் பயணத்தில் 1926ஆம் ஆண்டு சேர்ந்த அன்னையுடன் இணைந்து அரவிந்தர் ஆசிரமத்தை நிறுவினார்.
- ஆர்.மனோஜ்
ஆரோக்கிய அன்னை ஆலயம்
இந்தியாவின் முக்கியத் திருத்தலங்களில் ஒன்று அன்னை வேளாங்கண்ணி தேவாலயம். நாகப்பட்டினத்தில் தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டது. 16ஆம் நூற்றாண்டில் ஒரு பால்காரச் சிறுவனிடம் மரியன்னை தன் குழந்தையுடன் தோன்றி, குழந்தைக்குப் பால் கேட்டார்.
மோர் விற்ற மாற்றுத்திறனாளி சிறுவனின் காலை குணப்படுத்தினார். போர்த்துக்கீசியர்கள் கப்பலில் வந்துகொண்டிருந்தபோது, புயலில் சிக்கிக்கொண்டனர். `தங்களைக் காப்பாற்றினால் ஆலயம் கட்டுவதாகப் பிரார்த்தனை செய்தனர்'. அன்னையின் அருளால் உடனே புயல் தணிந்து அவர்கள் பத்திரமாக வேளாங்கண்ணியில் கரை இறங்கினர்.
மரியன்னைக்கு தேவாலயத்தைப் பெரிதாகக் கட்டி எழுப்பினார்கள். இந்த மூன்று அற்புதங்களை அன்னை மரியா நிகழ்த்திக் காட்டியதாக நம்பப்படுவதால், இந்தத் தேவாலயம் புகழ்பெற ஆரம்பித்தது. மத வேறுபாடு இல்லாமல், அனைத்து மதத்தினரும் வேளாங்கண்ணிக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதை இயல்பாக வைத்திருக்கிறார்கள்.
1962ஆம் ஆண்டு இந்த ஆலயம் ‘இணைப் பேராலயம்’ நிலைக்கு உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் திருவிழாவில் நாடு முழுவதிலுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் சுமார் 30 லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.
- திரு