

நிரந்தரம் என்று எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாது. மாற்றத்துக்கு உட்பட்டதே நம் வாழ்க்கை. நிலையென நாம் நினைக்கும் அனைத்தும் தலைகீழாக மாறுவதற்கு ஒரு நொடி போதும். இந்தச் சூழலில்தான் இரவில் தூங்கும் நாம் காலையில் கண் விழிப்போம் என்று நம்புகிறோம்.
நாளை என்ன செய்ய வேண்டும் என்று மட்டுமல்லாமல், இன்னும் சில பல ஆண்டுகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதையும் சேர்த்துத் திட்டமிடுகிறோம். நிரந்தரமில்லை என்று தெரிந்தும் நிச்சயமில்லை என்பதை உணர்ந்தும் நாம் திட்டமிடுகிறோம். காரணம், எல்லாம் வல்ல இறைவன் நம்முடன் இருக்கிறான் என்கிற தைரியம். நம் நலனை அவன் காப்பான் எனும் நம்பிக்கை.
நம்பிக்கை இல்லையென்றால் நம்மால் ஒருநொடிகூட நிம்மதியாக வாழ முடியாது. இதனால்தான், இஸ்லாம் நம்பிக்கையை அதன் அடிப்படையாகக் கொண்டுள்ளது. இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொள்பவர்களிடம் அது கேட்பது நம்பிக்கை என்கிற ஒன்றை மட்டும்தான்.
இஸ்லாத்தைப் பொறுத்தவரை நம்பிக்கை யின்மைக்கு இடமில்லை. சந்தேகத்துக்கு இடமற்ற இறை நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே இஸ்லாமியர்களாகக் கருதப்படுவார்கள். நம் வாழ்க்கையை மேம்படுத்தி, நல்வழிப்படுத்தும் நோக்கில், இஸ்லாம் ஆறு நம்பிக்கைகளை (ஈமான்) வலியுறுத்துகிறது. அந்த நம்பிக்கைகளை அப்படியே ஏற்றுக்கொள்வது இஸ்லாமியர்களின் அடிப்படை கடமையும்கூட.
இறைவனை நம்புதல்
இறைவன் ஒருவனே, அவனே அல்லாஹ், அவனைத் தவிர வேறு கடவுள் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கை. படைத்துப் பரிபாலிக்கும் ஆற்றல் இறைவனுக்குரியது. அவனுக்கு நிகராகவோ, துணையாகவோ யாரும் இல்லை. இது இஸ்லாம் வலியுறுத்தும் நம்பிக்கைகளில் முதன்மையானது; முக்கியமானது.
வானவர்களை நம்புதல்
வானவர்கள் அரபி மொழியில் ‘மலக்குகள்’ என்று அழைக்கப்படு கின்றனர். இவர்கள் ஒளியினால் படைக்கப் பட்டவர்கள். ஆசாபாசங்களுக்கு அப்பாற் பட்டவர்கள். இறைவனை வணங்குதல், துதி செய்தல், இறை கட்டளையை ஏற்றுப் பணி செய்தல் போன்றவையே இவர்களின் வேலை.
இந்த மலக்குகளின் தலைவராக ஜிப்ரீல் (அலை) இருக்கிறார். இறைவனிடம் இருந்து இறைத் தூதர்களுக்கு இறைச் செய்தியைக் கொண்டுவந்து சேர்ப்பவர் இவரே. மீக்காஈல் (அலை) எனும் வானவர் மழை, காற்று உள்ளிட்ட இயற்கைக்குப் பொறுப்பாளராக இருக்கிறார். நமக்கு உணவு வழங்குவதும் அவருடைய பொறுப்பே. ரகீப், அதீத் (அலை) எனும் இரு வானவர்கள், ஒவ்வொரு மனிதனின் வலது, இடது தோள்பட்டையில் இருந்துகொண்டு அவர்களது நன்மை தீமைகளைப் பதிவுசெய்கிறார்கள்.
வேதங்களை நம்புதல்
அல்லாஹ்வினால் வேறுபட்ட கால கட்டங்களில் வேறுபட்ட நபிமார்களுக்கு தவ்ராத், ஸபூர், இன்ஜீல், அல் குர்ஆன் என நான்கு வேதங்கள் அருளப்பட்டன.
மூஸா நபிகளுக்கு ஹீப்ரு மொழியில் தவ்ராத் வேதம் அருளப்பட்டது. தாவூத் நபிகளுக்குக் கிரேக்க மொழியில் ஸபூர் வேதம் அருளப்பட்டது. ஈஸா நபிகளுக்கு சிரிய மொழியில் இன்ஜீல் வேதம் (பைபிள்) அருளப்பட்டது. முகமது நபிகளுக்கு (ஸல்) அரபி மொழியில் அல் குர்ஆன் அருளப்பட்டது.
இறுதியாக அருளப்பட்ட அல் குர்ஆனைத் தவிர மற்ற அனைத்து வேதங்களும் தற்போது இல்லை. அவை அவற்றின் சொற்களிலும் அசல் கருத்துக்களிலும் பல மனித கையாடல்களினால் மாற்றமடைந்து விட்டன. இறுதி வேதமாகிய அல் குர்ஆன் மட்டுமே அதன் அசல் வடிவத்தில் தற்போதும் காணக்கிடைக்கிறது.
இறைத் தூதர்களை (நபிமார்களை) நம்புதல்
இறைவனால் வெவ்வேறு காலகட்டங்களில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு சமுதாய மக்களுக்கு என 1,24,000 இறைத்தூதர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
இறைவன் ஒருவனே, அவனை மட்டும் வணங்குங்கள், நல்லதைச் செய்யுங்கள், தீயவற்றைத் தவிருங்கள் என்பது உள்ளிட்ட இறைக்கட்டளைகளை இந்த இறைத்தூதர்களே மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்த்தனர். மக்களை நல்வழிப்படுத்தி, மேன்மையின் பக்கம் நடத்திச் சென்றதும் அவர்களே.
ஒவ்வொரு நபிமார்களும் அவரவர் களின் சமுதாயத்திற்கு என அனுப்பி வைக்கப்பட்டனர். இறுதி நபியாகிய முகமது நபி (ஸல்) மட்டுமே முழு உலகுக்கும் இறைத்தூதராக அனுப்பி வைக்கப்பட்டார்.
இறுதி நாளை நம்புதல்
இதன்படி, இவ்வுலகை ஒருநாள் இறைவன் அழிப்பான்; அப்போது அனைவருக்கும் மரணம் ஏற்படும். அந்த அழிவிற்குப் பின்னர் மீண்டும் அனைவருக்கும் உயிர் கொடுக்கப்படும்; உயிர்பெறும் அவர்கள் மறுமையில் எழுப்பப்படுவர். அங்கே அவர்களிடம் கேள்விக் கணக்கு கேட்கப்பட்டு, அவரவர் நிலைக்கு ஏற்ப சொர்க்கத்துக்கோ நரகத்துக்கோ அனுப்பப்படுவர். இந்த இறுதி நாளில் நம்பிக்கைகொள்வது இஸ்லாமியர்கள் அனைவருக்கும் கடமையாக உள்ளது.
இறை விதியை நம்புதல்
இறைவனின் நாட்டப்படியே நன்மைகளும் தீமைகளும் நடக்கின்றன; இறைவனுக்குத் தெரியாமல் இங்கே எதுவும் நடப்பதில்லை என்பதே இறைவிதி. இதை நம்புவதும் இஸ்லாமியர்களுக்குக் கடமையாக உள்ளது.
நாமே பொறுப்பாளி
இறைவனின் திட்டப்படியே நம் வாழ்வில் எல்லாம் நடக்கின்றன. இருப்பினும், நன்மை, தீமை ஆகிய இரண்டில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துப் பின்பற்றி நடக்கும் சுதந்திரம் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாம் செய்யும் செயற்பாடுகளுக்கு நாமே பொறுப்பாளி. நாம் சரியானதைத் தேர்ந்தெடுக்கவும், செயல்பாடுகளைச் சீர்படுத்தவும், முக்கியமாக நம்மை மேம்படுத்தவும் இஸ்லாம் வலியுறுத்தும் இந்த ஆறு நம்பிக்கைகள் உதவும்.