

வித்தியாசமான கோலத்தில் காணப்படும் இந்த தட்சிணாமூர்த்தியின் சிற்பம், புதுக்கோட்டையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் திருவேங்கைவாசல் என்கிற ஊரில் உள்ளது.
காமதேனு பசு, சாப விமோசனம் பெறுவதற்காகக் கங்கை நீரை கொண்டுவந்து அனுதினமும் ஈஸ்வர பூஜை செய்து வந்தது. அதன் பக்தியை உலகறியச் செய்ய மகாதேவர் வேங்கை வடிவில் பசுவை வழிமறித்த தலமே திருவேங்கைவாசல்.
‘வேங்கைவாசல்’ என்கிற சொல்லே தலப் பெருமையை விளக்கப் போதுமானது. இறைவன் பெயர் வியாக்ரபுரீஸ்வரர் என்கிற திருவேங்கைநாதர் ஆகும். இவர் சிறிய லிங்க வடிவில் அருள்புரிகிறார். அர்ச்சகர் காட்டும் தீபாராதனை ஒளியில் கூர்ந்து பார்த்தால், லிங்கத் திருமேனியில் வேங்கையின் வடிவம் தெரிகிறது. மேல் பகுதியில் இரண்டு வட்டக் கண்களையும், ஆக்ரோஷத்துடன் திறந்துள்ள வேங்கையின் வாய்ப் பகுதியையும் கண்டு ஆனந்திக்கலாம்.
ஆலயத்தின் தெற்கு கோஷ்டத்தில் இந்த அரிய நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய வித்தியாசமான ஞான தட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கலாம். முகத்தில் சாந்தமும், மெல்லிய புன்னகையுமாக இடபுறப் பாதம் மடித்து அமர்ந்த நிலையிலும் பீடத்தில் அமர்ந்து முயலகன் முதுகின் மீது வலப்புறப் பாதத்தை வைத்தபடி உள்ளார். இந்த அமைப்பை ‘நின்று அமர் நிலை’ என்கிறார்கள். இதற்கு ‘உத்குலிக ஆசன நிலை’ என்று பெயர். இப்படி அமர்ந்த கோலத்தை அர்த்தநாரீஸ்வரர் கோலம் என்றும் கூறுகிறார்கள்.
நான்கு கரங்களில், வலது மேல் கரத்தில் அட்ச மாலையும், கீழ்க் கரம் சின்முத்திரையையும், இடது மேல் கரத்தில் நாகமும், கீழ்க் கரம் இடது தொடை மீது வைத்தபடி கீழ் நோக்கித் தொங்கவிட்டிருக்கும் பாங்கு வெகு அழகு. கையில் ஏடு இல்லாமல் இருப்பது அதிசயம்.
தலையில் அழகிய ஜோதி வடிவிலான அணிகலனும் ஜடாமுடி இருபுறமும் பரந்து விரிந்து, சுருள் சுருளாகக் காணப்படுகிறது. இடதுபுற ஜடாமுடியில் பிறை நிலவு அணிசெய்கிறது. தலைக்கு மேல் ஆல மரம், கிளைகளுடனும் இலைகளுடனும் தனித்துவமாகக் காட்டப்பட்டிருப்பது சிறப்பு.
வலது காதில் மகர குண்டலமும், இடது காதில் பெண்மைக்குரிய குழையும் அணிந்துள்ளார். காதோரங்களில் முத்துமணிகள் அலங்கரிக்கின்றன. வலது பக்கக் காதோரம் ஒரு நாகம் எட்டிப் பார்க்கிறது. கழுத்திலும் மார்பிலும் கைகளிலும் தோள்களிலும் முத்து மணியாரங்களும் சிறப்பாக, நுட்பமான வேலைப்பாடுகளுடன் இருப்பது சிறப்பு.
முப்புரிநூல் புதுமையாக உள்ளது. வலது காலில் ஈசனுக்கே உரிய வீர கண்டையும் தண்டையும் சிலம்பும் அணிந்துள்ளார். தோள்வளைகளும் தண்டைகளும் வித்தியாசமாகக் கொடிபோன்ற பூ வேலைப்பாடுகளுடன் வேறு எங்கும் காண முடியாதபடி அற்புதமாக உள்ளன. இடையில் தொங்கும் ஆடையில் பெண்மையின் அமைப்பைக் காட்ட மணிகளுடன் கோத்துத் தொங்குவது தனி அழகோ அழகு.
இந்த ஆலயத்தில் நவகிரகங்களுக்குப் பதில் அந்த இடத்தில் ஒன்பது விநாயகர்கள் அமர்ந்திருப்பது புதுமை. வேலும் மயிலும் இல்லாமல் தவக்கோலத்தில் முருகன் அமர்ந்துள்ள காட்சி அரிதான ஒன்றாகும். இந்தக் கோயில், முதலாம் ராஜராஜன் காலத்தில் கட்டப்பட்டு, பின் பாண்டியர்களால் திருப்பணி செய்யப்பட்ட திருக்கோயில் ஆகும்.