

கருணாமிர்த சாகரம்: சுருக்கத் திறனாய்வு உரை; அமுதா பாண்டியன்; வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், சென்னை. தொடர்புக்கு: 9382853646.
பன்முக ஆளுமையான ஆபிரகாம் பண்டிதர் இசை உலகுக்கு அளித்திருக்கும் கொடை கருணாமிர்த சாகரம் இசை நூல். இந்த நூலில் இடம்பெற்றிருக்கும் இசையியலை அழகியல் பார்வையோடு ஆழமாக அலசி ஆராய்ந்து நூலாசிரியரும் ஆபிரகாம் பண்டிதரின் வழித்தோன்றல்களில் ஒருவருமான அமுதா பாண்டியன் இந்தத் திறனாய்வு நூலைப் படைத்துள்ளார்.
தமிழிசையே தற்போது வழக்கத்திலிருக்கும் கர்னாடக இசைக்கு ஆதாரமானது என்பதை தகுந்த ஆதாரங்களுடன் விளக்குவதற்காக ஆபிரகாம் பண்டிதரால் நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் நூல் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்த மொழி நடையோடும் இசை ஒழுங்கோடும் எழுதப்பட்டிருந்தது.
தமிழிலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாலேயே அந்த நூலைப் படித்து அதன் பொருளைப் புரிந்துகொள்ள முடியும். மொழியிலும் இசையிலும் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் போதாமைகளாலேயே கருணாமிர்த சாகரத்தை படிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த திறனாய்வு உரை நூல் கருணாமிர்த சாகரத்தின் கருத்துகளை எளிய நடையில் கொண்டுசேர்க்கிறது.
ஆய்ச்சியர் குரவை பாடும் முறையை மரபு வழியில் அதைப் பாடும் வள்ளுவர் இனத்தாரிடமிருந்து அறிந்து, அதை இந்த நூலில் ஆவணப்படுத்தியிருப்பது சிறப்பு. இந்தத் திறனாய்வு நூல், நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டு கருணாமிர்த சாகரம் நூலை ஆராய்கிறது. முதல் பாகத்தில் தமிழிசையின் பெருமைகளையும் சங்கம் வைத்து தமிழை வளர்த்த சிறப்புகளையும் இந்திய இசைக்கு ஆதாரமாக தமிழிசை விளங்குவதையும் விளக்குகிறது.
இரண்டாவது பாகத்தில், இசை அலகுகள் 22 அல்ல, 24 என சிலப்பதிகாரத்தின் துணைகொண்டு ஆபிரகாம் பண்டிதர் நிறுவுவது பதிவாகியிருக்கிறது. மூன்றாவது பாகத்தில் சிலப்பதிகாரத்தின் இசை, நடனத்தைப் பற்றிய நுணுக்கங்கள் பற்றிய விளக்கங்கள் உள்ளன. நான்காம் பாகத்தில் வீணையையும் மனித உடலையும் ஒப்பிட்டு இசை அலகுகள் 24 என்றிருப்பதை விளக்குகிறது.
கடலளவு கருத்துகள்
ஆபிரகாம் பண்டிதர் வாழ்க்கை வரலாறு; து.ஆ.தனபாண்டியன்; வெளியீடு: மலர் புக்ஸ், சென்னை. தொடர்புக்கு: 8825767500.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இசைப் பேராசிரியரும் ஆபிரகாம் பண்டிதரின் பேரனுமான தனபாண்டியன் தனது தாத்தா ஆபிரகாம் பண்டிதரின் வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக, ஆனால் திருத்தமாக இந்த நூலில் எழுதியிருப்பது சிறப்பு. ஆபிரகாம் பண்டிதரின் இளமைப் பருவம், அவரின் திருமண வாழ்வு, மருத்துவர் பணியில் அவரின் சாதனைகள், இசைத் தமிழ்ப் பாடல்களைப் புனைந்த விதம், இசை ஆராய்ச்சி, அருள்மறைகள் குறித்த ஆபிரகாம் பண்டிதரின் ஆராய்ச்சிகள் போன்ற பலவும் இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன. நூலின் அளவு கடுகாக இருந்தாலும் கடலளவு கருத்துகள் பொதிந்துள்ளன.
(ஆபிரகாம் பண்டிதர் 163ஆவது பிறந்த நாள்: ஆக.2)