

பிரச்சினைகளும் சங்கடங்களும் இல்லாமல் இருக்கும் வரை கடவுளை நினைக்காத மனம், அவை சூழ்ந்து கொண்டதும் அவரை அவதூறு செய்ய முயல்கிறது. பலர் உடலளவிலும் மனத்தளவிலும் தளர்ந்துவிடுகிறார்கள்; வேறு பலர் முற்றாக நம்பிக்கை இழந்துவிடுகிறார்கள்.
அதிலிருந்து விரக்தியும் கவலையும் பிறக்கின்றன. அவற்றிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக்கொள்ளப் பலரும் குடிக்கிறார்கள். சிலர் போதை வஸ்துக்களை நாடுகிறார்கள். இன்னும் சிலர் வாழ்வதைவிட அதை முடித்துக்கொள்வது மேல் என்று கோழைத்தனமாகச் சிந்திக்கிறார்கள்.
பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் பிறகு எப்படித்தான் அணுகுவது? இந்த இடத்தில்தான் புனித விவிலியம் வழிகாட்டுகிறது. இன்றைக்கு நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அனுபவிக்கிற கஷ்டங்களும் இப்படியே தொடரும் என்று சொல்லிவிட முடியாது. வாழ்க்கை நல்லமுறையில் மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அப்படியும் சூழ்நிலை மாறவில்லை என்றால், அவற்றை சமாளிக்க நிச்சயமாக வழிகள் இருக்கும்.
அதைத்தான் விவிலியம் எடுத்துக் காட்டுகிறது: “நாளைக்காக ஒருபோதும் கவலைப்படாதீர்கள். நாளைக்கு நாளைய தினத்துக்கான கவலைகள் இருக்கும். அந்தந்த நாளுக்கு அதனதன் பாடுகள் போதும்” என்று இறைமகன் இயேசு மக்கள் மத்தியில் பிரசங்கித்ததை அவருடைய சீடரான புனித மத்தேயு தன்னுடைய நற்செய்தி நூலின் 6வது அத்தியாயம் 34வது வசனத்தில் எடுத்துக்காட்டுகிறார். இயேசுவின் இந்த வழிகாட்டுதலில் ஒளிந்தி ருக்கும் ஒரு செய்தியைப் பாருங்கள்.
நாளைய தினத்தைப் பற்றி அதிகமாகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், இன்றைக்குச் செய்யவேண்டிய வேலைகளையும் நிகழ்காலத்துக்கான கடமைகளையும் நம்மால் சரிவர நிறை வேற்ற முடியாது என்கிற செய்திதான் அது.
அதைத்தான் நீதிமொழிகள் புத்தகம் அதிகாரம் 15 வசனம் 15: “கவலையில் தவிப்பவனுக்கு எல்லா நாட்களும் திண்டாட்டம்தான். மாறாக, இதயத்தில் சந்தோஷமாக இருப்பவனுக்கு எப்போதும் விருந்துக் கொண்டாட்டம்தான்” என்கிறது. இதற்குள் இருக்கிற மறைபொருள் என்ன? நம் முன்னால் இருக்கும் பிரச்சினையைப் பார்த்துப் பயந்து அரண்டால், அந்தப் பிரச்சினைக்கு நம் கண் முன்னால் இருக்கிற தீர்வு தெரியாமல் போய்விடலாம்.
கவலையையும் பதற்றத்தையும் விடுத்து, நம்பிக்கையை நிரப்பிக்கொண்டால், பிரச்சினையை வெற்றிகரமாக சமாளிப்பது எப்படி என மனம் யோசிக்கும். அப்போது தெளிந்த நீரூற்றுபோல் பிரச்சினைகளை சமாளிப்பதற்கான தீர்வுகள் பெருக்கெடுத்து வரும். அப்படியானால் உங்களது மனத்தை வலிமையாக வைத்துக்கொள்ளுங்கள். அது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள்?
முதலில் இந்த உலகத்தில் நீங்கள் தனித்து விடப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். உங்களைச் சுற்றி, நண்பர்களும் உறவினர்களும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இறைவன் அவர்களின் வழியாக உதவியைக் கொண்டுவந்து சேர்ப்பார் என்பதை மறக்காதீர்கள். பிரச்சினைகளின்போது உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வது தீர்வாகாது என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நீதிமொழிகள் புத்தகம் 18வது அதிகாரம், முதலாவது வசனத்தைப் பாருங்கள்: “தன்னைத் தனிமைப்படுத்து கிறவன் எல்லா ஞானத்தையும் ஒதுக்கித் தள்ளுகிறான்”. எவ்வளவு உண்மையான வார்த்தைகள்.
புதைமணலில் சிக்கிக்கொண்ட ஒருவரால் தானாகவே வெளியே வர முடியாது. மற்றொருவர் கைகொடுத்து உதவினால் வெளியேறிவிட முடியும்.
அப்படியிருக்கும்போது, உறவினர் களிடமும் நண்பர்களிடமும் தயங்காமல் உதவும்படி கேளுங்கள். உங்களுக்கு உதவவேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துங்கள். உதவி நிச்சயமாகக் கிடைக்கும். உங்களுக்காக அவர்களுடைய கரம் நீளும். உதவிகளை ஏற்றுக்கொள்வது இழிவானதென்று கருதாதீர்கள்.
சங்கீதம் புத்தகத்தில் (119:105) கவிஞர் ஒருவர் இறைவனிடம் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய வார்த்தை என் கால்களுக்கு விளக்காகவும், என் பாதைக்கு வெளிச்சமாகவும் இருக்கிறது”. வெளிச்சத்தில் நடந்து செல்லுங்கள். பாதை புலப்படும்.
தொகுப்பு: ஜெயந்தன்