

தேவி திரௌபதி சொல்வாள் - `ஓம்
தேவிபராசக்தி ஆணை யுரைத்தேன்;
பாவி துச்சாதனன் செந்நீர் - அந்தப்
பாழ்த்துரியோதனன் ஆக்கை இரத்தம்
மேவி இரண்டுங் கலந்து - குழல்
மீதினிற் பூசி நறுநெய் குளித்தே
சீவிக் குழல் முடிப்பேன் யான் - இது
செய்யுமுன்னே முடியேனென்றுரைத்தாள்.
மகாகவி பாரதியார் தன்னுடைய `பாஞ்சாலி சபதத்தை' இப்படி முடித்திருப்பார். இந்தப் பாஞ்சாலி சபதத்தை இறுதிப் பகுதியாக வைத்துக்கொண்டு திரௌபதி என்னும் இதிகாச வரலாற்று நாடகத்தை எழுதி, இயக்கி கோமல் தியேட்டர்ஸ் சார்பாக நடத்தவுள்ளார் தாரிணி கோமல்.
திரௌபதி நாடகம் ஆகஸ்ட் 26, 27, 28 ஆகிய நாட்களில், சென்னை, ஆழ்வார்பேட்டையிலிருக்கும் நாரத கான சபையில் அரங்கேறவிருக்கிறது. இதற்கு முன்னோட்டமாக திரௌபதி நாடகத்தின் இசை வெளியீடு, நாடக வரலாற்றிலேயே முதன்முறையாக வாணி மகால் அரங்கில் அண்மையில் நிகழ்ந்தது.
மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதத்திலிருக்கும் பாடல்களுக்கும் நாடக வடிவத்துக்காக கவிஞர் சதீஷ்குமாரின் பாடல்களுக்கும் மகாகவியின் கொள்ளுப்பேரன் ராஜ்குமார் பாரதி இசையமைத்திருப்பது இசை வெளியீட்டை நெகிழ்ச்சியான தருணமாக்கியது.
“மகாபாரதத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம் திரௌபதி. பாரதியின் பாஞ்சாலி சபதத்தை மேடையேற்ற வேண்டும் என்பது எனது வெகு நாளைய கனவு.
துவாபர யுகத்தில் ஒரு பெண் சூழ்நிலைகளால் அலைக்கழிக்கப்பட்டு வஞ்சிக்கப்பட்டிருக்கிறாள், ஆட்சி உரிமை, அதிகாரப் போட்டி, ஆண்களின் அகங்காரம் இவற்றுக்கிடையே பகடைக்காயாக்கப்பட்டிருக்கிறாள், அவற்றை எதிர்கொண்டு எப்படி வெற்றி பெற்றாள் என்பதைச் சொல்வதுதான் நோக்கம்.
வியாச பாரதம், வில்லி பாரதம், மகாகவியின் பாஞ்சாலி சபதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதுதான் இந்த திரௌபதி நாடகம். அதோடு திரௌபதியின் கோணத்தில் எழுதப்பட்டுள்ள பல ஆங்கில நாவல்களையும் படித்த பின்பே இந்த நாடகத்தை எழுதியுள்ளேன்.
பாஞ்சாலி சபதம் என்பதன் பின்னணியை, பல கோணங்களை ஒரு பெண்ணின் போராட்டத்தை விரிவாகக் காட்ட வேண்டியே இந்த நாடகத்தை எழுதியிருக்கிறேன்” என்கிறார் நாடகமாக்கம், இயக்கம் ஆகிய பொறுப்புகளை ஏற்றிருக்கும் தாரிணி கோமல்.
“மகாகவி பாரதியின் பாடல்களுக்கு இசையமைத்தது மிகவும் பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. நாடகத்துக்கான இசையை அமைத்தது பெரும் சவாலாக இருந்தது.
`திரௌபதி' என்று தொடங்கும் நாடகத்தின் தொடக்கப் பாடலை தர்மவதி ராகத்தில் அமைத்தேன். வேள்வித் தீயில் பிறந்தவளே என்னும் பாடலை ரசிகப்ரியா ராகத்தில் அமைத்திருக்கிறேன். `வழிநெடுக' என்னும் மகாகவியின் பாடலை சந்திரஜோதி என்னும் ராகத்தில் அமைத்தேன்" என்றார் ராஜ்குமார் பாரதி.
`திரௌபதி இவள் திரௌபதி, தர்மமே இவள் தாய்மொழி', `வேள்வித் தீயில் எழுந்தவளே ஒரு கேள்விக் கணையாய் நிமிர்ந்தவளே' என்னும் இரு பாடல்களையும் நாடகத்துக்கான வசனத்தையும் முழுமையாக எழுதியிருக்கும் கவிஞர் எஸ்.சதீஷ்குமார், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.
இசைக்கவி ரமணன், ‘அமுதசுரபி’ ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், எஸ்.வி.சேகர், இளங்கோ குமணன், இசைக் கலைஞர் சிக்கில் குருசரண் ஆகியோர் `திரௌபதி' நாடகத்தில் நடிக்கும் கலைஞர்களையும் நாடகத்தில் இடம்பெற்றிருக்கும் இசைப் பாடல்களையும் வாழ்த்திப் பேசியது நாடக வரலாற்றில் முக்கியமான தருணம்.