

பிறந்தாலே முக்தி தரும் இடம் திருவாரூர். இந்த மாவட்டத்தில் நீடாமங்கலம் ஊரில் அர்ச்சாவதார சிறப்போடு ஸ்ரீ ராமன், சந்தான ராமராக சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயரோடு அருள்பாலிக்கிறார்.
பக்தர்களின் புத்திர பாக்கிய கோரிக்கைக்குச் செவிமடுத்து அவர்களுக்கு குழந்தை பாக்கியத்தை அளிப்பதால் சந்தான ராமர் என்னும் திருப்பெயரோடு விளங்குகிறார்.
தஞ்சையை ஆட்சிசெய்த மராட்டிய மன்னர்களில் ஒருவரான பிரதாப சிம்ம மகாராஜாவுக்கு (1739 - 1780) புத்திர சந்தானம் இல்லை. அவர் தனது குலதெய்வமான யமுனாம்பாளை பிரார்த்தனை செய்தார்.
ராஜாவின் கனவில் தோன்றிய யமுனாம்பாள், “நீடாமங்கலத்தில் சந்தான ராமர் கோயிலை நிறுவி, தான தர்மங்கள் செய்தால் உனக்குக் குழந்தைப்பேறு கிடைக்கும்” என்றார்.
இதற்காக பிரதாப சிம்ம ராஜா சந்தான ராமர் கோயிலை நிறுவி, அதில் ஸ்ரீ சந்தான ராமருடன், சீதாபிராட்டி, லட்சுமணர், ஆஞ்சநேயர், கருடர், விஷ்வக் ஷேனர், விநாயகர் ஆகியோரின் திருவுருவங்களை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்தினார். அதோடு இந்தக் கோயிலை நிர்வகிக்க 150 வேலி நிலத்தைத் தானமாகவும் பிரதாப சிம்ம ராஜா வழங்கியுள்ளார். அதன் பின்னர் பிரதாப சிம்ம ராஜாவுக்குக் குழந்தை வரம் கிடைத்தது. இது இத்தல வரலாறு ஆகும்.
அயோத்திக்கு நிகரான தீர்த்தம்
குழந்தை வரம் வேண்டுபவர்கள் இன்றளவும் இந்தக் கோயிலில் ரோகிணி நட்சத்திரத்தன்று புத்திர சந்தான வேள்வி நடத்தி வழிபடுகிறார்கள். இந்த வேள்வியில் ஸ்ரீ கிருஷ்ணர் பிறப்பதற்குக் காரணமாக இருந்த ‘வாசுதேவ புத்திர சதகம்’ என்ற நூலில் உள்ள மூல மந்திரங்கள் ஜெபிக்கப்பட்டு ஹோமங்கள் நடத்தப்படுவது வழக்கமான நடைமுறையாகும்.
இந்த சந்தான ராமர் ஆலயத்துக்கு முத்துசாமி தீட்சிதர் வந்து ராமனின் அருளைப் பெற்று, ஹிந்தோள வசந்த ராகத்தில் ‘சந்தான ராமஸ்வாமினம் ஸத்குண நிர்குண பஜரே’ என்னும் கீர்த்தனையைப் பாடியுள்ளார். சந்தான ராமர் கோயிலின் எதிரில் அழகிய திருக்குளம் ஒன்றையும் நிறுவி, சாகேத தீர்த்தம் எனப் பெயரிட்டுள்ளனர். அயோத்திக்கு நிகரான தீர்த்தம் என இதை ஆன்மிகப் பெரியோர்கள் கூறுகின்றனர்.
நடுநாயகமாக சந்தான ராமர்
ஊருக்கு நடுவில் ஸ்ரீ சந்தான ராமசாமி கோயில் அமைந்துள்ளது. மற்ற கோயில்கள் அனைத்தும் இந்தக் கோயிலைச் சுற்றி அமைந்துள்ளன. இந்தக் கோயிலுக்கு மாலை அணிவித்து அழகு சேர்ப்பதுபோல இருபுறமும் வெண்ணாறு, கோரையாறு ஆகிய இரண்டு ஆறுகள் ஓடுவது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும்.
இந்தக் கோயிலுக்கு எதிரே சாகேத புஷ்கரணி என்கிற தெப்பக்குளம் ஒன்று உள்ளது. அதையொட்டி தேர் நிலை அமைந்துள்ளது.
மூன்று கண்களை உடைய கோபுர வாயில் உள்பிரகாரத்தின் கிழக்கில் கொடிமரம், தென்கிழக்கில் மடப்பள்ளி, வடகிழக்கில் யாகசாலை ஆகிய அமைப்புகள் உள்ளன.
மேற்கில் உள்ள சந்நிதியில் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், உடையவர், மந்தி காமந்த மகா தேசிகன் ஆகியோர் எழுந்தருளி இருக்கிறார்கள். அதற்கு அருகில் வாகன மண்டபம், கச்சேரி மண்டபம் உள்ளது. அதற்கு தெற்கிலும் கிழக்கிலும் வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலுக்குத் தெற்கு நோக்கிய அனுமார் மேலும் சிறப்பு சேர்க்கிறார்.
இந்தக் கோயிலுக்குக் கடந்த 1924ஆம் ஆண்டு சம்ப்ரோக்ஷணம் நடந்துள்ளது. பின்னர் 1956இல் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு அப்போதைய இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால சுவாமி முன்னின்று 8.12.2006 அன்று மகா சம்ப்ரோக்ஷணத்தை நடத்தியுள்ளார்.
அதைத் தொடர்ந்து தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்றுவருகின்றன. வருகிற ஆவணி மாதத்தில் (ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில்) கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
குழந்தை வரம் வேண்டி வருபவர்களுக்குப் புத்திர பாக்கியத்தைத் தரும் சந்தான ராமர், பக்தர்களின் சந்ததிகள் நலம் பெறவும் வளம் பெறவும் அருள்வார் என்கிற நம்பிக்கையும் இந்தப் பகுதி மக்களிடம் உள்ளது.
| (திருப்பணியில் பங்கேற்கவும், மேலும் தகவல்களை பெறவும் விரும்புவோர் 9488109428, 9842294208, 9444854208 ஆகிய செல்போன்களில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். அல்லது திருப்பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், ‘Indian Bank Account Number- 7203582953, Needamangalam Branch, IFSC Code-IDIB000N028’ என்ற வங்கிக் கணக்குக்கும் அனுப்பலாம் எனக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.) |