தூரிகையில் மகாபாரத கதாபாத்திரங்கள்

குந்தி
குந்தி
Updated on
2 min read

மகாபாரதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது துரியோதனின் மண்ணாசை, பங்காளிச் சண்டை, சகுனியின் சூழ்ச்சி, கர்ணனின் கொடை, துரியோதனன் - கர்ணன் இடையிலான நட்பு, பாஞ்சாலியின் சபதம், நியாயத்தின் பக்கம் நின்று வெற்றிக்குப் போராடும் பாண்டவர்களுக்குக் கிடைக்கும் தன்னலமற்ற கிருஷ்ணனின் உதவி ஆகியவை.

இந்த உணர்வுகளை வெளிப்படுத்தும் மகாபாரதப் பாத்திரங்களின் ஓவியங்களை மட்டுமே கடந்த இரண்டு ஆண்டு களாக வரைந்திருக்கிறார் ஓவியர் சுவபிரசன்னா.

கரோனா பேரிடர் காலத்தில் மகாபாரதப் பாத்திரங்களின் முக பாவனைகளுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் இந்த ஓவியங்களை வரைந்ததாகக் கூறுகிறார் சுவபிரசன்னா. அதனாலேயே இந்த ஓவியக் கண்காட்சிக்கு ‘ஃபேசஸ்: எ ரேஸ் ஃப்ரம் எபிக்’ என்னும் தலைப்பு வெகு இயல் பாகப் பொருந்திப்போகிறது.

கொல்கத்தாவில் 1947இல் பிறந்தவர் சுவபிரசன்னா. 60 ஆண்டு காலம் ஓவியத் துறையில் அரூபம், யதார்த்தம், நவீனம் எனப் பல பாணி ஓவியங்கள் வரைவதில் தன் நிபுணத்துவத்தை வளர்த்துக்கொண்டவர்.

“நான் குழந்தையாக இருந்தபோது என் அம்மா சொல்லும் மகாபாரதக் கதைகளில் ஆழ்ந்துபோவேன். அதன்பின் வங்கமொழியில் பரசுராம் என்பவர் எழுதிய மகாபாரதக் கதைகளைப் படித்தேன். பீட்டர் ப்ரூக்ஸின் மகாபாரதக் கதையும் என்னுடைய இந்த ஓவிய முயற்சிக்கு தூண்டுகோலாக இருந்தது” என்கிறார் சுவபிரசன்னா.

நமக்கு நன்கு அறிமுகமான பஞ்ச பாண்டவர்கள், கௌரவர்களில் மூத்தவரான துரியோதனன், பீஷ்மர், துரோணர், பீமனின் மகன் கடோத்கஜன், திரௌபதி ஆகியோரைத் தவிர, லோமேஷ், தாதிச்சி, சௌதி, கபில், ஹோயக்ரிப் போன்ற அதிகம் கேள்விப்படாத பாத்திரங்களும் இந்தக் கண்காட்சியில் முகம் காட்டியிருக்கின்றனர்.

“எத்தனை எத்தனை பாத்திரங்கள். அவை வெளிப்படுத்தும் சூழ்ச்சி, கருணை, கோபம், வீரம், காதல் உணர்வுகள். மனித வாழ்வில் என்றென்றைக்கும் தொடரும் இந்த உணர்வுகளுக்கும் மகாபாரதப் பாத்திரங்களுக்கும் இடையேயான ஆச்சரியமான ஒற்றுமை எனக்கு இந்தப் பாத்திரங்களை வரைவதற்கு முக்கியமான காரணமாக அமைந்தது.

உதாரணத்துக்கு சகுனியின் இரு மனநிலையை (கௌரவர்களின் ஆலோசகர் என்பது ஒரு முகம், கௌரவர்களையே பழிவாங்கத் துடிக்கும் அவரின் கொடூர குணம்) வரைவதற்கு எனக்கு இரு பாணிகள் தேவைப்பட்டன” என்கிறார் சுவபிரசன்னா.

நவீனமும் மரபும் கைகுலுக்கும் ‘புராணத்தின் முகங்கள்’ என்னும் இந்த ஓவியக் கண்காட்சியை, சென்னை, தேனாம் பேட்டையிலிருக்கும் ‘சரளா ஆர்ட் வேர்ல்ட்’ கூடத்தில் இம்மாதம் 31 வரை காணலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in