திருமயத்தில் அருளும் சிவன், விஷ்ணு குகைக் கோயில்கள்

திருமயத்தில் அருளும் சிவன், விஷ்ணு குகைக் கோயில்கள்
Updated on
3 min read

புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில் 17 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது, திருமயம் என்னும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஊர். திருமெய்யம் என்கிற சொல்லே திருமயம் என இன்றைக்கு மருவி அழைக்கப்படுகிறது.

திருமெய்யம் என்றால் உண்மையின் இருப்பிடம் என்று அர்த்தம். இந்த ஊரின் சிறப்புக்குப் பெருமை சேர்ப்பவை ஊரின் நடு நாயகமாக உள்ள மலைக்கோட்டையும் மலையின் தெற்குச் சரிவில் அருகருகே அமைந்துள்ள சிவன், விஷ்ணு குகைக்கோயில்களும் ஆகும்.

இவை பொ.ஆ.(கி.பி.) 7-8ஆம் நூற்றாண்டில் மிக மிக நுட்பமான கலைச் சிறப்போடு உரு வாக்கப்பட்ட குடைவரைக் கோயில்களாகும். சிவபெருமானுக்கு சத்தியகிரீஸ்வரர் என்பதும் விஷ்ணுவுக்கு சத்தியமூர்த்தி என்பதும் பெயராகும். இந்த விஷ்ணு கோயில் திருமங்கை ஆழ்வாரின் பாடல் பெற்ற தலம் (பெரிய திருமொழி).

திருமயத்தில் குடிகொண்டிருக்கும் சத்தியமூர்த்தித்தலம் வைணவர்களின் முக்கியமான கோயிலாகும். இக்கோயிலே ஆதிரங்கம் என அழைக்கப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலைவிடக் காலத்தால் முந்தையது. தென்பாண்டி மண்டலத்துப் பதினெட்டுப் பதிகளுள் ஒன்று.

கதை சொல்லும் சிற்பங்கள்

விஷ்ணு குகைக்கோயிலில் அவர் அனந்தசயன மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அனந்தசயன மூர்த்தி மலையோடு சேர்ந்து பாறையிலேயே வடிக்கப்பட்டிருக்கிறார். அவர் ஆதிசேஷன் என்கிற ஐந்து தலை அரவத்தின் மீது சயனித்திருக்கிறார். அனந்தசயன மூர்த்திக்குப் பின்னால் உள்ள சுவரில் ஒரு கல்லில் ஒரு கதை நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது.

குகைச் சுவரில் இடமிருந்து வலமாக கருடன், சித்திரகுப்தன், மார்க்கண்டேயன், பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், கின்னரர்கள் ஆகியோரது உருவங்களும் வலது கோடியில் மது, கைத்தபு எனப்படும் இரு அசுரர்கள் கொடூரப் பார்வையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

விஷ்ணுவின் காலடியில் பூதேவி திருவுருவம் வடிக்கப்பட்டுள்ளது. பெருமாளின் மார்பில் தஞ்சம் கொண்டுள்ள திருமகளை அவரது இடதுகை அணைக்க, வலது கை ஆதிசேஷனைத் தட்டிக்கொடுக்கும் பாவனையில் உள்ளது. இவை வெறும் சிற்பங்கள் மட்டுமல்ல.

இதில், உயிரோட்ட முள்ள ஒரு கதையைச் சித்தரித்திருக்கிறார் சிற்பி. தேவியர் அருகில் இருக்க ஏகாந்தமாகப் பள்ளிகொண்டிருக்கிறார் சத்தியமூர்த்திப் பெருமாள். அமரர் கூட்டம் இசைபாடி இன்புற்றிருக்கிறது.

இந்த நேரத்தில் மது, கைத்தபு ஆகிய இரு அரக்கர்களும் திடீரெனப் பாய்ந்து திருமகளையும் நிலமகளையும் தூக்கிச் செல்ல முற்படுகின்றனர். விஷ்ணு பெருமானோ ஆழ்ந்த நித்திரையில் இருக்கிறார். ஆதிசேஷன் விழித்திருந்து அனைத்தையும் கவனித்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ஆதிசேஷன், பெருமாளின் ஆணைக்குக் காத்திராமல் விஷ ஜ்வாலையைக் கக்கி, அசுரர்களை சுட்டெரிக்க முற்பட, அவர்கள் தலைதெறிக்க ஒடுகின்றனர். அச்சம் கொண்ட திருமகள் பெருமாளின் மார்பிலும், நிலமகள் அவரது காலடியிலும் தஞ்சமடைகின்றனர்.

விழித்துக்கொண்ட பெருமாள் நிலைமையைப் புரிந்துகொள்கிறார். ஆதிசேஷனோ பெருமாளின் ஆணையின்றி செயல்பட்டுவிட்டோமே என எண்ணி வருந்தி அஞ்சும்போது, பெருமாள் ஆதிசேஷனைத் தட்டிக்கொடுத்து அவரது செயலுக்கு ஏற்பளித்துப் பாராட்டுகிறார்.

இப்படியாக, மேடையில் நடத்தப்படும் ஒரு நாடகக் காட்சியினை உயிரோட்டத்துடன் இங்கே கல்லிலேயே வடித்திருக்கிறார்கள் சிற்பிகள். இது தமிழர்களின் சிற்பக்கலை மேன்மையை உலகுக்கு உணர்த்தும் அரியதோர் எடுத்துக் காட்டு. இது போன்ற அமைப்பு வேறெங்கும் இல்லை என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

நல்லிணக்கம் காத்த நாட்டாமை கூட்டம்

சத்தியகிரீஸ்வரர் மூலவராக உள்ள சிவன் கோயிலைப் பார்க்கலாம். வரலாற்று ஆவணமான, சுவாரசியமான ஒரு நாட்டாமைக் கூட்டம் பொ.ஆ.1224இல் திருமயம் கோயிலில் நடைபெற்றதற்கான கல்வெட்டைக் காண முடிகிறது. சத்தியகிரீஸ்வரம் என்னும் சிவன் கோயில், குன்றின் தெற்குச் சரிவில் உள்ள குகைக் கோயில் ஆகும்.

மூலவர் லிங்கமாக எழுந்தருளி யுள்ளார். இது கிழக்கு நோக்கி உள்ளது. குகைக் கோயிலின் வாயிலில் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள், குடுமியான் மலைச் சிற்பங்களைப் போல் எழிலானவை. மண்டபத்தின் சுவர்களிலும், மேல் விதானத்திலும் ஓவியங்கள் தீட்டப் பட்டிருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன.

சைவ, வைணவ பக்தர்களுக்கிடையே ஏற்பட்ட பிணக்கும், அதைத் தீர்த்து நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாட்டாமைக் கூட்டம் பற்றிய விவரங்களையும் காணலாம்.

பொ.ஆ.13ஆம் நூற்றாண்டில் இப்பகுதி முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக மக்களிடையே பசி, பஞ்சம், பட்டினி எனக் கஷ்டங்கள் தொடர்ந்தன. ஊரில் சின்னஞ்சிறு சச்சரவுகளும், பிரச்சினைகளும் ஆங்காங்கே தலைதூக்கத் தொடங்கின.

இதன் எதிரொலியாக இந்த இரு கோயில் நித்ய பூசை மற்றும் கைங்கரியங்கள், திருவிழாக்கள் முதலியவையும் நின்றன. இரு கோயில் நிர்வாகத்தினர் இடையே ஏற்பட்ட பிணக்கு குறித்தான தகவல் நாடாண்ட மன்னனின் காதுக்கும் போனது. ஆகவே, சைவ, வைணவ பக்தர்களிடையே மறுபடியும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சமரசம் உண்டாக்க வேண்டிய கட்டாயம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டது. அதன் விளைவாக ஒரு நாட்டாமைக் கூட்டம் மிகுந்த பரபரப்பான சூழலில் திருமயத்தில் கூடியது.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் எட்டாவது ஆட்சி ஆண்டான பொ.ஆ.1224இல் வைகாசி மாதம் 13ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இக்கூட்டம் நடைபெற்றது.

முதலில் திருமயம் மலைப் பகுதியை சைவம், வைணவம் ஆகிய இரு பிரிவினரும் சமமாக அனுபவித்துக்கொள்ள வேண்டியது எனத் தீர்மானிக்கப்பட்டது. திருமயம் மலையில் உள்ள சிவன் கோயிலுக்கும் பெருமாள் கோயிலுக்கும் நடுவே இரண்டையும் பிரிக்கும் வகையில் தடுப்புச்சுவர் ஒன்றை எழுப்ப வேண்டும், இத் திருமதில் கட்டுவதற்கு ஆகும் செலவை ஐந்து பாகங்களாகப் பிரித்து பெருமாள் கோயில் மூன்று பங்கும், சிவன் கோயில் இரண்டு பங்கும் செலுத்த வேண்டும் எனவும் முடிவானது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட இம்முடிவுகளை ஏற்கெனவே மண்டப வடக்குச் சுவரில் உள்ள மொழி அறியா (இசைக்கல்வெட்டு) கல்வெட்டை அழித்துவிட்டு நாட்டாமைக் கூட்ட முடிவுகள் குறித்த தீர்மானக் கல்வெட்டு பெரிய அளவில் பொறிக்கப்பட்டது.

மேலும், சிவன் கோயில் பகுதியில் உள்ள பெருமாள் கோயில் கல்வெட்டுகளைப் படியெடுத்துத் தங்கள் பகுதியில் வெட்டிக் கொள்ள வேண்டும். அதுபோல பெருமாள் கோயில் பகுதியில் உள்ள சிவன் கோயில் கல்வெட்டுகளை அவர்கள் படியெடுத்துத் தங்கள் பகுதியில் வெட்டிக்கொள்ள வேண்டும். இவ்வாறான பல தெளிவான முடிவுகள் நாட்டாமைக் கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கப்பட்டு முடிவுசெய்யப்பட்டன.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்குச் சாட்சியாக கூடலூரு நமசோழ கானநாட்டு வேளாண், குலோத்துங்கச் சோழ வல்லநாட்டு வேளாண், உலகளந்த சோழ கானநாட்டு வேளாண், பெரிய பெருமாள் உட்படப் பல முக்கிய நபர்கள் சாட்சிகளாகக் கையொப்பமிட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து திருமயம் பகுதியில் மனமாச்சரியம் இல்லாத நல்லிணக்கம் நீடித்திருக்க நடந்த நாட்டாமைக் கூட்டம் வழக்கமான நடைமுறைகளோடு நிறைவுபெற்றது.

அன்றைக்கு நாட்டாமைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி கட்டப்பட்ட ஓர் உறுதி யான கருங்கல் தடுப்புச் சுவர் இன்றைக்கும் மாறாத வரலாற்றுச் சான்றாய், கம்பீரமாய் நிற்பதைக் காண முடிகிறது. அக்கால வேளை களில் எடுக்கப்பட்ட முடிவின்படி இன்றைக்கும் சிவன், விஷ்ணு கோயில்களில் எந்தக் கருத்து வேற்றுமையும் பூசல்களும் இன்றி நாளும் பூசை களும், விழாக்களும் வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in