

பாண்டவர்களை வனவாசத்திற்கு அனுப்பிய பிறகும்கூட துரியோதனன் அஸ்தினாபுரத்தில் நிறைவான மகிழ்ச்சியுடன் இருக்கவில்லை. துரியோதனின் மகிழ்ச்சிக்கு சகுனியே வழியும் சொன்னார்.
“கவலைப்படாதே, அதற்கும் வழி இருக்கிறது. பாண்டவர்கள் இப்போது தங்கி இருக்கும் துவைத வனப் பகுதியில் நிறைய இடையர் சேரிகள் உள்ளன.
அங்குள்ள கால்நடைகளைக் கணக்கெடுத்து கண்காணித்து விட்டு வருவதும் அரசப் பணிகளில் ஒன்று. இம்முறை அவற்றை நாமே நேரில் செய்யப் போகிறோம் என்று கூறி விட்டுச் செல்லலாம்” என்று சகுனி யோசனை கூறினார். அதனையே சொல்லி தந்தை திருதராஷ்டிரரிடம் அனுமதியும் பெற்றுவிட்டார் துரியோதனன்.
துரியோதனன், துச்சாதனன், கர்ணன், சகுனி உள்ளிட்ட குழுவினர் தம் சிறுபடை பட்டாளம், பரிவாரங்களுடன் அங்கே சென்று முதலில் இடையர் சேரி கால்நடைக் கணக்கெடுப்பு வேலைகளை முடித்தார்கள். பாண்டவர்கள் தங்கி இருக்கும் இடத்திற்கு அருகாமையில் இருந்த பொய்கை ஒன்றின் கரையில் கூடாரம் அமைத்துத் தங்கத் திட்டமிட்டார்கள்.
அதே இடத்தில் கந்தர்வர்களின் தலைவன் சித்திரசேனனும் தன் படைகளுடன் தங்கி இருந்தான். துரியோதனன் குழுவினர் அங்கே வருவதற்கு அவன் ஆட்சேபம் தெரிவித்தான்.
கோபம் கொண்ட துரியோதனன், சித்திரசேனன் படைப் பிரிவினருடன் போரைத் தொடங்க முயன்றான். கந்தர்வர் படை அந்த நேரத்தில் பெரிதாக இருந்தது. அதோடு சித்திரசேனன் பல மாய அஸ்திரங்களை வைத்திருந்தான். கர்ணன் உள்ளிட்ட எல்லாரையும் துரத்தி விட்டு, துரியோதனனைக் கயிற்றில் கட்டித் தன் தேர்த் தட்டில் போட்டு விட்டான் சித்திரசேனன்.
துரியோதனன் குய்யோ முறையோ என்று கதறியது பாண்டவர்களின் காதுகளில் விழுந்தது. விவரம் அறிய வந்தபோது, பீமனுக்கு ஒரே சந்தோஷம்.
“நாம் செய்ய நினைத்ததை செய்து முடித்த சித்திரசேனனுக்குப் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும்’’ என்று சொன்னான்.
தர்மன் ஒப்புக் கொள்ளவில்லை. “என்ன இருந்தாலும், துரியோதனன் நம் சகோதரன். அவன் கஷ்டத்தில் இருக்கும்போது உதவ வேண்டியது நம் கடமை” என்று கூறி தன் சகோதரர்களைச் சமாதானப்படுத்தி, சிதறி ஓடியிருந்த கௌரவர் படைகளை ஒன்றுதிரட்டி சித்திரசேனனுடன் போருக்குக் கிளம்பினான். தர்மனைப் பார்த்ததும் மனம் மாறிய சித்திரசேனன், துரியோதனனை மன்னித்து அவிழ்த்துவிட்டுத் துரத்தினான்.
கனவில் வைத்த கோரிக்கை
இது நிகழ்ந்து சில நாட்களில் தர்மனுடய கனவில் வனவிலங்குகள் ஒன்று சேர்ந்து வந்து அழுதன: “நீங்கள் இங்கே தங்கி இருந்து வேட்டையாடியதாலும் உங்களை முன்னிட்டு நடந்த போர்ச் சேதங்களாலும் எங்கள் இனம் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
இப்போதைக்கு இனவிருத்தி செய்துகொள்ளத் தேவையான எண்ணிக்கையினரே மிச்சமிருக்கிறோம். நீங்கள் இன்னும் கொஞ்ச காலம் இங்கே தொடர்ந்து இருந்தீர்கள் என்றால் எங்கள் இனவிருத்தி சாத்தியமில்லாமல் போவதோடு நாங்களும் ஒட்டு மொத்தமாக அழிந்து போவோம். அது உங்களுக்குச் சம்மதம் தானா?”
இந்தக் கதறலில் திடுக்கிட்டுக் கண் விழித்த தர்மன் சிந்திக்க ஆரம்பித்தான். சகோதரர்களிடம் சொல்லி உடனடியாக துவைத வனத்தினை விட்டு இடம்பெயர்ந்தான்.
என்னவொரு தீர்க்க தரிசனம்! யுகங்களுக்கு முன் மக்கள் மனத்தில் இருந்த இந்த அக்கறையில் ஓரளவாவது இன்று இருந்திருந்தால் பல பட்சி இனங்களை நாம் இழந்திருப்போமா?
ஐந்து வேள்வி
மகாபாரதத்துக்கும் முந்தைய உபநிஷத காலத்தில் இருந்த இன்னொரு சுற்றுச்சூழல் அறிவுத் தெளிவும் நாம் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்.
வேள்வி அல்லது யக்ஞம் என்கிற வார்த்தையை அந்நியமாக நினைக்கும் போக்கு சரியல்ல.
வேள்விகளின் அடிப்படை மிகவும் எளிமையானது. பிரபஞ்சத்தில் இருந்து நாம் பெற்றதில் ஒரு பகுதியையாவது திருப்பிக் கொடுக்கும் வண்ணம் நமது வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே வேள்வி. மனத்தில் நன்றி அறிதலும், ‘எதுவும் என்னுடையதில்லை; எல்லாம் வெளியிலிருந்து அடுத்தவர் மூலம் பெறப்பட்டவை’ தான் என்கிற தெளிவும் இதன் பக்க விளைவுகள்.
திருப்பிக் கொடுப்பது என்றால் எப்படி? செய்து பார்த்தால் உணர முடியும். பெறுவதும் தருவதும் ஒரே செயலின் வேறு பரிமாணங்கள் தாம் என்று.
ஐந்து வழிகளில் இதனைச் செய்யலாம் என்று நமது உபநிடதங்கள் கூறுகின்றன. அவையே பஞ்சமகா யக்ஞங்கள்:
1. தேவ யக்ஞம்: யாகம், பூஜை முதலானவை. இறைவனிடம் பெற்றதை இதன் மூலம் அவனுக்கே திருப்பிக் கொடுப்பது.
2. ரிஷி யக்ஞம்: சாத்திரங்களைப் படித்தல், படித்ததைக் கற்பித்தல். குருவிடம் பெற்ற அறிவைச் சரியான வழியில் செலவிட்டு அதன் மூலம் திருப்பிக் கொடுத்தல்.
3. பித்ரு யக்ஞம்: பெற்றோருக்கான கடமைகளைச் செய்தல். முன்னோர் பெருமையை நிலைநாட்டும் வண்ணம் வாழ்தல். இதன் மூலம் பெற்றோரும் முன்னோரும் நமக்கு அளித்த சிறப்புகளைத் திருப்பிக் கொடுத்தல்.
4. நர யக்ஞம்: சக மனிதர்களுக்கு உதவுதல். சமுதாயத்திடம் இருந்து நாம் பெற்றதை நம்முடைய நற்செயல்கள் பிரதி உபகாரங்கள் மூலம் திருப்பிக் கொடுத்தல்.
5. பூத யக்ஞம்: பிற உயிரினங்களுக்கும் (பஞ்ச பூதங்களுக்கும்) இயற்கைக்கும் உதவுதல்.
இந்த ஐந்து வேள்விகளின் மூலம் நாம் பிற உயிர்களுடன், பிற மனிதர்களுடன், பெற்றோருடன், பெரியவர்களுடன், இயற்கை சக்திகளுடன் இயைந்து வாழ முயல்கிறோம்.
இதில் முதல் நான்கு விஷயங்கள் நம்முடைய பண்டைய தமிழ் நூல்களில் சொல்லப்பட்டிருப்பவையே.
ஆச்சரியப்படுத்துகிற விஷயம் பூத யக்ஞம் குறித்த விழிப்புணர்வு. இன்றைக்குப் பரபரப்பாகப் பேசப்படுகின்ற சுற்றுச்சூழல் ஈக்காலஜிகல் பாலன்ஸ் பற்றிய பிரக்ஞை அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது; அதன் முக்கியத்துவம். கோடிட்டுக் காட்டப் பட்டிருக்கிறது என்பதுதான்.