

ஆடி மாதத்துக்கு ஆயிரம் சிறப்புகள் இருந்தபோதும் அவற்றின் மணிமகுடமாகத் திகழ்வது அம்மன் வழிபாடு. மாதங்கள் பன்னிரண்டில் தை தொடங்கி ஆனி வரையிலான ஆறு மாதங்கள் உத்தராயண புண்ணிய காலம் எனவும் ஆடி தொடங்கி மார்கழி முடிய இருக்கும் ஆறு மாதங்கள் தட்சிணாயன புண்ணிய காலம் எனவும் அழைக்கப்படுகின்றன.
சூரியன் வடக்கு நோக்கி நகரும் உத்தராயண புண்ணிய காலத்தில் பகல் பொழுது நீண்டு, இரவுப் பொழுது குறைவாக இருக்கும். அதனால் இந்த ஆறு மாதங்கள் தேவர்களுக்குப் பகல் பொழுதாகக் கருதப்படுகிறது.
அதேபோல் சூரியன் தெற்கு நோக்கி நகரும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் பகல் பொழுது குறைந்து இரவுப் பொழுது நீண்டிருக்கும். இந்த ஆறு மாதங்கள் தேவர்களுக்கு இரவுப் பொழுதாகக் கருதப்படுகிறது.
நவகிரகங்களின் அதிபதியான சூரியனின் அம்சமாக சிவனும் சந்திரனின் அம்சமாக சக்தி தேவியும் திகழ்கிறார்கள் என்பது ஐதிகம். ஆடி மாதத்தில் பிறக்கும் தட்சிணாயன புண்ணிய காலத்தில் சந்திரனின் ஆதிக்கம் அதிகம். இந்தக் காலத்தில் சந்திரனின் அம்சமான சக்தி தேவிக்குள் சிவன் அடங்கிவிடுவதால் ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு நடைபெறுகிறது.
பொதுவாகப் பகலைவிட மாலைப் பொழுதுதான் வழிபாட்டுக்கும் கொண்டாட்டத்துக்கும் உகந்ததாக நம்பப்படுகிறது. அதன்படி தேவர்களின் இரவுப் பொழுதான தட்சிணாயன காலம் ஆடிப்பூரம், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப் பெருக்கு எனக் கொண்டாட்டத்துடன் தொடங்கும். அடுத்தடுத்த மாதங்களிலும் பண்டிகைகள் வந்தவண்ணம் இருக்கும்.
பல பெயர்களில் அம்மன் அழைக்கப்பட்டாலும் ஆடி மாதத்தில் மாரியம்மனைத்தான் பெரும்பாலானோர் வழிபடுகிறார்கள். காரணம், மாரியைப் பொழியச் செய்து கோடையின் வெப்பத்தைத் தணிக்கிறவள் என்பதால் மாரியம்மன் வழிபாடு விசேஷமாக இருக்கிறது.
அம்மன் எளிமையின் வடிவமாக இருந்தாலும் ‘துடி’யானவளாகக் கொண்டாடப் படுகிறாள். வேப்பமரம்தோறும் அம்மன் வீற்றிருப்பதாக நம்பப்படுகிறாள். அதனாலேயே வேப்பிலைக்காரி எனவும் பக்தர்களால் அழைக்கப்படுகிறாள். ஆடி மாதத்தில் அம்மனுக்குப் பால் குடம் எடுப்பது, பூ மிதிப்பது, அலகு குத்திக்கொண்டு நேர்த்திக்கடன் நிறை வேற்றுவது, மாவிளக்கு போடுதல் எனப் பலவகையான வழிபாடுகள் நடைபெறும்.
ரேணுகாதேவி அம்மன்
ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் வார்த்தல் சிறப்பு வாய்ந்தது. இந்தச் சடங்குக்குப் பின்னால் ஒரு புராணக் கதை இருக்கிறது. கேட்ட வரம் அனைத்தையும் தரும் காமதேனுவை ஜமதக்னி முனிவரிடம் இருந்து கவர்ந்து செல்ல அரசனான கார்த்தவீர்யாஜூனன் திட்டமிட்டான்.
முனிவர் அதற்கு ஒப்புக்கொள்ளாததால் அவரிடமிருந்து அதைக் கவர்ந்து சென்றான். அவனைக் கொன்று காமதேனுவை ஜமதக்னி முனிவர் மீட்டுவந்தார். தந்தை கொல்லப்பட்ட கோபத்தில் கார்த்தவீர்யாஜூனனின் மகன்கள் ஜமதக்னி முனிவரைக் கொன்றுவிட்டனர்.
ரிஷி பத்தினியான ரேணுகா, கணவன் இறந்த துயரம் தாளாமல் தன்னை மாய்த்துக்கொள்ளத் துணிந்தார். தீ மூட்டி அதில் இறங்கினார். ரேணுகா தேவி மீது இரக்கம்கொண்ட இந்திரன், வருண பகவானை வேண்ட மழை பொழிந்தது. சிதையிலிருந்து உடல் முழுக்கக் கொப்புளங்களோடு வெளியே வந்தார் ரேணுகா.
தீப்பட்ட உடலை வேப்பிலையால் மறைத்துக்கொண்டார். அங்கிருந்த மக்களிடம் உணவு கேட்க, ரிஷி பத்தினிக்குத் தாங்கள் சமைத்துத் தரக் கூடாது என்று சொன்ன மக்கள் அவருக்கு கேழ்வரகு, அரிசி, வெல்லம் தந்தனர். அதை வைத்து ரேணுகா கூழ் காய்ச்சிக் குடித்தார்.
அப்போது அவருக்குத் தரிசனம் தந்த சிவன், “நீ சாதாரணப் பெண் அல்ல. சக்தியின் அம்சமாகத் திகழ்வாய்” என்று ஆசி வழங்கினார். இதன் காரணமாகத்தான் அம்மன் வழிபாட்டில் கூழ் ஊற்றுவது இன்றளவும் தொடர்ந்துவருகிறது. இந்தக் கதையையொட்டி இன்னொரு தாத்பரியமும் சொல்லப்படுகிறது.
கோடையின் சூடு தணிந்து மழை தொடங்கும் காலத்தில் தொற்று நோய்கள் பரவக்கூடும். அதைத் தவிர்க்கத்தான் கிருமிநாசினியான வேப்பிலையை பயள்படுத்துவது உடலுக்கு நன்மையை ஏற்படுத்தும் ஆன்மிக வழக்கமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
பதினெட்டாம் பெருக்கு
ஆடி மாதம் தெய்வ வழிபாட்டுக்கான மாதம் என்பதால் இந்த மாதத்தில் திருமணம், புதுமனை புகுவிழா, தொழில் தொடங்குவது உள்ளிட்ட சுபகாரியங்களைப் பொதுவாகத் தவிர்ப்பார்கள். ஆனால், மாரியம்மனின் அருளால் மழை பொழிவதால் விவசாய வேலைகளை இந்த மாதத்தில் தொடங்குவார்கள்.
ஒரு காலத்தில் ஆடியில் பெய்யும் மழையின் உபயத்தால் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடும். பொங்கிவரும் புதுப் புனலை வரவேற்கும்விதமாக ஆடி மாதம் 18ஆம் நாளை ‘ஆடிப் பெருக்கு’ எனக் கொண்டாடுவார்கள். ஆற்றங்கரையையொட்டிய மக்களுக்கு இந்தப் பதினெட்டாம் பெருக்கு விசேஷமானது.
இருகரைகளையும் தொட்டபடி சுழித்தோடும் நதியைக் கர்ப்பிணியாகவே பாவிக்கிறார்கள். தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு வளைகாப்பு செய்வதைப் போலவே ஆடிப் பெருக்கு அன்று ஆற்றங்கரைக்குச் சென்று நதியில் பூத்தூவி வணங்கி சித்ரான்னங்களைப் படையலிட்டு மகிழ்வார்கள்.
ஆடியில் சுபகாரியங்களைத் தவிர்த்தபோதும் தாலிப் பெருக்கு என்கிற முக்கியமான நிகழ்வைப் பெண்கள் கடைப்பிடிப்பார்கள். பழைய தாலிக் கயிற்றை மாற்றிவிட்டுப் புதுத் தாலி அணிந்துகொள்வார்கள்.
ஆடியில் அம்மனுக்கு முளைப்பாரித் திருவிழாவும் நடத்தப்படும். பெண்கள் அனைவரும் முளைப்பாரியை எடுத்துவந்து வைத்து, அவற்றைச் சுற்றி கும்மியடித்து நடனமாடுவர். பின்னர் அவற்றை அருகில் உள்ள நீர்நிலைகளில் கரைப்பர். இப்படி ஆடியையும் அம்மனையும் பிரிக்க முடியாதபடி ஆடி மாதம் முழுவதுமே ஏதோவொரு வகையில் அம்மன் வழிபாடு இருக்கும்.
உலகத்து உயிர்களுக்கு எல்லாம் அன்னையாக விளங்கும் ஆதிசக்தியின் மகிமையை உலகுக்கு உணர்த்தும் மாதமாகவும் மக்கள் உயிர்வாழ உதவும் வேளாண்மையின் பெருமையை நினைவுகூரும் மாதமாகவும் ஆடி திகழ்கிறது.