

ஸ்ரீ உ.வே. திருப்புட்குழி நரஸிம்ம தாதயார்ய மஹா தேசிகனின் நூற்றாண்டு விழா சென்னை தரமணியில் ஸ்ரீ ஹயக்ரீவ வித்யாபீடத்தின் சார்பாக மூன்று நாட்கள் விமரிசையாக நிகழ்ந்து, ஆனி அச்வினியன்று (24-6-22) முடிவடைந்தது.
இதன் அங்கமாக ரிக் வேதம், யஜுர் வேதம், ஸாம வேதம், ஜைமினீய சாகை, அதர்வண வேதம், ஆகியவற்றை வேத விற்பன்னர்கள் பாராயணம் செய்தனர். அத்துடன், ‘க்ரந்த சதுஷ்டயம்’ என்று போற்றப்படும் நாலு நூல்கள் ஆகிய பாஷ்யம், பகவத்கீதா பாஷ்யம், பகவத் விஷயம், ரஹஸ்யத்ரயஸாரம் என்ற க்ரந்தங்கள் முழுதாகப் பாராயணம் பண்ணப்பட்டன. இன்னொரு குழுவினர் வால்மீகி ராமாயணம், ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீவிஷ்ணு புராணம், நாலாயிர திவ்வியப் பிரபந்தம், முதலியவற்றைப் பாராயணம் செய்தனர். மொத்தத்தில் ஏராளமான வித்வான்கள் பங்கேற்றதால், அந்த வளாகமே தெய்விக ஒலி சூழ்ந்து திகழ்ந்தது.
உத்ஸவத்தின் கடைசி நாளன்று ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீ வராஹார்ய மஹாதேசிகன் தம் பரிவாரத்துடன் எழுந்தருளியிருந்து, விழாவைச் சிறப்பித்தார். அவருடைய அனுக்ரஹ பாஷணத்தில் “யாவத் ஆவர்ததே சக்ரம் யாவதீச வஸுந்தரா” என்கிற மூதுரையைக் காட்டி நெடுங்காலம் இந்த வைதிகச் செல்வம் தழைத்தோங்குக என்று ஆசாஸனம் செய்தருளினார். அரங்கம் முழுதிலும் ஆஸ்திகர்கள் குழுமியிருந்தனர்.
இந்த உத்ஸவத்தின் பல சிறப்பம்சங்களில் புத்தக வெளியீடு என்பது முக்கியமானதாகும். இந்த விழாவின் நாயகரான . உ. வே. நரஸிம்ம தாதயார்ய மஹாதேசிகன் தம் வாழ்நாளில் நூற்றுக்கணக்கான நூல்களை இயற்றி, தாம் மறையும் வரை ஆஸ்திக உலகுக்கு அருந்தொண்டை ஆற்றி வந்தவர். இவர் பல கலைகளில் வல்லுநராக இருந்த காரணத்தால் இந்த நூல்கள் பல கல்வித் துறைகளைச் சார்ந்தவையாக இருந்தன. தற்போது வெளியிடப்பட்ட நூல்கள் இதற்குச் சான்றாகும்.
நூல்கள் வெளியீடு
1. யோக பேடிகை என்ற நூல் யோக சாத்திரத்தை எளிய தமிழில் வடித்துக் கொடுக்கிறது.
2. எளிய வைத்திய முறை என்ற நூல் எல்லாருக்கும் புரியும்படியாக பல பயன்மிக்க மருத்துவக் குறிப்புகளை வழங்குகிறது.
3. வைதிக ப்ரயோக ப்ரகாஶிகை என்னும் நூல் புண்யாஹவாசனம் முதல் விவாஹம், உபநயனம் ஈறாகப் பல வைதிகச் சடங்குகள் பண்ணுகிற முறையைத் தமிழில் விளக்குகிறது.
4. ஸ்தோத்ர ரத்னம் என்னும் நூல் ஆளவந்தார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அருளிச்செய்த ஸ்தோத்ரத்தின் தமிழுரை ஆகும்.
ஏற்கெனவே நாம் க்ரந்த சதுஷ்டயம் என்று குறிப்பிட்டிருந்த நாலு பெரு நூல்களுக்கும் முழுமை யாகத் தமிழ் உரை அல்லது மொழிபெயர்ப்பு ஏற்கெனவே வெளியிடப்பட்டுவிட்டது. இது அரும் பெரும் சாதனை ஆகும். இவ்விதத்தில் இந்த ஆசிரியர் ஈடிணையற்று விளங்குகிறார்.
இந்த சந்தர்ப்பத்தில் பதிப்பித்து வெளியிடப்பட்ட புஸ்தகங்களில் க்ருஷ்ண யஜுர்வேதம் ஸ்வரத்துடன் தமிழ் லிபியில் 13 வால்யூம்கள் கொண்ட தொகுதி என்பது பலருக்கும் பயன்படும் வகையில் அமைந்திருக் கிறது.
மேலும், `ஸத் ஸம்ப்ரதாய ப்ரதீபம்' என்னும் பெயரில் நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்பட்டது. இதன் முதல் பகுதியில் பல யதீந்த்ரர்களின் ஸ்ரீமுகங்களும், இவ்விழா நாயகர் பற்றிய பாராட்டுகளாகப் பல புலவர்கள் இயற்றியுள்ள கவிதைகளும் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. இரண்டாம் பகுதியில் இவரே எழுதி வெளியிட்டுள்ள கட்டுரைகளிலிருந்து முக்கியமானவையாக 43ஐத் தேர்ந்தெடுத்து மறு பதிப்பாக சேர்க்கப்பட்டுள்ளன. இவை இன்றைக்கும் தேவைப்படுபவை.
சாதனையாளர்களுக்கு விருதுகள்
இந்த உத்ஸவத்தின் இன்னொரு சிறப்பு நிகழ்ச்சியாக சுமார் எழுபது சாதனையாளர்களுக்கு வெவ்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இவர்களுள் துணை வேந்தர், இயக்குநர், பேராசிரியர், பாடகர், பதிப்பாளர், சொற்பொழிவாளர் என்று பல துறைகளைச் சார்ந்தவர்களும் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்கள் யாவரும் இந்த ஹயக்ரீவ வித்யா பீடத்தின் நோக்கங் களை நிறைவேற்றுவதற்காகப் பணியாற்றியவர்களாம்.
பன்முகப் புலமை கொண்ட ஸ்ரீ. உ. வே. திருப்புட்குழி நரஸிம்ம தாதயார்ய மஹாதேசிகனின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவதற்கு இதை விடச் சிறப்பான வழி ஏதுமில்லை.
நூல்கள் பெற, தொடர்புக்கு: 9443704476 கட்டுரையாளர், கௌரவ செயலாளர், முதல்வர் ஹயக்ரீவ வித்யாபீடம், சென்னை-113.