

இளையராஜாவின் இசையில் பாலமுரளி கிருஷ்ணா பாடிய ‘சின்ன கண்ணன் அழைக்கிறான்’ பாடலை மறக்க முடியாதவர்களால் அந்தப் பாடல் அமைந்த ரீதிகௌளை ராகத்தையும் மறக்க முடியாது. பக்தி இசைக்கு அப்படியொரு பாந்தமான ராகம். அந்த ராகத்தின் ஜீவ சுரங்கள் நாகசுரத்திலிருந்து காற்றின் திசைகளெங்கும் பரவ,
“நாராயணா என நாவாற அழைப்போர்க்கு
வரும் இடர் தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும்
குருவாயூரப்பனே அப்பன்”
பாடல் அனூப் சங்கரின் குரலில் ஒலிக்கிறது.
கர்னாடக இசைக் கச்சேரி மேடைகளில் பெண் சாகித்யகர்த்தாவின் பாடல்களையே பாடுவதில்லை என்னும் கருத்து இருக்கிறது. இந்தப் பாராமுகத்தையும் தாண்டி கச்சேரி மேடைகளில் பாடுவதற்கு உகந்த எண்ணற்ற பாடல்களை இசை உலகுக்கு வழங்கியிருப்பவர் அம்புஜம் கிருஷ்ணா.
“விழிகட்கு அமுதூட்டும் எழில் திருமேனி
தழுவக் கரம் துடிக்கும் பாலத் திருவுருவம்” என்று இறைவனை குழந்தையாய்க் கொஞ்சும் அம்புஜம் கிருஷ்ணாவின் வளமான கற்பனைக்கு வானமே எல்லை!
ஒரு நல்ல பாடலை நெகிழ்ச்சியான அனுபவமாக்குவதற்குத் தேர்ந்த இசைக் கூட்டணி அவசியம்.
பக்க வாத்தியமாக மட்டுமல்லாமல் பக்க பலமாக நாகசுரம் (ஒருமனையூர் கோபி), தவில் (திருப்புனித்துரா ஸ்ரீகுமார்), பியானோ (ராமு ராஜ்), கடம் (மன்ஜூர் உன்னிகிருஷ்ணன்) ஆகியோரின் கூட்டணி, பாடலை வேறு தளத்துக்குக் கொண்டுசெல்கிறது.
குருவாயூர் ஆலயத்தின் வளாகத்திலேயே பாடலைப் பாடும் கொடுப்பினை இவர்களுக்கு வாய்த்திருக்கிறது. அதைக் காணொளியில் நீங்களும் கண்டு பக்தியில் துய்க்கலாம்!
https://www.youtube.com/watch?v=07m324pmuZk