

கர்னாடக இசை மேடைகளில் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடிவருபவர் சங்கீதா சிவகுமார். கர்னாடக இசையின் செழுமையைப் பாடுவதோடு அதை முறையாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் குருவாகவும் நிறைவான பணியைச் செய்துவருபவர்.
1944இல் வெளிவந்த ‘மீரா’ திரைப்படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நாயகியாக தோன்றியதோடு, கல்கி எழுதிய ‘பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளும் வந்திடாதோ’ என்னும் கேட்பவர்களைக் கிறங்கடிக்கும் பாடலைப் பாடியிருப்பார்.
அமரர் கல்கியின் வரலாற்றை ஆவணப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக சங்கீதா இந்தக் காணொளியில் பாடியிருக்கிறார். ஏதோ பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது... வந்தோமா, பாடினோமா என்றில்லாமல், ஓர் அரிய வரலாற்றுத் தகவலையும் இந்தக் காணொளியில் பதிவுசெய்திருக்கிறார் சங்கீதா.
கல்கி கிருஷ்ணமூர்த்தி அந்நாளில் ஒலித்த ஓர் இந்திப் பாடலைக் கேட்டிருக்கிறார். அந்தப் பாடலைப் பாடியவர் ரிஹானா தாப்ஜி. காந்தியின் மீது அபரிமிதமான மரியாதையையும் அன்பையும் பக்தியையும் வெளிப்படுத்திய இஸ்லாமியப் பெண் அவர். அதோடு, அவர் கிருஷ்ணனின் பக்தையும்கூட. அந்தப் பாடலின் மெட்டை உள்வாங்கி கல்கி தமிழில் எழுதியிருக்கும் படைப்புதான் ‘மீரா’ படத்தில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடியிருக்கும் ‘பிருந்தாவனத்தில்’ எனத் தொடங்கும் பாடல்.
பசுக்களின் கூட்டம் சூழ்ந்திருக்க கண்ணனின் மேனி முழுவதும் தூசி படர்ந்திருப்பதைப் பார்த்து, வானவர்கள் புவியை வியந்து பேசுகின்றனராம்... என்ன ஒரு நயமான கற்பனை! கல்கியின் அந்தக் கற்பனையைச் சேதப்படுத்தாமல் எம்.எஸ். பாடியிருப்பதைப் பின்பற்றி சங்கீதாவும் நிறைவோடு நம் செவிகளுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
பாடலைக் கேட்கும்போது `பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த அந்த நாளை' நினைத்து ஓர் ஏக்கம் நம்மிடமும் எட்டிப் பார்க்கும்!
https://www.youtube.com/watch?v=HNjhA2lKynA