சித்திரப் பேச்சு: சிற்பியின் மனோரதம்

சித்திரப் பேச்சு: சிற்பியின் மனோரதம்
Updated on
1 min read

இந்தச் சிற்பத்தைப் பார்க்கும்போது இது மரத்தில் செய்ததா அல்லது கல்லில் குடைந்து எடுத்ததா என்று எண்ணும்படி கல்லிலே சிற்றுளி காட்டியுள்ள அழகு ஜாலத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

தஞ்சை பெருவுடையார் கோயிலில் பிற்காலத்தில் கட்டப்பட்ட முருகன் சந்நிதியின் தெற்கு வாசல் படி ஏறியதும் துவாரபாலகருக்கு ஏதிரே உள்ள தூணில் இந்தக் காட்சியைப் பார்க்கலாம். இங்குள்ள தூண்களும் சிற்பங்களும் அழகு மற்றும் வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவை. `இதை விடச் சிறப்பாக செய்வதற்கு வேறு என்ன இருக்கிறது' என்று சொல்லத் தோன்றுகிறது.

சிற்பத்தில் மட்டும் அல்ல, கொடி வேலைப்பாடுகளிலும் சிற்பியின் மனோரதம் எப்படியெல்லாம் வெளிப்பட்டுள்ளது பாருங்கள். முன்னங்காலைத் தூக்கியபடி அழகு நடை பயிலும் குதிரையின் அழகைப் பாருங்கள். மேலும், குதிரைக்கு உரிய அணிகலன்கள் மிகவும் நுணுக்கமாகவும் துல்லியமாகவும் சிறப்பாகவும் வடிக்கப்பட்டுள்ளன.

குதிரையின் முதுகில் இருந்து ஆரம்பிக்கும் கொடி வேலைப்பாடுகள் நம்மால் கற்பனை செய்து பார்க்க முடியாதபடி வளைந்தும், நெளிந்தும், சுழித்தும் பல விதங்களிலும் சிற்றுளியால் கல்லில் குடைந்து, ஓர் அடி சதுரத்தில் வடித்த சிற்பியின் கலைத் திறனை வெகுவாக எடுத்துக் காட்டுகிறது.

இவற்றை யெல்லாம் பார்க்கும்போது சிற்பிகளின் கலைத் திறனை மெச்சி, அவர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவர்களின் திறமையெல்லாம் வெளிக்கொணர்ந்த நமது மன்னர்களின் பெருமையை என்ன சொல்லிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை.

இது தூணின் ஒரு சிறு பகுதிதான், உயரமான தூணின் மேல் பகுதியில் இருந்து அடிப்பகுதி வரை, விதவிதமான சிறிய நகாசு வேலைப்பாடுகள் அற்புதமாக உள்ளன. கோயிலுக்குச் செல்லும் போது, ஒவ்வொரு சிற்பத்தையும் தூண்களையும் நின்று நிதானித்து வேலைப்பாடுகளை ரசிப்பதே முகம் தெரியாத அந்தச் சிற்பிகளுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய மரியாதையாக அமையும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in