

முதல் தமிழ் கத்தோலிக்க புனிதரான தேவசகாயம் பிள்ளையைப் பற்றிய உரைநடைச் சித்திரங்கள் பலவும் வந்திருக்கின்றன. சாதாரண நிலையிலிருந்து அசாதாரண நிலைக்குச் சென்ற ஒரு மாமனிதர், அந்த நிலைக்குத் தன்னை எவ்வாறு தகுதிப்படுத்திக்கொண்டார் என்பதையே பாடுபொருளாகக் கொண்டு கவிதையில் வார்த்துள்ளார் முனைவர் அல்போன்ஸ். வாழ்வில் தேவசகாயம் பிள்ளை எதிர்கொண்ட நெருக்கடிகள், சோதனைகள், எத்தகைய இடர் வந்தாலும் மறையின் கொள்கைகளில் அவர் கொண்டிருந்த உறுதியான பற்று ஆகியவற்றைச் செழுமையான மரபு கவிதைகளைக் கொண்டு காட்சிகளாக வடித்துள்ளார் அல்போன்ஸ். மரபுக் கவிதைகளுக்கே உரிய ஓசை, நயமான எழுத்துமுறை வாசிப்பனுபவத்தை அழகாக்குகிறது.
புனிதரைப் போற்று
முனைவர் எம். அல்போன்ஸ் | நெய்தல் வெளி | நாகர்கோவில் - 629002. |
தொடர்புக்கு: 9367510043.
மனித நேயத்தின் வரலாறு
நீலகண்டன், தேவசகாயமாக திருமுழுக்கு பெற்றதிலிருந்து திருவிதாங்கூரில் கிறிஸ்தவம் செழித்தது வரையிலான நிகழ்வுகளுக்கு அத்தாட்சியாக நின்றவரின் வரலாற்றை முழுவதுமாகத் தகுந்த ஆதாரங்கள், தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் நூல் இது.
ஒரு புனிதரின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக எல்லாருக்கும் புரியும் வகையில் எளிய மொழி நடையில் கொண்டுசேர்ப்பது சவாலானது. அந்தச் சவாலில் நூலாசிரியர் மிகப் பெரிய வெற்றியடைந்திருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.
பாஸ்கா, சவிட்டு, வசாப்பு எனும் நாடக வகைமைகளின் ஊடாக தேவசகாயம் என்னும் மாமனிதரின் தியாகம் காலம் காலமாக மக்களிடையே அவர்களின் உணர்வுகளோடு கலந்திருப்பதை இந்நூல் ஆவணப்படுத்துகிறது.
சமயத்தைப் பரப்புவதோடு அல்லாமல் வாழும் காலத்தில் சக மனிதருக்காகப் பாடுபடுவது, மனித நேயத்தோடு இயங்குவதுதான் ஒரு சாமானியனைச் சரித்திர நாயகனாக்கியிருக்கிறது என்னும் பேருண்மையை இந்த நூலின் பக்கங்களில் பதிவுசெய்திருக்கிறார் நூலாசிரியர்.
தெற்கில் விழுந்த விதை
குமரி ஆதவன் | நாஞ்சில் பதிப்பகம் | நாகர்கோவில் - 629001. |
தொடர்புக்கு: 04652-233853.
சமூகத்தை நல்வழிப்படுத்தும் கருத்துகள்
ஒரே காலகட்டத்தில் தமிழகத்தின் வட பகுதியில் வள்ளலாரும் தென் பகுதியில் அய்யா வைகுண்டரும் வாழ்ந்திருக்கின்றனர். அவர்களின் படைப்புகளின் வழியாக நாம் புரிந்துகொள்ள வேண்டிய சமூகக் கருத்துகளை இந்நூலில் தொகுத்து அளித்துள்ளார் நூலாசிரியர்.
சாதி, மதம், உயிர்ப்பலியைத் தடுத்தல், ஆண், பெண் இணைந்து வழிபாடு செய்ய வேண்டியதன் அவசியம், ஆலயங்களில் காணிக்கை, அரசு மக்களிடம் வசூலிக்கும் வரியை எதிர்ப்பது... இப்படி சமூகத்துக்கு நலம் தரும் பல கருத்துகளையும் அய்யா வைகுண்டரின் படைப்புகளிலும் வள்ளலாரின் படைப்புகளிலும் நிறைந்திருப்பதைத் தகுந்த சான்றுகளுடன் நிறுவுகிறது இந்நூல்.
வள்ளலார் - வைகுண்டர் படைப்புகளில் சமூகநிலை
முனைவர் க.வாணிஜோதி | சங்கர் பதிப்பகம், சென்னை-49.
| தொடர்புக்கு: 9444191256.