

கோயில்களின் நகரம் எனப் புகழப்படும் காஞ்சி மாநகரில் இன்னமும்கூடப் பெருவாரியான மக்களுக்குத் தெரியாத கோயில்கள் இருக்கின்றன. பிரபலமான சில கோயில்களில் தனிச் சந்நிதிகளில் இருக்கும் இறை உருவங்களைப் பற்றியும் அந்த இறையின் தனிப்பட்ட சிறப்புகளையும் நாம் அறியாமலேயே இருப்போம். அப்படிப்பட்ட ஓர் இறைவிதான் பிரளயசக்தி அம்மன்.
காஞ்சி மாநகரில் உள்ள ஏகம்பன் கோயிலின் இரண்டாவது பிரகாரத்தில் ஒரு சிறிய விமானத்துடன் காட்சியளிக்கும் சந்நிதியில் மிகவும் நேர்த்தியாக அருள்பாலிக்கிறாள் பிரளயசக்தி அம்மன்.
இந்த அம்மனுக்கு பிரளய கால அம்மன், பிரளய பந்தினி என்றும் சிறப்புப் பெயர்கள் உள்ளன. அன்னை பார்வதிதேவியின் பயத்தையும் கவலையையும் போக்கிய இந்த சக்திக்கு, பார்வதியே சூட்டிய பெயர்தான் பிரளய பந்தினி.
இந்த அம்மனுக்கு எட்டுத் திருக்கரங்கள். கருவறைக்கு மேலே விமானத்தின் முகப்பில் பிரளயசக்தி அம்மன் சுதைவடிவில் சிறிய உருவில் காட்சி அளிக்கிறார். அவளது எட்டுத் திருக்கரங்களில், வலப்புறம் சூலம், நாகம், கத்தி, டமருகம் ஆகியவற்றையும் இடப்புறம் கபாலம், கேடயம், பாசம் ஆகிய ஆயுதங்களையும் ஏந்திக் காட்சி தருகிறாள்.
இடது புறத்தில் நான்காவது திருக்கரத்தைத் தன்னுடைய இடது தொடையில் ஊன்றியிருக்கிறாள். சிரசிலே கங்கை வீற்றிருக் கிறாள். கங்கைக்கு இருபுறமும் தீச்சுடர்கள் கோபுரம் போன்று காட்சியளிக்கிறது. வலது காலை சற்றே உட்புறமாக மடித்தும், இடது காலை நேராக ஊன்றியும் வைத்திருக்கிறாள்.
லலிதா சகஸ்ரநாம நாமாவளியில் 571வது நாமாவளியாக ‘மஹா ப்ரளய ஸாதீணயை’ என்கிற நாமாவளி வருகிறது. இந்த அன்னைக்கு 1008 இளநீராலும், பால், மஞ்சள், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம், எலுமிச்சைச் சாறு போன்றவையாலும் அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அம்மன் உலகில் உள்ள எந்தக் கோயிலிலும் இல்லை. பல குடும்பங்களுக்கு இந்த அம்மன் குலதெய்வமாக விளங்குகிறாள். அவர்கள் தங்கள் குலதெய்வத்துக்கு அபிஷேகம் செய்து, ஒன்பது கஜம் புடவை வாங்கிச் சாத்துகிறார்கள்.
பரமனை அடைய பராசக்தியின் தவம்
ஒரு சமயம் கயிலையில் அம்மையும் அப்பனும் வீற்றிருந்த நேரத்தில், அறுபத்தி நான்கு கலைகளிலிருந்து தோன்றிய சக்தி கோடிகள், இறைவனைப் பிரார்த்தித்து, அன்னை பார்வதிக்குக் கொடுத்த தகுதியைத் தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்று வேண்டினர்.
அப்படித் தர இயலாது என்ற ஈசனையே சக்தி கோடிகள் எதிர்க்கத் துணிந்தனர். அதனால், ஈசனின் சாபத்துக்கு ஆளாகினர். சக்தி கோடிகளுக்குக் கிடைத்த ஈசனின் சாபத்தினால் சகல லோகங்களிலும் இருள் சூழ்ந்தது. உயிர்கள் அனைத்தும் மூச்சுவிட முடியாமல் தவித்தன.
சக்தி கோடிகளைத் தாங்கியிருந்த அம்மையின் சொர்ண சொரூபம் மாறி கறுத்தது. இந்நிலையிலிருந்து தம்மைக் காப்பாற்றவும் மீண்டும் சிவசக்தியாக மாறுவதற்குத் தான் என்ன செய்யவேண்டும் என்று உமையவள் ஈசனிடம் கேட்டாள்.
“பூலோகத்துக்குச் சென்று ஊசிமுனையில் தவம் செய் தேவி. பாவமாகிய இருள் மறைந்து, நாம் இணையும் காலம் வரும்” என்றார் ஈசன்.
ஊசி முனையில் தவம் இருந்த தேவியின் மந்திர உச்சாடனத்தால் ஈரேழு உலகிலும் உஷ்ணம் பரவியது. தேவர்கள் முனிவர்கள் ஈசனைக் காக்க வேண்டினர். ஈசன் தன் சிரசிலிருந்து கங்கையை விடுவித்தார். கங்கை, ஈசனுடைய ரோமங்களிலிருக்கும் மூன்றரை கோடி தீர்த்தங்களையும் தன்னுடன் சேர்த்துக்கொண்டு, நந்தி சைலம் என்னும் மலையை அடைந்து, அங்கிருந்து தேவி தவம் புரியும் இடத்துக்குப் பிரவாகமாய் வந்தாள்.
பேரிரைச்சலுடன் வரும் வெள்ளத்தைப் பார்த்து அன்னை, ‘கம்பம்’, ‘கம்பம்’ என்று சொல்லி நடுக்கமுற்றாள். தன்னுடைய தோழிகளில் ஒருவளான ஒரு சக்தியைப் பார்த்து, இதை நீ பந்தனை செய்வாய் என்று அன்னை ஆணையிடுகிறாள். அம்பிகையின் உத்தரவின்படி அந்தத் தோழியான காளி, அந்த வெள்ளத்திற்கெதிரே நின்று தன் கையிலிருந்த விச்வ பக்ஷணம் என்னும் கபாலத்தில் அப்பெரு வெள்ளத்தைச் சிறிதும் வெளியே போகா மல் அடக்கினாள். இந்த அம்மனுக்குதான் அன்னை பார்வதி பிரளய பந்தினி என்று பெயர் சூட்டினாள்.
தழுவக் குழைந்த ஈசன்
பிரளய பந்தினியின் கபாலத்தில் அடங்கி யிருந்த கங்கையின் பிரவாகத்தை விடுவித்து, ஆயிரம் முகம் கொண்ட மகா பிரளயமாக மீண்டும் வரச் செய்தார் ஈசன். இந்த முறை பார்வதி தன்னுடைய அண்ணன் மாலவனை வேண்டினாள். அங்கே தோன்றிய மாலவன், “இது உண்மையான வெள்ளமன்று. மணலால் உருவாக்கப்பட்ட லிங்கத்தைச் சரணடைந்து, ஆலிங்கனம் செய். ஈசன் நிச்சயம் உன் முன் தோன்றி உன்னை மணம்புரிவார்” என்று அருளினார்.
அன்னை உமையவள் தன் வளைத் தழும்பும் முலைத்தழும்பும் மணல் லிங்கத்தில் பதியுமாறு தழுவிக்கொண்டார். எம்பெருமானும் குழைந்து காட்டினார். அதனைக் கண்ட தேவர்கள் விண்ணிலிருந்து கற்பக மலர்களைப் பொழிந்தனர். பெருகிவந்த கங்கையும், கம்பையாறு என்கிற பெயரில் அம்மை முன் வந்து வணங்கி நின்று பூமியில் மறைந்தது.
குழைந்து நின்ற ஈசன் அம்பிகைக்குக் காட்சி கொடுத்து, “நீ வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொள்வாயாக” என்றார். அம்மையும் ஈசனின் திருவடிகளை வணங்கி, “இன்று அடியேன் செய்யத் தொடங்கிய பூசனை நிறைவேறுமாறு அருள்புரிய வேண்டும்” என்றாள்.
அதைக் கேட்ட பெருமான், “நம்பால் நின் பூசனை என்றைக்கும் முடிவதில்லை” என்று கூறியருளினார்.
அம்மையும், “என்னுடைய பூசனை எந்நாளும் நிலைபெறும்படி திருவுளம் செய்தருள வேண்டும். எக்காலத்திலும் அழியாத இப்பதியில் அடியேன் எல்லா அறங்களையும் செய்யும்படிக் கருணை புரியவேண்டும்” என்றாள்.
இதையடுத்து ஈசன், அன்னையிடம் இருநாழி நெல் கொடுத்தார். அதைக் கொண்டு அன்னை முப்பத்திரண்டு அறங்களைப் புரிந்தாள். சேக்கிழார் பெருமான் இயற்றிய பெரியபுராணத்தில் அன்னையின் அறத்தைக் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்.
‘நண்ணு மன்னுயிர் யாவையும் பல்க
நாடு காதலின் நீடிய வாழ்கைப்
புண்ணி யத்திருக் காமக்கோட் பத்துப்
பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்’.
ஈசனுடன் மணம்
தவம், பூஜை எல்லாம் முடிந்த பிறகு அன்னைக்கு ஸ்ரீ தர்மசம்வர்தினி என்கிற பெயர் ஏற்பட்டது. அறம் வளர்த்த செல்வி என்றும் தூய தமிழில் அவள் அழைக்கப்பட்டாள். அவளது மேனியில் இருந்த கறுமை நிறம் நீங்கி பொன்நிற மேனியளாய் ‘கௌரி’ என்கிற பெயருடன் எட்டு வயது நிரம்பிய பெண்ணாகக் காட்சி அளித்தாள்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தன்று பரமனுக்கும் பார்வதிக்கும் இனிதே திருமணம் நடைபெற்றது. ‘கௌரி கல்யாணம் வைபோகமே..’ என்னும் பாடல் எங்கும் ஒலித்தது. இன்றைக்கும் திருமண வீடுகளில் இந்தப் பாடல் பாடப்பெற்று பெரியோர் மணமக்களை வாழ்த்துவர்.
பிரதி வருடம் காஞ்சியில் பங்குனி உத்திரத்தன்று ஏகம்பன் கோயிலில் ஈசனை, அம்பிகை மணம் புரியும் வைபவம் நடைபெறுகிறது. அன்று பல மணமக்கள் இறைவனோடு சேர்ந்து சீரும் சிறப்புமாகத் திருமணம் புரிந்துகொள்கின்றனர்.
உலகில் முதன் முதலில் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளான பார்வதி பரமேஸ்வரன் ஆதித்தம்பதி என்று அழைக்கப்பட்டனர். இந்த ஈசன், அம்பிகை திருமணத்தைக் காணும் பக்தர்களுக்கு சகலவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும் என்று ஸ்ரீ காஞ்சி மஹிமை நூல் கூறுகிறது.
| அன்னை தவம் செய்தபோது அவருடன் இரு தோழிகள் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. இன்றும் கோயில்களில் தவம் செய்யும் காமாட்சிக்கு இருபுறமும் தோழிகள் நிற்பதைக் காணலாம். அவர்களின் பெயர் கமலினி, அநிந்திதை என்று சேக்கிழார் பெருமான் பெரியபுராணத்தில் குறிப்பிடுகிறார். |
| மேலும், அவர்கள் மலர்களை எடுப்பதற்குச் சென்ற அம்பிகாவனம், காஞ்சியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள கீழம்பி என்னும் திருத்தலமாக இன்றைக்கு விளங்குகிறது. அங்கே அம்பிகாபதீஸ்வரர் என்னும் கோயில் உள்ளது. மற்றொரு தோழியான மங்களை வழிபட்ட மங்களேஸ்வரர் கோயில் காஞ்சி மடத்திற்கு எதிரில் உள்ள வீதியில் உள்ளது. பிரளய சக்தி அம்மன், அம்பிகாபதீஸ்வரர், மங்களேஸ்வரர் ஆகிய கோயில்களுக்குப் பக்தர்கள் சென்று வழிபட வேண்டும்! |