நம்மை மேம்படுத்த உதவும் அண்ணல் நபிகளாரின் பொன்மொழிகள்

நம்மை மேம்படுத்த உதவும் அண்ணல் நபிகளாரின் பொன்மொழிகள்
Updated on
2 min read

நம்மை மேம்படுத்தி, நல்வழிப்படுத்தும் நோக்கில் இறைவன் நமக்கு அளித்த அருட் கொடையே முகம்மது நபி (ஸல்).

“உங்களின் இம்மை வெற்றியும் மறுமை ஈடேற்றமும் இந்த இறைத்தூதரைப் பின்பற்றுவதில்தான் அடங்கி யுள்ளது!” என்று எல்லாம்வல்ல இறைவன் குர்ஆனில் பல்வேறு இடங்களில் தெளிவாக அறிவித்து இருக்கிறான். இறைத்தூதரின் வாழ்க்கை திருக்குர்ஆனின் செயல் வடிவாகத் திகழ்ந்தது. மனித வாழ்வுக்குக் கலங்கரை விளக் காக அவர் திகழ்ந்தார். நமது வாழ்வின் மேன்மைக்கு அவர் அளித்த பொன்மொழிகளில் 50 இங்கே::

#செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன.

# இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் பார்க்கின்றான்.

# அடைக்கலப் பொருளைப் பேணிக்காக்காதவரிடம் உண்மையான நம்பிக்கை இருக்காது. வாக்குறுதியை நிறைவேற்றாதவரிடம் இறைநெறி தங்காது.

# அனாதைகளை அரவணைக்கும் வீடே இறைவனுக்கு மிக விருப்பமானது.

# நிதானமே இறைவனின் தன்மை. அவசரம் சைத்தானின் தன்மை.

# நற்குணம் உடையவரே சிறந்த மனிதர்.

# எளிமையாக வாழ்வதே இறை நம்பிக்கையின் உச்சம்.

# பிறந்த பெண் குழந்தையை உயிரோடு புதைக்காமல், இழிவாகக் கருதாமல், ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்காமல் இருக்கும் மனிதருக்கு இறைவன் சொர்க்கத்தில் இடம் கொடுப்பான்.

# லஞ்சம் வாங்குபவரும் லஞ்சம் கொடுப்பவரும் இறைவனின் சாபத்துக்கு ஆளாவர்.

# கூலியாளின் வியர்வை உலருவதற்கு முன் அவருடைய கூலியைக் கொடுத்துவிடுங்கள்.

# பதுக்கல் செய்பவன் மிகப்பெரிய பாவி.

# தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது.

# பெண்களிடம் கண்ணியமாக, நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள்.

# தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்பு களில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும், நல் ஒழுக்கப் பயிற்சியும் ஆகும்.

# ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள்.

# தன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டார் பசித்திருக்கத் தான் மட்டும் வயிறார உண்பவர் இறைநம்பிக்கையாளராய் இருக்க முடியாது.

# பசித்தவருக்கு வயிறு நிறைய உணவளிப்பதே மிகச்சிறந்த தர்மம்.

# பணியாட்களின் மீது தன் அதிகாரத்தைத் தவறாகப் பிரயோகிப்பவர் சொர்க்கத்தில் நுழைய முடியாது.

# துன்பத்தில் சிக்கி இருப்பவரின் துயரை நீக்குவது நம் கடமை.

# தந்தையின் அன்பை எப்போதும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

# இறந்தவர்களின் நற்செயல்களைப் பற்றி மட்டும் கூறுங்கள்.

# பெருமை அடிப்பவருக்கு சொர்க்கத்தில் இடமில்லை.

# நீங்கள் விரும்புவதை உண்ணலாம், விரும்புவதை அணியலாம். ஆனால், அது குறித்து உங்களிடம் கர்வமும், வீண் விரயமும் இருக்கக் கூடாது.

# கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக்கொள்பவரே பெரும் வீரன் ஆவான்.

# புறம் பேசுவது கடுமையான பாவச் செயல்.

# நெருப்பு விறகைச் சாம்பலாக்கிவிடுவதைப் போல் பொறாமை நற்செயல்களைச் சாம்பலாக்கி விடும்.

# நாவை அடக்கினால், தீய உணர்வுகள் தானே அடங்கும்.

# தீமை செய்தீர்கள் என்றால், அதன் பின் அதை அழிக்கவல்ல பெரும் நன்மையைச் செய்யுங்கள்.

# இனிமையான பேச்சும் ஒரு விதத்தில் தர்மமே.

# நற்குணம் என்பது நம்பிக்கைக்குரிய அடை யாளம். தீயகுணம் என்பது நயவஞ்சகத்தின் அடையாளமாகும்.

# தர்மத்தில் சிறந்தது இடது கைக்குத் தெரியாமல் வலது கையால் கொடுப்பதுதான்.

# பெற்றோரை நிந்திப்பதைவிடப் பெரும் பாவம் உலகில் வேறு எதுவுமில்லை.

# இன்று தன் பெற்றோரை நிந்திப்பவர், நாளைத் தன் குழந்தைகளால் நிந்திக்கப்படுவார்.

# கல்வி கற்பது ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கு மான முக்கிய கடமை.

# ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு இணையானது.

# மிதமிஞ்சிய உணவு அறிவைக் கெடுக்கும்; ஆரோக்கியத்தை அழிக்கும்.

# போதுமென்ற மனத்தைப் பெறுவதே உண்மையான செல்வம்.

பின்பற்றுவது எளிது

எது நேர்வழி? எது சத்தியம்? எதை இறைவன் விரும்புகிறான்? எதை வெறுக்கிறான்? இறை யன்பைப் பெற நாம் என்ன செய்யவேண்டும் என்பது போன்ற கேள்விகளுக்கான பதில்களை அறிவதற்கு நபிகளாரின் பொன்மொழிகள் நமக்கு உதவும். இந்த ஆழமான, பின்பற்றுவதற்கு எளிதான பொன்மொழிகளைப் பின்பற்றுவது நம் வாழ்வை மேம்படுத்தும். நம்மை நல்ல மனிதராகவும் நிலைநிறுத்தும்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in