

கர்னாடக இசையைக் கற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்குப் பால பாடமாக ஸரளி, ஜண்ட வரிசைகளுக்குப் பின்பாக எளிமையான பாடல்களை அறிமுகப்படுத்துவார்கள். அப்படிச் சொல்லிக் கொடுக்கும் பாடல்களில் முக்கியமானது ‘ரார வேணுகோபாலா’ எனும் தெலுங்குப் பாடல்.
பட்டணம் சுப்பிரமணிய அய்யரின் பாடலான இது, குழந்தை கிருஷ்ணனைத் தன்னிடம் வருமாறு அழைக்கும் பாவத்தோடு எழுதப்பட்டிருக்கும். இந்தப் பாடல் குழந்தைகளுக்கான பாலபாடமாக இருந்தாலும் இதைக் கேட்கும் எவரையும் உருக்கிவிடும் தன்மையைக் கொண்டது.
நம்முடைய பாரம்பரியமான வாத்தியங்களான புல்லாங்குழல், வீணை, கடம் இவற்றுடன், எலக்ட்ரானிக் வாத்தியங்களும் சேர்ந்திசையாய் ஒலிக்க, ரம்யமான அனுபவத்தை அளிக்கிறது இந்தியன் ராகாஸ் வெளியிட்டிருக்கும் இந்தப் பாடல்.
பிலஹரி ராகத்தின் மெலிதான ஆலாபனையை வாத்திய இசை தொடங்கிவைக்க, அதைத் தொடர்ந்து அர்ஜுன், ஆலாபனா ஆகிய இருவரும் சேர்ந்தும், தனித் தனியாகப் பாடலின் சில வரிகளையும் பாடுகின்றனர். இறுதியாக இருவரும் ஒருமித்துப் பாடி முடிக்கின்றனர்.
பல்லவி முடிந்ததும் விஷ்ணு பிரியாவின் புல்லாங்குழலும் மாதவியின் வீணையும் ஓர் இசை உரையாடலை நம் செவிக்கு விருந்தாக்குகின்றன. அந்த உரையாடலை ஆமோதிப்பது போல சுவாமிநாத்தின் கடம் ஒலி எழுப்புகிறது. பாடலின் தொடக்கத்திலும் இறுதியிலும் எலக்ட்ரானிக் சாதனமான ஜியோஷ்ரட்டில் முத்தாய்ப்பான தன்னுடைய தனி முத்திரையைப் பதிக்கிறார் மகேஷ் ராகவன்.
காணொளியைக் காண:
https://www.youtube.com/watch?v=cAFRwl4Q7ec