

‘பொம்ம பொம்மதா தைய தையனக்கு தின்னாக்கு னகதின் பஜன்கரே...’. பெங்களூர் ரமணியம்மாள் பாடிப் பிரபலப்படுத்திய இந்தப் பாடலின் பின்னணியில் அவருடைய கணீர்க் குரலுக்குத் தோதாக அசுர வாத்தியமான நாதசுரம் தவிலைப் பயன்படுத்தியிருப்பார்கள். பெங்களூர் ரமணியம்மாளின் கணீர்க் குரலில் இந்தப் பாடலைக் கேட்டவர்களுக்குப் பக்திப் பரவசத்தை அளித்தது என்றால், பின்னாளில் இதே பாடலை எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் கேட்டது வேறொரு புதிய அனுபவத்தைத் தந்தது.
நம்முடைய இசை மரபில் வெண்கலக் குரல் என்று மெச்சும் ஒருசிலரைப் பட்டியல் போட்டால், அதில் நிச்சயம் இடம்பெறும் பெயர் பெங்களூர் ஏ.ஆர்.ரமணியம்மாள். இவர் பாடிய காவடிப் பாடல்களுக்கு தைப்பூச திருவிழாக்களில் மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். இவர் பாடிய சம்ஸ்கிருத கணபதி துதிப் பாடல் மிகவும் பிரசித்தமானது.
அந்தப் பாடலை தலைமுறைகளைத் தாண்டி வயலின் மேதை எல்.சுப்ரமணியத்தின் மகள் பிந்து சுப்ரமணியம் குரலில் கேட்பது புதுவிதமான அனுபவத்தைத் தருகிறது. நாகசுவரத்திலும், புல்லாங்குழல் இசைப் பின்னணியிலும் கேட்ட இந்தப் பாடல், தற்போது நவீன வாத்தியக் கலவையான இசையோடு தற்போது ஒலிக்கிறது.
கீத் பீட்டரின் பாஸ் கிடாரில் தொடங்கி வயலின் (அம்பி சுப்ரமணியம்), டிரம்ஸ் (கார்த்திக் மணி), கிடார் (ஆல்வின் ஃபெர்னான்டஸ்), கீபோர்ட் (விவேக் சந்தோஷ்) என ஒவ்வொரு இடையிசையிலும் ஒவ்வொரு வாத்தியத்தின் ஒலியைப் பிரதானமாக வெளிப்படுத்தியிருப்பது ரம்யமாக இருக்கிறது.
எல்லாவற்றுக்கும் மேலாக பிந்து சுப்ரமணியம் இந்தப் பாடலை மிதமான தாளகட்டுடன் இனிமையாகப் பாடியிருக்கும் உத்தியைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்தத் த்வனிதான் இதற்கு முன்பாக இந்தப் பாடலைப் பாடியவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. ஆர்ப்பாட்டமாக இதுவரை ஒலித்த பாடலை ‘அமைதியான நதியினிலே ஓடம்’ போல் கப்பா தொலைக்காட்சிக்காக தங்களின் ‘சுப்ரமண்யா’ குழுவின் மூலம் கேட்க வைத்திருக்கின்றது இன்றைய இளைய தலைமுறை.
பாடலை யூடியூபில் காண:
https://www.youtube.com/watch?v=GhLjkQ-r05I&list=RDGhLjkQ-r05I&start_radio=1