

பூர்வாச்ரமப் பரஞ்ஜோதிக்கு ஒரு பக்கம் தநுர்வேதப் பயிற்சி இருந்தாலும் இன்னொரு பக்கம் நல்ல சிவபக்தியும் இருந்தது. நரசிம்ம வர்மனின் படையில் சேர்ந்து யானைப் படைத் தலைவராகி அவனுக்காக வாதாபி வரை போய் வெற்றி பெற்றார்.
அங்கே கவர்ந்த பொன், மணி, யானை, குதிரை முதலானவைகளை ராஜாவுக்கே சமர்ப்பணம் பண்ணிவிட்டு வாதாபி கணபதியை மாத்திரம் தனக்கென்று வைத்துக்கொண்டார்.
சாளுக்கியர்களுடைய மகா பெரிய யானைப் படையை ஜெயிக்கும்படியான திறமை உமக்கு எப்படி வந்தது என்று ராஜா ஆச்சரியப்பட்டு அவரைக் கேட்டான்.
சேனாதிபதியாக இருந்தாலும் தன்னுடைய சொந்த விஷயம் எதையும் அவர் ராஜாவிடம் தெரிவித்ததில்லை. தன் காரியத்தைக் கவனமாகச் செய்வாரே தவிர, காரியம் செய்கிற தன்னைப் பிரகாசப்படுத்திக் கொண்டதில்லை. இப்போது ராஜா அவருடைய வீர சாகசத்துக்குக் காரணம் கேட்டபோதும் பேசாமலேயே இருந்தார்.
இப்போது அந்தப் பல்லவ ராஜாவின் மந்திரிகள், இந்தப் பரஞ்ஜோதி பெரிய சிவபக்தர். வெளியில் தெரியாமல் சிவனடியார்களுக்குத் தொண்டு செய்கிறவர்.
இப்படிப்பட்டவருக்கு முன்னாடி எந்த எதிரிப் படைதான் நிற்க முடியும்? என்கிறார்கள். மந்திரிகள் சொன்னதுதான் தாமதம், ராஜா அப்படியே நமஸ்காரம் செய்தான். இதிலிருந்து அந்தக் காலத்து அரசர்களின் உயர்ந்த பண்பாடு தெரிகிறது. நானாக ஒன்றும் சொல்லவில்லை. பெரிய புராணக் கதையைத்தான் சொல்கிறேன்.
- காஞ்சி ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் அருளிய `மஹா அமிர்தம்'.