தாசர்களின் பாதுகைகளுடன் ஒரு பாதயாத்திரை

தாசர்களின் பாதுகைகளுடன் ஒரு பாதயாத்திரை
Updated on
2 min read

மகாராஷ்டிர மாநிலம் சோலாபூர் மாவட்டத்தில் பண்டரிபுரம் என்னும் ஆலயம் உள்ளது. இங்குள்ள கோயிலில் விட்டலர், ருக்மணி அருள்பாலிக்கின்றனர். விட்டல், கிருஷ்ணனின் மற்றொரு வடிவம். புண்டரிகன், சிறந்த கிருஷ்ண பக்தன். அவனுடைய பக்தியின் மேன்மையை உலகுக்குப் புரியவைக்க கிருஷ்ணனும் ருக்மணியும் நினைத்தனர்.

செங்கல்லில் நிற்கும் மூலவர்

முதுமையின் பிடியில் இருந்த பெற்றோருக்குச் சேவை புரிவதைக் கடமையாக நினைத்துப் பெற்றோரைக் காப்பாற்றிவந்தான் புண்டரிகன். அப்போது அவனுடைய வீட்டின் வாசலில் இருந்தபடி கிருஷ்ணன், “நான் கிருஷ்ணன் வந்திருக்கேன்” என்று குரல் எழுப்பினார்.

“எனக்குப் பெற்றோரே முக்கியம். அவர்களுக்குச் சிரமபரிகாரம் செய்துவிட்டு, தங்களிடம் வருகிறேன்” என்ற புண்டரிகன், ஒரு செங்கல்லை வாசலை நோக்கி விட்டெறிந்தான்.

கிருஷ்ணனும் “அப்படியே ஆகட்டும்” என்றபடி அந்தக் கல்லின் மீது ஏறி நின்றார். பண்டரிபுரம் மூலவருக்கு இதுவே கதை.

அவர் பக்தர்களின் தெய்வம். இன்றைக்குக்கூட, அவர் காலைத் தொட்டு வணங்கலாம். இந்த விட்டலை, விடோபா என்றும் செல்லமாக அழைப்பர். இவருக்கு ஏராளமான பக்த சாதுக்கள் இருக்கின்றனர். அவர்களில் ஞானதேவர், நாம தேவர், துக்காராம், ஜனாபாய், சக்குபாய் ஆகியோர் மிகவும் பிரபலம். இவர்களைத் தவிர, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சோகமேளர் என்னும் சாதுவும் மிகப் பிரபலம்.

இவர்கள் எல்லாரும் விட்டலைப் பற்றி ஏராளமான பாடல்களை இயற்றி வாத்தியங்களின் இசையுடன் அவற்றைப் பாடி, பாமர பக்தர்களைக் கவர்ந்தவர்கள். இவர்களில் ஞானேஸ்வர், துக்காராம் ஆகியோருக்கு மிக அதிகமாகச் சீடர்கள் இருந்தனர். ஆடி மாத ஏகாதசி அன்று இவர்கள் பாதயாத்திரை சென்று, அங்கு ஓடும் சந்திரபாகா நதியில் புனித நீராடிவிட்டு விட்டலரைத் தரிசிப்பர். இப்படி வருபவர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து வருவர்.

500 கி.மீ. பாதயாத்திரை

ஒரு குழு, ஞானதேவரைப் பின்பற்றுபவர்கள். ஞானதேவரின் பாதுகைகளை ஆளந்தி என்கிற இடத்திலிருந்து, பண்டரிபுரத்திற்குத் தேரில் வைத்து எடுத்து வருகின்றனர். புனேவுக்கு அருகிலிருந்து புறப்படும் இந்த ஆன்மிக ஊர்வலத்தின் தூரம், ஏறக்குறைய 250 கி.மீ. பக்தர்கள் தம்புரா, ஹார்மோனியம், டோலக் போன்ற வாத்தியங்களை இசைத்தபடி, பாடி, ஆடி வருவர். வரும் வழியெல்லாம் இவர்களை வரவேற்பதற்கும் தங்கவைப்பதற்கும் தடபுடலான விருந்து வைப்பதற்கும் மக்கள் ஆர்வமாக இருப்பர்.

தேகு என்னும் இடத்திலிருந்து துக்கா ராமின் பக்தர்கள் அவருடைய பாதுகையைப் பல்லக்கில் அலங்கரித்து வைத்து மாட்டு வண்டியில் எடுத்துவருகின்றனர். இதன் பயண தூரமும் ஏறக்குறைய 250 கி.மீ. ஆளந்தி, தேகு இரண்டின் பயணப் பாதைகளும் வெவ்வேறானவை. இப்படி இருபுறமும் இருந்து பண்டரிபுரம் விட்டலைத் தரிசிக்க பக்தர்கள் அலையலையாய்த் திரள்கின்றனர்.

பண்டரிபுரம் கோயிலில் 4 வாசல்கள் உள்ளன. இதில் கிழக்கு வாயில் வழியாக உள்ளே நுழைந்து மேற்கு வாயில் வழியாக வெளியேறுவது பாரம்பரியமான வழக்கமாக இருக்கிறது.

கோயிலின் கிழக்கு வாசலில், 12 படிகள் ஏறி முதல் மண்டபம் நோக்கிச் செல்ல வேண்டும். இவற்றில் முதல் படியை ஒட்டி நாமதேவரின் பித்தளை கவசமிட்ட மார்பளவு சிலை ஒன்று உள்ளது. இவரை வணங்காமல் யாரும் உள்ளே நுழைவதில்லை.

பாரம்பரியமான வைபவம்

இந்த நாமதேவர் சிலைக்கு எதிரே ஒரு சமாதி உள்ளது. இது சோகாமேளர் என்னும் சாதுவினுடையது. இவர் ஒடுக்கப்பட்ட சாதியில் பிறந்தவர் என்பதால், முதலில் கோயிலில் இருக்கும் பண்டிதர்கள் இவரை உள்ளே விடவில்லை.

இதனைக் கண்ட கிருஷ்ணர், சோகமேளரோடு சேர்ந்து சாப்பிட ஆரம்பித்தார். இது பல முறை நிரூபணம் ஆனது. அப்போதும் பண்டிதர்கள் அதை ஏற்கவில்லை.

மாறாக சோகாமேளரை அடித்துத் துன்புறுத்தினர். சோகாமேளருக்கு உடலின் எந்தப் பகுதியில் அடிபட்டதால், காயம் ஏற்பட்டதோ, அதே இடத்தில் மூலவர் விட்டலுக்கும் காயம் தெரிந்தது. இதைக் கண்ட பண்டிதர்கள் மனம் மாறி சோகாமேளரை ஏற்றுக்கொண்டனர்.

சோகாமேளரும் நாமதேவரைப் பின்பற்றி, ஏராளமான பாடல்களை விட்டல் மீது எழுதிப் பாடினார். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் ஞானதேவரையும் துக்காராமையும் பாரபட்சமில்லாமல் வணங்குகின்றனர். அதன் பின், விட்டலைத் தரிசிக்க ஆலயத்தினுள் பிரவேசிக்கின்றனர்.

இந்தப் பாதயாத்திரை வைபவம் 700 ஆண்டுகளாக நடக்கிறது. கார்த்திகை ஏகாதசியிலும் பாதயாத்திரை உண்டு. ஆனால், ஆடி மாத ஏகாதசி அன்று மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in