

கண்கள் இல்லாமல் வாழும் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது? அதைப் பார்வையற்றவர்களிடம் கேட்டுப் பாருங்கள். ஆனால், நல்ல பார்வை இருந்தும் நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமானவற்றைப் பார்க்கத் தவறி விடுகிறோம்.
புனித விவிலியத்தின் சங்கீதப் புத்தகத்தில் வரும் ஒரு வசனம், ‘உங்களுடைய கண்கள் நேர்மையானதைப் பார்க்கட்டும்’ எனக் கூறுகிறது.
வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும் தரமாகவும் நடத்த அடிப்படையான தேவைகள் பூர்த்தியாக வேண்டும். நல்ல உடை, ஆரோக்கியமான, தரமான உணவு, குடியிருக்க சொந்த வீடு, பிள்ளைகளுக்குத் தேவையான கல்வி. இவற்றைச் செல்வந்தர்கள் எளிதில் அடைந்துவிடுகிறார்கள்.
ஆனால், எளிய நிலையிலிருந்து வரும் சாமானியர்கள் எப்படி இவற்றைப் பெற்றுக்கொள்வது? இந்த இடத்தில்தான், ‘உழைப்பும் சேமிப்பும் இரண்டு கண்கள்!’ என வழிகாட்டுகிறது நீதிமொழிகள் புத்தகம்.
அப்புத்தகத்தின் அதிகாரம் 21இல் 5ஆவது வசனம் சொல்கிறது ‘கடினமாக உழைக்கிறவனுடைய திட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும். எதையும் அவசரப்பட்டுச் செய்கிறவர்களுக்கு வறுமைதான் வரும்’. எவ்வளவு யதார்த்தமான உண்மை! கடின உழைப்பையும் அப்படி உழைப்பதால் கிடைக்கும் ஊதியத்தை அவசரப்பட்டுச் செலவழிப்பதையும் சுட்டிக்காட்டுகிறது இந்த வசனம்.
நீதிமொழிகள் புத்தகம் மேலும் சொல்கிறது ( 20:4), ‘சோம்பேறி குளிர் காலத்தில் நிலத்தை உழ மாட்டான். அதனால் அறுவடைக் காலத்தில் கையேந்தி நிற்பான்’. அதாவது, முதலில் நன்றாக உழையுங்கள். உங்கள் உழைப்புக்குரிய ஊதியம் நிச்சயமாக உங்களுக்குக் கிடைக்கும்.
பிறகு திட்டமிடுங்கள். ஊதியத்தில் 35 சதவீதத்தைச் சேமியுங்கள். எஞ்சிய பணத்தை அவசியமானவற்றுக்கு மட்டும் செலவு செய்யுங்கள். மாறாக ஆசைப்பட்ட அனைத்தையும் வாங்க நினைக்காதீர்கள். கஷ்டப்பட்டு ஈட்டிய பணத்தை வெட்டியாகச் செலவு செய்தால் உங்களுடைய இரண்டு கண்களில் ஒன் றின் பார்வை மங்கிவிட்டது என்று பொருள்.
மிக மிக முக்கியமானது, பல தவறான பழக்கங்களுக்கு அடிமையாகி, நேரத்தையும் பணத்தையும் வீணாக்காதீர்கள். குறிப்பாக, இன்று பலவீனர்களைக் குறிவைத்துத் தாக்கும் இணையச் சூதாட்டம், மது, லாட்டரி ஆகிய மூன்றிலும் உங்கள் கடின உழைப்பில் வந்த பணத்தை அழித்துவிடாதீர்கள்.
இதை நீதிமொழிகள் (23:21) கண்டிக்கிறது: ‘குடிகாரர்களும் பெருந்தீனிக் காரர்களும் ஏழைகளாவார்கள். தூக்க மயக்கத்திலேயே இருப்ப வர்கள் கந்தல் துணியைத்தான் உடுத்துவார்கள்’.
நீதிமொழிகள் இறுதியாக ஒன்றைச் சொல்கிறது “நீதிமானின் உழைப்பு நல்வாழ்வுக்கு வழிநடத்துகிறது. அவனுடைய கைகளின் உழைப்பு அவனுக்குப் பலமடங்குப் பலன் தரும்”.
இந்த வசனம் கடின உழைப்பையும் அதை சேமிப்பதன் மூலம் அது பல மடங்காகப் பெருகுவதையும் எடுத்துச் சொல்கிறது. உழைப்பு, சேமிப்பு எனும் உங்களுடைய மேலும் இரண்டு கண்களிலிருந்து வெளிச்சம் பெற்றுக்கொள்ளுங்கள்.
தொகுப்பு: ஜெயந்தன்