

கர்னாடக இசைப் பாடகராக மட்டும் தன்னுடைய எல்லையைக் குறுக்கிக்கொள்ளாமல், எழுத்து, ஆய்வு எனப் பல துறைகளில் தன்னுடைய ஆளுமையை வளர்த்துக்கொண்டவர் மும்பையைச் சேர்ந்த டாக்டர் வசுமதி பத்ரிநாத். இவருடைய தாய் பத்மா சேஷாத்ரியே இவரின் முதல் குரு. பின்னாளில் டி.ஆர். பாலாமணியிடமும் இசையின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
இசை சார்ந்த தேடல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டதன் மூலம் இசைத் துறைக்கு அளப்பரிய பங்களிப்புகளை அவர் அளித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, குஜராத்தி ஆகிய இந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்ற வசுமதி, பிரெஞ்சு மொழியில் முனைவர் பட்டம் பெற்றவர்.
இந்திய இசை வடிவங்கள் குறித்து ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை உலகின் பல பகுதிகளிலிருந்து வெளிவரும் இதழ்களில் எழுதியிருப்பவர் இவர். ‘ஏசியன் ஏஜ் நியூஸ்’ நாளிதழில் இவர் எழுதிய இசைப் பத்திகள் புகழ் பெற்றவை.
ஆண்டாள் போன்று புகழ்பெற்ற பெண் சாகித்ய கர்த்தாக்களின் பாடல்களைக் கொண்டே ‘ஸ்திரீ கானம்’ என்னும் முழு நிகழ்ச்சியை நிகழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் இந்த நூற்றாண்டின் பெண் சாகித்ய கர்த்தாக்களான அம்புஜம் கிருஷ்ணா, மங்களம் கணபதி ஆகியோரின் பாடல்கள் கச்சேரி மேடைகளில் ஒலிப்பதற்குக் காரணமாக விளங்கியவர்.
ஐந்தாம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டுக்குள் ஆழ்வார்களால் எழுதப்பட்ட திவ்யப் பிரபந்தந்தின் பாடல்களைக் கொண்டு இவர் நிகழ்த்திய நிகழ்ச்சி குறிப்பிடத்தகுந்தது.
அசர்பைஜானில் ஒலித்த இந்தியக் குரல்
உள்ளூர் மேடைகளில் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டிருந்த இவரை, 2009மார்ச் மாதத்தில் அசர்பைஜான் நாட்டின் குடியரசுத் தலைவர், அந்நாட்டில் நடைபெற்ற சர்வதேச ‘முகம்’ இசைத் திருவிழாவில் பங்கெடுக்க அழைத்தார். அந்நாட்டின் இசைக்குப் பெயர் ‘முகம்’. அசர்பைஜான் நாட்டிற்குச் சென்ற முதல் இந்தியர், தமிழர் என்கிற பெருமையோடு இந்தியாவிலிருந்து சென்ற அவருக்கு அங்கே சிவப்புக் கம்பள மரியாதை அளிக்கப்பட்டது. பல நாட்டு இசைக் கலைஞர்கள் பங்கெடுத்த அந்தத் திருவிழாவில் வசுமதி பத்ரிநாத்தின் கர்னாடக இசைக்கு மகத்தான வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அந்த நாட்டின் திருவிழாவுக்கு வசுமதி சென்றதில் அவருக்கும் ‘முகம்’ இசையை இசைத்த கலைஞர் ஷகினா இஸ்மை லோவாவுக்கும் இடையில் நல்ல புரிதல் ஏற்பட்டது. இந்தப் புரிதல், இரண்டு நாட்டின் இசையையும் இணைத்து ‘முராகம்’ என்னும் தலைப்பில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்துவதற்குக் காரணமானது.
துபாயில் காந்தி பஞ்சகம்
துபாய் இந்தியத் தூதரகத்தின் அழைப்பை ஏற்று மகாத்மர்ப்பன் என்னும் நிகழ்ச்சியை வசுமதி நடத்தினார். மகாகவி பாரதியாரின் காந்தி பஞ்சகத்திலிருந்து சில பாடல்களையும் இந்திப் பாடல்களையும் இந்த நிகழ்ச்சியில் பாடினார்.
ஃபுல்பிரைட் நிதியுதவி
வசுமதி பத்ரிநாத் அமெரிக்கவின் புகழ்பெற்ற ஃபுல்பிரைட் நிதியுதவியை அந்நாட்டில் அவரின் இசைப் பணிகளுக்காகப் பெற்றவர். புளோரிடாவின் செயின்ட் லியோ பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர். ‘கன்ஸர்டோ சங்கீதம்' என்னும் பெயரில் கிழக்கத்திய இசையையும் மேற்கத்திய இசையையும் சங்கமிக்க வைக்கும் நிகழ்ச்சிகளை அமெரிக்காவின் புகழ்பெற்ற பல பல்கலைக்கழகங்களில் நடத்தியவர் வசுமதி.
பிரெஞ்சுக்குப் போன ஆண்டாள்
பக்தி மார்க்கத்தில் தோய்ந்த வசுமதி, அண்மையில் பிரெஞ்சு மொழி பேசும் மக்களுக்கும் தமிழை ஆண்ட கோதை நாச்சியாரான ஆண்டாளை அறிமுகப்படுத்தியிருக்கிறார். ஆண்டாளின் திருப்பாவையை வசுமதி பிரெஞ்சில் மொழி பெயர்த்திருக்கிறார். ‘Le Tiruppavai ou Le chant matinal de Margali’ என்னும் இந்த நூலை பாரிசின் எடிசன்ஸ் பான்யன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
உலகளாவிய பெருமை
“ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்டாள், பன்னிரு ஆழ்வார்களில் ஒரேயொரு பெண். பக்தியின் மேன்மை, கற்பனை, இலக்கியச் செறிவு போன்ற பலவற்றிலும் ஆண்டாளின் திருப்பாவை பாடல்கள் தன்னிகரில்லாதவை. அவற்றின் பெருமையை உலகறியச் செய்யும் ஒரு சிறிய முயற்சியாகவே இந்தப் பாடல்களை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தேன்” என்கிறார் வசுமதி.