பிரம்மாண்டமான பக்தியும் கருணையும்

பிரம்மாண்டமான பக்தியும் கருணையும்
Updated on
2 min read

இறைவன் மனிதனுக்குச் சொல்லிய வேதமே பகவத் கீதை என்பார்கள். போர்க்களத்தில் அர்ச்சுனனுக்கு, ‘அண்டசராசரங்களும் என்னுள் அடக்கம். எல்லாவற்றிலும் இருப்பவன் நானே’ என்னும் தத்துவத்தை விளக்க விஸ்வரூப தரிசனம் அளிப்பார் பகவான் கிருஷ்ணர்.

அந்த விஸ்வரூப தரிசனத்தை விளக்கும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களைத் தீந்தமிழில் மொழியாக்கம் செய்து அதற்கு பதச் சேதம் ஏற்படாதவாறு மெட்டமைத்து இசை உலகில் விஸ்வரூப தரிசனத்தை இசை ஆல்பமாக்கித் தந்திருக்கிறது ‘சிம்பொனி நிறுவனம்’. ஆழமான அர்த்தப் பொலிவோடு திகழும் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை எல்லாருக்கும் புரியும் வகையில் அழகு தமிழில் குருநாத சித்தர் எழுதியிருக்கிறார்.

இசைத் துறையில் பல ஆண்டுகள் அனுபவமுள்ள கே.எஸ்.ரகுநாதன் (ஹெச்.எம்.வி.ரகு) அதற்கு இசையமைத்து, எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இறுதியாகப் பாடிய ஆன்மிகப் பாடலாக அண்மையில் வெளிவந்திருக்கிறது.

ஏறக்குறைய 30 நிமிடங்களுக்கு நீளும் இந்தப் பாடலை இசையுலகில் ஒரு விஸ்வரூபம் என்றே கூறலாம். பாடலின் வரிகளில் வார்த்தைக்கு வார்த்தை இறைவனின் அருளும் எல்லாருக்குமானவனாக எளிமையின் சொரூபமாக விளங்குவதன் சூட்சுமமும் நேர்த்தியாகக் கையாளப்பட்டிருக்கின்றன.

சில கடினமான வார்த்தைகள்கூட எஸ்.பி.பி.யின் குழைவான குரலில் வெளிப்படும்போது, வெண்ணெய்க் கட்டி தொண்டையில் வழுக்கிக் கொண்டு போவதுபோல், செவியில் நுழைந்து உள்ளத்தில் உறைகிறது. “இந்த இசை ஆல்பத்தில் எஸ்.பி.பி.யைப் பாடவைத்ததையே ஒரு தெய்வ சங்கல்பமாக நினைக்கிறேன்” என்கிறார் சிம்பொனி இசை நிறுவனத்தின் செயல் அதிகாரியான ராஜேஷ்.

முதல் தரிசனம்

“இந்த விஸ்வரூப தரிசனம் இந்திய மொழிகள் எதிலுமே இதுவரை வெளிவந்ததில்லை. முதன் முதலாகத் தமிழில் நாங்கள் வெளியிட்டிருப்பதையே இசை உலகில் பெருமையான விஷயமாக பார்க்கிறோம். ‘எல்லாவற்றுக்கும் நான் இருக்கிறேன். எல்லாவற்றிலும் நான் இருக்கிறேன்.

நானே எல்லாமுமாக இருக்கிறேன்’ என்பதை விளக்குவதுதான் விஸ்வரூப தரிசனம். இதை பகவத் கீதையின் மூன்று ஸ்லோகங்கள் விவரிக்கின்றன. அதை அடிப்படையாக வைத்து பகவான் கிருஷ்ணரின் விஸ்வரூப தரிசனத்தை விரிவாக விளக்குவதுதான் இந்தப் பாடலின் நோக்கம்.

இந்தப் பாடலை எழுதுவதற்காக குருநாத சித்தரை நாங்கள் நாடினோம். ‘இது மிகப் பெரிய காரியம். இது தொடர்பாகப் படித்துத் தெளிவதற்கு எனக்கு இரண்டு மாதங்கள் வேண்டும்’ என்றார். அதன் பிறகு அவர் மிகவும் கவனத்துடன் எழுதிய பாடல்தான் இது.

அடுத்து இதற்கு இசையமைக்கும் பொறுப்பை, பல பிரபலங்களின் பாடல்களை ஹெச்.எம்.வி. நிறுவனத்தின் இசைத்தட்டுகளில் ஒலிக்கவைத்த பெருமைக்குரிய ரகுநாதனிடம் விட்டுவிட்டோம். யாரைப் பாடவைப்பது என்று ஒரு குழப்பம் நீடித்தது. இறுதியாக எஸ்.பி.பி., என்று என்னுடைய முடிவை ரகுநாதனிடம் சொன்னேன். ‘பாலுவா, அவன் பிச்சிடுவாண்டா..’ என்று மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டார்.

எஸ்.பி.பி. எனும் பண்பு

இந்த ஆரம்பக்கட்ட பணிகள் நடக்கத் தொடங்கும்போதே, பாலு சாரைப் பாடவைத்துவிட வேண்டும் என்று நினைத்தேன். மெட்டமைத்து ரகு சார் அமைத்துக் கொடுத்த பாடலை, எஸ்.பி.பி.சார் வெறுமே ‘க்ளிக்’ சத்தத்தை மட்டுமே வைத்துக்கொண்டு பாடிக் கொடுத்தார்.

பாடி முடித்ததும், ‘என்னுடைய ஜென்மம் சாபல்யம் அடைந்தது போலிருக்கிறது’ என்று அவர் சொன்னது எவ்வளவு சத்தியமான வார்த்தைகள் என்பது இப்போது புரிகிறது. அவர் பாடிக் கொடுத்ததில் ‘கோமேதகம்’ என்னும் வார்த்தை உச்சரிப்பில் எனக்குச் சந்தேகம் இருந்தது. அதைத் திரும்பப் பாடிக் கொடுக்க முடியுமா என்று கேட்டேன்.

அதற்கு அவர், ‘கோமேதகம்’ என்னும் உச்சரிப்பு சரிதான். உங்களுக்கு வேண்டுமானால் நான் மறுபடியும் நீங்கள் சொல்வது போல் பாடி அனுப்புகிறேன்’ என்றார். அவர் பாடியதுதான் சரி என்று தெரிந்தும் இப்படி இன்னொரு முறை பாடிக் கொடுக்கும் பண்பு எஸ்.பி.பி.க்கே உரியது” என்கிறார் ராஜேஷ்.

“கற்பனைகளுக்கு எட்டாத பிரம்மாண்டம் விஸ்வரூப தரிசனம். இதைக் காணும் அர்ச்சுனனுக்கு அச்சமே மேலிடுகிறது. ஒரு கட்டத்தில், ‘உன்னுடைய இந்த விஸ்வரூப தரிசனம் போதும் கிருஷ்ணா. உன்னுடைய வழக்கமான சாந்த சொரூபத்தைக் காட்டு போதும் என்கிறான். இதை ‘நிஜத்தை மறைத்து நிழலைக் காட்டு’ என்னும் தமிழ்க் கூற்றாக வடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது” என்றார் பாடலை எழுதியிருக்கும் குருநாத சித்தர்.

கருணையின் சொரூபம்

இனிமையான குரல், இனிமையான இசை, ஒன்பது விதமான ராகங்கள், தாளங்களில் இந்த விஸ்வரூப தரிசனத்தைக் கட்டி எழுப்பியிருக்கிறார் இசையமைப்பாளர் ரகுநாதன். வழக்கமான தாள வாத்தியங்களோடு செண்டை போன்ற அரிதான, அதிகமாக ஓசையெழுப்பும் தாள வாத்தியங்களின் ஒலியையும் பதமாக நம் காதுகளுக்குக் கொண்டு சேர்த்திருக்கிறது டால்பி அட்மாஸ் தொழில்நுட்பம்.

தமிழின் செழுமையான மொழிநடையில் வெளிவந்திருக்கும் பாடலுக்கான வரைகலை ஆக்கமும் சிறந்த காட்சி அனுபவத்துக்கு காரணமாக அமைந்திருக்கிறது. பிரம்மாண்டமான விஸ்வரூபத்தின் ஆதியந்தமாக பக்தியும் கருணையுமே நமக்குத் தரிசனமாகின்றன.

பாடலைக் காண: https://bit.ly/3mLMO2t

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in