சித்திரப் பேச்சு: அகத்தீஸ்வரமுடையர் கோயில் கற்சங்கிலி

சித்திரப் பேச்சு: அகத்தீஸ்வரமுடையர் கோயில் கற்சங்கிலி
Updated on
1 min read

‘பொழில் வாய்ச்சி’ என்கிற பழங்கால பெயர் கொண்ட ஊர் எது தெரியுமா? மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்த சோலைகளை அக்காலத்தில் ‘பொழில்கள்’ என்றும், சிற்றூர்களை ‘வாய்ச்சி’ என்றும் அழைத்தனர். பொழில்களுக்கு இடையே அமைந்த வாய்ச்சி, ‘பொழில் வாய்ச்சி’ என்று வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி ‘பொள்ளாச்சி’ என்று ஆகியது.

இது மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ‘முடிகொண்ட சோழநல்லுர்’ என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும். விக்கிரம சோழன், சுந்தரபாண்டியன் காலத்தில் 12, 13ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அகத்தீஸ்வரமுடையர் என்கிற சிவன் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தற்போது ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது.

இக்கோயிலின் சிவன் சந்நிதிக்கு முன்புறம் உள்ள மண்டபத்தின் விதானத்தில் ஒரே கல்லால் ஆன இந்தச் சிற்பம் அமைந்துள்ளது. வாயில் கவ்வியபடி பாய்ந்தோடும் சிம்மத்தின் உருவம். அதன் வாயில் நான்கு கல் வளையங்கள் கொண்ட கற்சங்கிலி இருக்கிறது. அதில் கடைசி வளையத்தில் தாமரை மலர் போன்ற அழகான அமைப்பு நுட்பமான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது.

சிம்மத்தின் முடிக்கற்றை இரண்டு அடுக்குகளாக, நுனியில் சுருண்டும் அழகாகவும் நுட்பமாகவும் காணப்படுகின்றது. சிம்மத்தின் வால் பகுதியிலும், பின்னங்கால் தொடைப் பகுதியிலும், முன்னங்கால் பகுதியிலும் கொடி போன்ற நுணுக்கமான பூவேலைப்பாடுகள் சிறப்பாக உள்ளன. இதை பார்க்கும்போது பாண்டியர் காலத்தைச் சேர்ந்ததோ என்று தோன்றுகிறது. வாயில் உள்ள கல் வளையங்கள் காற்றில் லேசாக அசைந்து ஆடுகின்றன.

இதை ஒருவர் மட்டுமே உருவாக்கி இருக்க முடியாது. பலர் சேர்ந்து உழைத்து இருப்பார்கள் போலும். எந்தவிதத் தொழில்நுட்ப வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் சிறிய சிற்றுளி, சுத்தியல், மனித சக்தி ஆகியவற்றை மட்டுமே நம்பி கடுமையாக உழைத்து உருவாக்கி இருக்கிறார்கள்.

இந்தச் சிலையை முழுவதும் செதுக்கிய பின் தூக்கி விதானத்தில் நிறுத்தினரா அல்லது சிம்மமும் கொடி போன்ற பூ வேலைப்பாடுகள் வரை முடித்து தூக்கி விதானத்தில் நிறுத்தி, பின்னர் வாயில் உள்ள வளையங்களைச் செதுக்கி இருப்பார்களா எனத் தெரியவில்லை.

நான்கு வளையங்களும் ஒரே சீராக, ஒரே அளவில் மிகவும் துல்லியமாக ஒன்றுக்குள் ஒன்றாகக் கோர்த்தபடி அமைத்தவிதம் வெகு சிறப்பு. இதுபோன்ற கற்சங்கிலிகள் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலிலும், சேலம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயிலிலும் காணப்படுகின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in