

மனிதர்களிடையே அன்பைப் பரப்பி, சமூகத்தின் இருப்புக்கும் மேன்மைக்கும் உதவும் நோக்கில் உருவானவையே மதங்கள். ஆனால், இன்று மதங்களின் பெயரால் உலகம் துண்டாடப் பட்டுவருகிறது.
தான், தனது, தன் நம்பிக்கை, தன் மதமே உயர்வு எனும் மனப்போக்கு போன்றவை பிற மதங்களின் மீதும், பிறர் மீதும் வெறுப்பை உமிழ்ந்து இந்தத் துண்டாட்டத்துக்குத் துணைநிற்கின்றன.
அகங்காரத்தை அகற்றி, தன்முனைப்பைக் களைந்து, சக மனிதர்களை நேசிக்க வைப்பதே மதங்களின் அடிப்படை நோக்கம். அதுவே உண் மையான ஆன்மிகமும்கூட. இந்த அடிப்படை உண்மை இன்று வெறுப்பின் ஆழத்தில் தொலைந்துவிட்டது.
இந்த உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கு, மதங்களின் நோக்கம் குறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும். அந்தப் புரிதலை ஏற்படுத்துவதற்கான முன்னெடுப்புகள் உலகெங்கும் நடந்து வருகின்றன. சென்னை மயிலாப்பூரில் இயங்கிவரும் ரஹ்மத் பதிப்பகமும் அத்தகைய முன்னெடுப்புகளில் ஒன்றே.
அறிஞர் குழுவின் உழைப்பு
இன்றைய தேதியில் மிகவும் தவறாகச் சித்தரிக்கப்படும் மதமாக இஸ்லாம் உள்ளது. இஸ்லாம் குறித்து இஸ்லாமியர்களுக்கே தவறான புரிதல் நிலவும் காலகட்டம் இது. இந்த நிலையில், கடந்த 25 ஆண்டுகளாக இஸ்லாத்தின் அடிப்படை உண்மையை மக்களிடம் எடுத்துச் செல்லும் பெரும்பணியில் இந்தப் பதிப்பகம் தொய்வின்றி ஈடுபட்டு வருகிறது.
அரபி மூல நூல்களான புகாரி, முஸ்லீம், திர்மிதி, அபூதாவூத், தப்சீர் இப்னு கஸீர், நபி மொழிகள் முதலான பல்வேறு முக்கியமான புத்தகங்களைத் தெள்ளிய தமிழில் சிரத்தையுடன் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறது. அரபிமொழியிலும் தமிழ் மொழியிலும் நன்கு தேர்ச்சிபெற்ற பெரும் அறிஞர் குழுவின் 20 ஆண்டு கால உழைப்பில் உருவாகியிருக்கும் படைப்புகள் அவை.
பொதுவாக, மூல நூலின் உண்மையான கூறுகள் மொழிமாற்றத்தில் சிக்கிச் சிதைந்துவிடும். மூல நூல்களின் உண்மையான இயல்புகளை மக்களிடம் கடத்திச் செல்வதில் அடைந்திருக்கும் வெற்றியிலிருந்து அந்த அறிஞர் குழுவின் உழைப்பை நாம் அறிந்துகொள்ளலாம்.
இஸ்லாம் தொடர்பான நூல்கள் மட்டுமல்லாமல், கால்டுவெல் குறித்த புத்தகம், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையின் ‘கையருகே நிலா’, மலைச்சாமி ஐ.ஏ.எஸ்-ன் வாழ்க்கை வரலாறு, மலேசியத் தமிழ்க் கவிஞர்கள் குறித்த புத்தகம் உள்ளிட்ட பல முக்கியமான படைப்புகளையும் இப்பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. ‘என்னைக் கடவுளாக்கி வணங்காதீர்கள்’ எனும் சிறிய, எளிய, கையடக்கப் புத்தகம் ரஹ்மத் பதிப்பகத்தின் படைப்புகளில் உன்னதமானது; முதன்மையானதும்கூட.
சொல்லும் செயலும் ஒன்று
அரேபியப் பாலைவனத்தில், எவ்வித நெறிகளுமற்று, மூர்க்கமும் வன்மமும் கொண்டு திரிந்த பெரும் மக்கள் கூட்டத்தை, தன் வாழ்நாளிலேயே நல்வழிப்படுத்தியவர் முகமது நபி. அத்தகைய பெருந்தலைவரை இறைத் தூதராகவும், இஸ்லாம் மார்க்கத்தைத் தந்தவராகவும் மட்டுமே நமக்குத் தெரியும்.
வரலாற்றில் ரத்தமும் சதையுமாக வாழ்ந்திருக்கும் அந்தப் பெருந்தலைவரின் வாழ்வை அழகிய தமிழில் உள்ளது உள்ள படியே பதிவுசெய்து அவரை நம் மனத்துக்கு மிக அருகில் அழைத்துவரும் அற்புதத்தை இந்த எளிய புத்தகம் நிகழ்த்துகிறது.
இந்த உலகில் அவர் வாழ்ந்த 63 ஆண்டுகளும் அவரது சொல்லும் செயலும் வேறாக இருந்ததில்லை. எளிய, உண்மையான வாழ்க்கை அவருடையது. முகமது நபியின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையே நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன.
தானாக உயரும் மரியாதை
ரமலான் மாதத்தில் ஹிரா குகைக்குச் சென்றதிலிருந்து நபிகளின் வாழ்வும் இலக்கும் இறையால் மாற்றப்பட்டது என்பது நமக்குத் தெரியும். ஆனால், அதற்கு முந்தைய காலகட்டத்தில் குறிப்பாக 25 வயதில் அவர் வாழ்க்கையில் கடைப்பிடித்த நெறிகள் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. கதீஜா அம்மையார் அவர் வாழ்வில் வந்த விதமும் இந்த நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் அவர் புரிந்த சிறு வணிகம், அதில் அவர் கடைப்பிடித்த நேர்மை குறித்த விவரிப்புகள் நமக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கின்றன. ஹிரா குகையில் வானவர் செய்தி கிடைத்த அனுபவத்தில் நடுங்கி கதீஜா அம்மையாரிடம் செய்த பகிர்வு, பாதிரியார் வராகாவுடனான சந்திப்பு உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
‘இறைத் தூதரின் மகன் இறந்த தினத்தன்று சூரிய கிரகணம் நிகழும். அதை வைத்து நகர மாந்தர் ஊகக் கதைகளைக் கட்டவிழ்த்துவிடுவர். அவர்களை அழைத்து, ‘சூரிய கிரகணத்துக்கும் என் மகன் இறப்புக்கும் சம்பந்தம் இல்லை. நான் வெறும் மனிதன்.
இறைச் செய்தி என் மூலம் இறங்குகிறது என்னும் ஒரு விஷயத்தைத் தவிர மற்றபடி நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனிதன்தான்!’ என்று நபிகள் நாயகம் அறிவித்தார்’ என்பதைப் படிக்கும்போது அவரின் மீது நாம் கொண்டிருக்கும் மரியாதை தானாக உயர்கிறது.
முகமது நபி குறித்துத் தேவையற்ற அவதூறுகள் பரப்பப்படும் இன்றைய காலகட்டத்தில், இந்த நூல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; உலக மக்கள் அனைவருக்கும் தேவையானது.