

நாகசுர மேதை காருக்குறிச்சி அருணாசலத்துக்கு நூற்றாண்டு வைபவங்கள் ஆங்காங்கே விமரிசையாக நடந்தவண்ணம் உள்ளன. இந்தத் தருணத்தில் அந்த மேதையால் வாசிக்கப்பட்ட நாகசுர இசைக் கருவியை செய்த சிற்பி ரங்கநாத ஆசாரியின் தலைமுறையை நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.
நரசிங்கம்பேட்டை நாகசுர சிற்பிகள் கோவிந்தசாமி ஆசாரி, நாராயணசாமி ஆசாரி, ரங்கநாத ஆசாரி, செல்வராஜ் ஆசாரி இவர்களைத் தொடர்ந்து ஐந்தாவது தலைமுறையாக நாகசுர சிற்பிகளாக தங்களை மேம்படுத்திக் கொண்டிருக்கின்றனர் சதீஷ் மற்றும் பிரகாஷ் ஆசாரி சகோதரர்கள்.
இருவரும் தங்களின் தாத்தா ரங்கநாத ஆசாரி நாகசுர சிற்பியாக செய்த செயற்கரிய சாதனைகள் மற்றும் மங்கல வாத்தியமான நாகசுர வாசிப்பு முறைகள் குறித்துப் பெரிய கலைஞர்கள் அவர்களிடம் வெளிப்படுத்திய கருத்துகள் எனப் பலவற்றைக் குறித்தும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
பாரம்பரியமான நம்முடைய பக்தி இசைப் பத்ததியில் `பெரிய மேளம்’ என்று கொண்டாடப்படுவது நாகசுரமும் தவிலும். ஆலய சடங்குகளில் சுவாமி புறப்பாடு, அபிசேகம், ஆராதனை, உச்சிக் கால பூஜை நியமங்களில் வாசிக்கப்படும் வாத்தியங்களாக இவை காலம் காலமாக மதிக்கப்படுகின்றன. இறைவனுக்கு முதல் மரியாதையாக பெரிய மேளம் வாசித்த பின்பே, `சின்ன மேளம்’ என்று அழைக்கப்பட்ட பரதநாட்டிய நிகழ்ச்சிகள் ஆலயங்களில் தொன்று தொட்டு நடந்திருக்கின்றன.
ராமாயண காலத்து மரம்
நாகசுரம் செய்வதற்குப் பயன்படும் ஆச்சா மரம், ராமாயணக் காலத்திலேயே இருந்ததாகப் பல குறிப்புகள் உள்ளன. “ ராமாயணக் காலத்துல இதுக்கு `மறாமரம்’னு பேரு. வாலியோட உயிர் ஏழு மறாமரத்தில் இருந்தது. ராமன் ஒரே பாணத்துல ஏழு மரங்களையும் தொளைக்கிறாரு. இப்படித்தான் வாலி வதம் நடக்கிறது. அத்தகைய வலிமையுள்ள அந்த மரம்தான் ஆச்சா மரம். அந்த ஆச்சா மரத்தில்தான் நாகசுரம் செய்கிறோம்” என்னும் குறிப்பு, ஆலயங்களில் வாசிக்கப்படும் மங்கல வாத்தியங்கள் பற்றி சௌதாமினி உருவாக்கியிருக்கும் ஆவணப்படத்தில் இருக்கின்றது.
இசை கொடுக்கும் நாணல்
நாகசுரத்தில் ஒலியை எழுப்புவதற்கு மெல்லிய இடைவெளியுடன்கூடிய சீவாளி பயன்படுகிறது. சீவாளியை வாயில் வைத்து காற்றை ஊதும்போது, நாகசுரத்தின் துளைகள் மூடித், திறப்பதின்மூலம் ஸ்வரக் கட்டுகளுடன் கூடிய இசை வெளிப்படும். `ஜீவன்’ என்றால் உயிர். `வளி’ என்றால் காற்று. இதைச் சேர்ந்தே `சீவாளி’ என்னும் வார்த்தை பிறந்ததாகக் கூறுவார்கள்.
ஒருவகையான நாணலில் செய்யப்படுவதுதான் சீவாளி. இந்த நாணலை பதப்படுத்தி, மிருதுவாக்கி, வெட்டிச் சீவிதான் சீவாளி செய்யப்படுகிறது. பதப்படுத்துதல், சீவாளியை பழக்குதல் எல்லாமே நாதத்தை மேம்படுத்தும் அம்சமாக மதிக்கப்படுகிறது.
இரண்டு வகை நாகசுரங்கள்
பன்னெடுங்காலமாக திமிரி என்னும் நாகசுரத்தையே வாசித்துவந்தனர். இதன் நீளம் குறைவாக இருக்கும். இதில் சில மாற்றங்களோடு நாகசுவர மேதை டி.என்.ராஜரத்தினம் பிள்ளை அறிமுகப்படுத்தியதுதான் தற்போது வழக்கத்திலிருக்கும் பாரி நாகசுரம். திமிரி நாகசுரத்தைவிட, பாரி நாகசுரம் நீளமாக இருப்பதுடன், நீண்ட நேரம் கலைஞர்கள் வாசிப்பதற்கேற்ற ஸ்ருதி அளவுகளுடனும் இருப்பது இதன் சிறப்பு.
ஆலயங்களில் நாகசுரம் வாசிக்கும் முறை
நாகசுர வாசிப்பில் மல்லாரி வாசிப்பது என்று ஒரு முறை இருக்கிறது. இது குரு, சிஷ்ய பாணியில் வழிவழியாக வாசிக்கப்படுகிறது. ஆலயங்களில் விக்ரகங்களுக்கு அபிஷேகம் செய்யப்படும்போது, தீர்த்த மல்லாரி, அபிஷேகம் முடிந்து, அலங்காரம் முடிந்து நைவேத்யம் செய்யும் போது தளிகை மல்லாரி, சுவாமி எழுந்தருளும்போது பெரிய மல்லாரி, சின்ன மல்லாரி ஆகியவை நாகசுரத்தில் வாசிக்கப்படும். மல்லாரியில் வெளிப்படும் இசை ஒழுங்கைக் கொண்டு, ஆலயத்தில் இன்னின்ன சடங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதை கிராமத்தில் வீட்டிற்குள் இருக்கும் மக்களும் தெரிந்து கொள்வார்களாம்.
நாதமயமான நரசிங்கம்பேட்டை
கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 15 கீ.மீ. தூரத்தில் இருக்கிறது நரசிங்கன்பேட்டை. இங்கு நாகசுரம் தயாரிப்பில் தலைசிறந்த பல பாரம்பரியமான குடும்பங்கள் உள்ளன. இவர்களில் எங்களின் முன்னோர்களான தாத்தா நாராயணசாமி, அவரோட அப்பா கோவிந்தசாமி எல்லாருக்கும் இந்தத் தொழில்தான். அப்போதெல்லாம் `சமசுதி’ என்னும் அடிப்படையில்தான் நாகசுரத்தில் ஸ்ருதிகளின் பயன்பாட்டை ஒழுங்குபடுத்தியிருந்தனர். இன்னும் தெளிவாக சொல்வதாக இருந்தால், சுத்த மத்யமம் ஸ்வரத்தை அன்றைக்கு புழக்கத்தில் இருந்த நாகசுரத்தில் வாசிக்க முடியாது. அதை மாற்றிக் காட்டியவர் ரங்கநாத ஆச்சாரி.
நாகசுர சக்கரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை வாசிக்கத் தொடங்கிய நாட்களில் சிறிய ஐந்து கட்டை ஸ்ருதியில் ஒலித்த திமிரி நாயனம் என்பதே புழக்கத்தில் இருந்தது. மிகவும் வாசிப்பில் தன்னிகரற்ற கலைஞர்களுக்குக் கூட, திமிரி நாகசுரத்தில் ஸ்வரங்களை துல்லியமாக வாசிப்பதற்கு முடியாத நிலையே நீடித்தது. அதிலும் சுத்த மத்திம ஸ்வரத்தை வாசிக்க கலைஞர்கள் பெரும்பாடுபட்டனர். திண்டாடினர்.
இந்தக் காலகட்டத்தில் 1943இல் நரசிங்கம்பேட்டையில் நாகசுர சிற்பியாக இருந்த ரங்கநாத ஆசாரி, இரண்டு கட்டை ஸ்ருதியில் வாசிக்கக் கூடிய அளவில் சற்று பெரிய நாகசுரத்தை வடிவமைத்தார். அதோடு, அவருக்கு தான் கண்டறிந்த வாத்தியத்தை மகத்தான ஒரு கலைஞரிடம் கொடுத்து வாசித்துப் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. நரசிங்கம்பேட்டைக்கு அடுத்த ஊரிலிருந்த டி.என். ராஜரத்தினம் பிள்ளையைச் சந்தித்து தன் கண்டுபிடிப்பைக் காட்டினார் ரங்கநாத ஆசாரி. ஆர்வத்தோடு அந்த நாகசுரத்தை வாசித்துப் பார்த்த ராஜரத்தினம், அந்த நாகசுரத்தில் அனைத்து ஸ்வரங்களும் துல்லியமாக பிரவாகமாகப் பெருகுவதைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார்.
அன்றிலிருந்து அவர் அதுவரை வாசித்து வந்த திமிரி நாயனத்துக்கு விடைகொடுத்தார். ரங்கநாத ஆசாரி உருவாக்கிய பாரி நாயனத்திலேயே தன் வாழ்நாள் முழுவதும் வாசித்தார். அவரின் இசை வாழ்வுக்கு மிகவும் நெருக்கமான பாரி நாயனத்தை உருவாக்கித் தந்த ரங்கநாத ஆசாரிக்கு, தன் வாழ்நாளின் இறுதிக் கட்டத்தில் எழுதிய கடிதத்தில் தமிழக அரசும் மற்ற நாகசுரக் கலைஞர்களும் ரங்கநாத ஆசாரிக்கு ஆதரவு வழங்க வேண்டுமாய் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாகசுர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளைக்குப் பின் தான் உருவாக்கிய பாரி நாயனத்தை, காருக்குறிச்சி அருணாசலத்துக்கு அளித்தார் ரங்கநாத ஆசாரி. `கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில் இடம்பெற்ற சிங்காரவேலனே தேவா... பாட்டின் வெற்றிக்கு தான் நாயனம் வாசித்தது மட்டும் காரணம் அல்ல, வாத்தியத்தை உருவாக்கியவரின் கலை நேர்த்தியும் சேர்த்துதான் இதற்குக் காரணம் என்பதை இசை உலகத்துக்கு அறிவித்தார் காருக்குறிச்சி.
பாரி நாயனம் உருவாக்கம்
பண்ருட்டி, விழுப்புரம், மரக்காணம், பாண்டிச்சேரி, செங்கல்பட்டு போன்ற சிற்றூர்களில் பழைய வீடுகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் நூறாண்டுகளுக்கு முந்திய ஆச்சா மரங்களைக் கொண்டு நாகசுரம் செய்யப்படுகிறது.
ஆச்சா மரத்தை இரண்டரை அடி நீளத்தில் அளவாக வெட்டி, கடைந்துகொள்வோம். பின் அதை திரட்டி உள்துவாரம் ஒன்று போட்டு, அதை அளவுகள் பெரிதாக்கி கொண்டு, மறுபடியும் கடைந்து 12 பிரம்மாஸ்திரங்கள் போட்டு வாசிக்கும் அளவுக்கு செய்வோம். முதலில் குழல் பாகம் பின் அணசுபாகம். குழல் பாகத்தின் நடுவில் ஓட்டை கொடுத்து கடைவதுதான் கஷ்டம். நடுப்பாகத்தில் ஓட்டையைப் பொறுத்துதான் நாகசுரத்தின் ஓசை அமையும்.
இதில் 12 துளைகள் போடுவதிலும் கவனம் அதிகம் வேண்டும். நூல் பிசகினாலும் நாதம் வராது. எங்களின் தாத்தா ரங்கநாத ஆசாரி சுத்த மத்திம நாகசுரத்தை இந்த முறையில் உருவாக்கிதான் சாதனை படைத்தார்.
மரத்தினால் செய்யப்படும் இந்த இசைக் கருவியில் மூன்று பகுதிகள் உள்ளன. ஸ்வரங்கள் வாசிக்க வேண்டிய துளைகளுடன் கூடிய உடற்பகுதியை `உலவு’ என்று அழைப்பார்கள். `உலவின்’ ஒரு முனையில் கூம்பு வடிவிலான `அணைசு’ இடம்பெறும். மற்றொரு முனையில் கெண்டையின் துணைகொண்டு ஊதுவதற்கான சீவாளி இணைக்கப்படும்.
சீவாளி, காவிரி ஆற்றின் கரைகளில் விளையும் கொறுக்கைத் தட்டை என்கிற நாணலில் இருந்து செய்யப்படுகிறது. கோயிலை ஒட்டி வளர்ந்த கலையின் கருவியான நாகசுரத்தில், வெவ்வேறு தருணத்தில் வாசிப்பதற்கென்று பல உருப்படிகள் உள்ளன. அதில் முக்கியமானவை மல்லாரிகள்.
மல்லாரிகளில் பல வகை உண்டு. இறைவனுக்கு திருவமுது படைக்க மடைப்பள்ளியில் இருந்து உணவு கொண்டு வரும்போது வாசிக்கப்படுவது தளிகை மல்லாரி. தேர்த்திருவிழாவின் போது வாசிக்கப்படுவது தேர் மல்லாரி. பொதுவாக மல்லாரி வாசிப்பு கம்பீர நாட்டை ராகத்தில் அமைந்திருக்கும்.
நாகசுர சக்கரவர்த்தி டி.என். ராஜரத்தினம் பிள்ளையால் `ஏக சக்ராதிபதி’ விருது பெற்றவர் எங்களின் தாத்தா ரங்கநாத ஆசாரி. அதோடு அவர் பெருந்தலைவர் காமராஜரால் சிறந்த நாகசுர கைவினைஞர் என்று பாராட்டப்பட்டவர். `கைகள் பேசும் கலை நயம்' எனும் சினிமா தொடரில் எங்களின் தாத்தா ரங்கநாத ஆசாரி நாகசுரத்தை உருவாக்கும் கலை நுட்பம் பதிவாகி உள்ளது. எங்களின் இந்த நாகசுர தயாரிப்புகளுக்கு அண்மையில் புவிசார் அங்கிகாரம் கிடைத்திருப்பது, இந்தக் கலையில் இன்னமும் எங்களின் ஈடுபாட்டை அதிகரிக்கும் என்றனர் சதீஷ், பிரகாஷ் சகோதரர்கள்.