பெரியவரின் மனக் கணக்கு

பெரியவரின் மனக் கணக்கு
Updated on
1 min read

முன்னொரு காலத்தில் அரேபியாவில் ஒரு வயதானவர் மரணப் படுக்கையில் இருந்த போது, தனது மூன்று மகன்களையும் அருகே அழைத்துச் சொன்னார்:

“மக்களே! நான் இறுதி மூச்சில் இருக்கிறேன். எனது சொத்தை மூவரும் பங்கிட்டுக்கொள்ளும் கணக்கைச் சொல்கிறேன், கேளுங்கள்” என மூச்சிரைக்கச் சொன்னார்.

“மூத்தவன் என் மொத்தச் சொத்தில் பாதியும், நடுவன் என் மொத்தச் சொத்தில் மூன்றில் ஒரு பங்கும், கடைசியான் என் மொத்தச் சொத்தில் ஒன்பதில் ஒரு பங்கும் பிரித்துக் கொள்ள வேண்டும்” எனச் சொல்லிவிட்டுக் கண் மூடினார்.

அவருடைய மொத்தச் சொத்து எவ்வளவு தெரியுமா?

17 ஒட்டகங்கள் மட்டுமே!

மகன்கள் மூவரும் எப்படிப் பிரிப்பதெனக் குழம்பி, சச்சரவிட்டுக் கொண்டவர்கள், முடிவாக ஊரில் இருந்த தனது தந்தையின் நெருங்கிய நண்பரிடம் பஞ்சாயத்து வைத்தனர்.

அவர் மனமிரங்கிப் பேசினார்:

“மக்களே, நான் ஏழை. என்னிடம் ஒரு ஒட்டகம் உள்ளது. அதை உங்களுக்குத் தருகிறேன்” என்றார்.

மகன்கள் மூவரும் வியந்து மேலும் குழம்பினர்.

அவர் தொடர்ந்தார்:

என் ஒரு ஒட்டகத்தையும் நான் உங்களுக்குத் தந்தால், இப்போது உங்களிடம், உங்கள் தகப்பனார் தந்த 17 ஒட்டகங்களுடன் இதுவும் சேர்த்து 18 ஆகிறதல்லவா?”

மூன்று மகன்களும் தலையாட்டியபடி விழித்தனர்.

“இப்போது இந்த 18 ஒட்டகங்களையும் உங்கள் தந்தையின் கணக்குப்படி பிரித்துப் பார்ப்போம். 18இல் பாதி எனில், மூத்தவனுக்கு ஒன்பது ஒட்டகங்கள்.

நடுவனுக்கு, 18இல் மூன்றில் ஒரு பங்கு எனில் 6 ஒட்டகங்கள்.

கடைசியானுக்கு 18இல், ஒன்பதில் ஒரு பங்கு எனில் 2 ஒட்டகங்கள், என ஆக 9 6 2 = 17 ஒட்டகங்கள் எனக் கணக்கு சரியாக வருகிறதல்லவா?" என்றார் உற்சாகமாக.

மொத்தம் 18 ஒட்டகங்களில் 17 ஐ ஆத்ம நண்பரின் மூன்று மகன்களுக்கும் பிரித்தது போக ஒன்று மிச்சமாக நின்றது. ஈந்த அந்த தன் ஒட்டகம், மீந்ததை, அந்தப் பெரியவர் மகிழ்வாகக் கொண்டார்.

“ஓ..அல்லாஹ்வே! எங்கள் புரிதல்களை யெல்லாம் கடந்து மேன்மையானது உனது ஞானப் பேரறிவே” - எனக் கண்கள் பணித்தார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in