

சிவகங்கை மாவட்டத்தில் பச்செரிச்சில் மலை என்னும் பெயரில் அழைக்கப்பட்டு, காலப்போக்கில் மருவி ‘பூலாங்குறிச்சி’ என இந்நாளில் அழைக்கப்படுகிறது ஒரு சிற்றூர். அவ்வூரின் உயர்ந்தோங்கியிருக்கும் மலைத் தொடரின் தெற்குச் சரிவில் அருள்மிகு சிங்காரவேலன் கோயில் கம்பீரமாக அமைந்துள்ளது.
தெற்கு பார்த்த வண்ணம் அமைந்துள்ள கோயிலின் நுழைவாயிலில் மூன்று நிலை ராஜ கோபுரம் அழகுற அமைந் துள்ளது. கோயிலின் கிழக்குப் பக்கமாக பிரம்மாண்டமான சண்முகா நதி ஊருணி என்னும் தெப்பக் குளம் உள்ளது. மலை உச்சியிலிருந்து பெருகிவரும் மழைநீரும் சுனைநீரும் இக்குளத்தில் நிரம்பி ஆண்டு முழுவதும் நீர் நிரம்பி வழிகிறது.
கோயிலின் பிரதான வாசலைத் தாண்டி நுழைந்ததும், 32 பிரம்மாண்டத் தூண்கள் தாங்கி நிற்கும் கலைநய மிக்க முகமண்டபம் அமைந்துள்ளது. வள்ளி, தெய்வானை சமேத சிங்காரவேலன், சண்முக விநாயகர், தட்சிணாமூர்த்தி, சகஸ்ரலிங்கம், மீனாட்சி அம்மன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள், துர்க்கை, நவகிரகம், பஞ்சமுக ஆஞ்சநேயர், ஸ்வர்ண ஆகர்ஷ்ண பைரவர், கருடாழ்வார் ஆகிய சந்நிதிகள் வடக்கிலிருந்து தெற்காக வரிசையாக அமைந்துள்ளன. முகமண்டபத் தூண்களில் எழிலான சிற்பங்களைக் கண்கவர் வண்ணத்தில் அமைத்துள்ளனர்.
இதில் யோக தட்சிணாமூர்த்தி சந்நிதி தெற்கு பார்த்து உள்ளது. இத்தலத்தின் தலவிருட்சம் நெல்லி மரம். மூலவர் சிங்காரவேலன் சந்நிதி வாசலில் ஜெயன், விஜயன் சிற்பங்கள் உள்ளன. சந்நிதிக்கு எதிரே பலிபீடம், மயில் வாகன பீடம் ஆகியவை உள்ளன. இக்கோயிலில் நடைபெறும் முக்கிய வைபவம் வைகாசி விசாகத் திருவிழா. வழக்கமாக இந்த ஆண்டும் ஜூன் 11, 12 ஆகிய நாள்களில் விமரிசையாகக் கொண்டாடப்படவிருக்கிறது.
பக்தர்களின் அலை
வைகாசி விசாக நாளான ஜூன் 12ஆம் நாள் மாலையில் சிங்கார வேலன் திருக்கல்யாணமும் சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணமும் நடைபெறும். இத்திருநாளையொட்டி சுற்றுவட்டார கிராமத்தினர் ஆயிரக்கணக்கில் இவ்விழாவில் பங்கேற்று குமரப் பெருமானின் அருளைப் பெற்று மகிழ்வர். இரவு சுவாமி புறப்பாடாகி வீதியுலா நிகழ்ச்சி வாணவேடிக்கையுடன் நடைபெறும். இந்த இரு நாள்களும் ஊரே விழாக்கோலத்தில் நிறைந்திருக்கும்.
தனித்துவ நவகிரக தரிசனம்
சகஸ்ரலிங்க சந்நிதி வாசலில் துவாரபாலகர் சிற்பங்கள், பலி பீடம், நந்தி தேவர் பீடம் ஆகியவை உள்ளன. துர்க்கை அம்மன் சந்நிதி வாசலில் துவார சக்தியர் சிற்பங்கள் உள்ளன. கிழக்குச் சுற்றில் அமைந்துள்ள நவகிரக சந்நிதி தனித்துவமிக்கதாய் அமைந்துள்ளது. நவகிரக நாயகர்கள் தத்தமது துணைவியோடு தமக்குரிய வாகனத்தில் அருள்பாலிப்பது இத்தலத்தின் சிறப்பு.
மாங்கல்ய யோகம் கிடைக்கப் பெறாதவர்கள் இந்தச் சந்நிதியில் பிரார்த்தித்தால் பலன் கிடைக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதேபோல் வெளிநாட்டில் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இத்தலத்தின் பஞ்சமுக ஆஞ்சநேயரின் அருளால் பணி கிடைக்கிறது என்பதும் இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
ஆண்டுமுழுவதும் திருவிழாக் கோலம்
ஆண்டு முழுவதும் அநேக உற்சவங்கள் இத்தலத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. வைகாசி விசாகத்தன்று இரவு சுவாமி புறப்பாடு விமரிசையாக நடைபெறும். விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை தோறும் கருட சேவை தரிசனம், நவராத்திரி கொலு உற்சவம், கந்த சஷ்டியை ஒட்டி முருகனுக்கு ஏகதின லட்சார்ச்ச னையும் புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை பெருமாளுக்கு ஏகதின லட்சார்ச்சனையும் ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
இதில் சுழற்சி முறையில், ஓர் ஆண்டு முருகனுக்கும் மறு ஆண்டு பெருமாளுக்கும் இப்பெருவிழா கொண்டாடப்படுகிறது. ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவாரம்தோறும் 108 சங்காபிஷேக வழிபாடு, கார்த்திகை மகா தீபம், மார்கழி மாதம் திருப்பள்ளியெழுச்சி, ஆருத்ரா தரிசனம், தைப்பொங்கல், மாட்டுப் பொங்கல், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரத்தை முன்னிட்டு முருகனுக்கு ஆராதனை எனப் பல்வேறு விழாக்களும் சிறப்பாக நடத்தப்படுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி - திருப்பத்தூர் நெடுஞ்சாலையில் 5 கி.மீ. தொலை வில் பூலாங்குறிச்சி சிங்காரவேலன் கோயில் அமைந்துள்ளது.