

மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பொ.ஆ. 1569இல் அரியநாத முதலியார் காலத்தில் கட்டப்பட்ட ஆயிரம் கால் மண்டபத்தில் உள்ள வேடன் சிற்பத்தின் மத்திமத் தோற்றம் இது.
முதலில் சிகையலங்காரத்தைப் பார்ப்போம். தலை முடியைக் கொத்தாகச் சுருட்டி அதில் ஒரு கயிற்றால் கட்டியதுபோல் உள்ளது. இதைப் பார்க்கும்போது தற்காலத்தில் பெண்கள் தலைமுடியைச் சுருட்டி, அவிழாமல் இருக்க ‘ரப்பர் பேண்ட்’ போடுவார்களே அதுபோல் உள்ளது. இந்த வளையத்தில் மணிகள், பூக்கள், வண்ணத்துப்பூச்சி போன்ற செயற்கை உருவங்கள் இருப்பதுபோல, வேடனின் சிகையைப் பிடித்திருக்கும் வளையத்தில் பவளம், முத்துக்கள் என இருபுறமும் மாறிமாறி இருக்கின்றன.
‘இன்றைய நவநாகரிகத்தின் முன்னோடிகள் நாங்கள்தான்' என அன்றே அறிவிப்பதுபோல் இருக்கின்றன அந்தச் சிற்பத்தின் வேலைப்பாடுகள். அது மட்டுமல்ல, உருண்ட கொண்டையின் நுனியில் இருக்கும் முடி தனியாகத் தெரிவது சிறப்பு. அதில் பறவையின் இறகுகளைச் சூடியிருப்பது அழகோ அழகு. காதோரம் தாமரை மலர் போன்ற அணிகளும் மணிகளும் சேர்ந்த அணிகலன்கள் நுட்பமாகக் கட்டப்பட்டுள்ளன. காதுகளில் நம் பாட்டிகள் அணிந்திருக்கும் பாம்படம் போன்று நான்கு குண்டுகள் கொண்ட காதணியை அணிந்துள்ளார்.
முகத்தில் மந்தகாசமும், இதழில் மென் புன்னகையுமாகக் காட்சி தரும் இவரது மீசை நீண்டு தொங்குவதைப் பார்த்தால் அது மீசையா, குறுவாளா என்று சந்தேகிக்க வைக்கிறது. சீன யாத்ரிகர்கள் யுவான் சுவாங், பாஹியான் போன்றவர்களின் வரவால் ஏற்பட்ட பாதிப்போ? கழுத்திலும் மார்பிலும் தோள்களிலும் கைகளிலும் கைவிரல்களிலும் மோதிரங்கள் உள்பட வித்தியாசமான அணிமணிகளை அணிந்துள்ளார்.
பரந்து விரிந்த மார்பும் தோள்களுமாக இடையைச் சற்று வளைத்து நிற்கும் பாங்கே தனி அழகு. வலது கையால் சின்முத்திரை காட்டியபடி இடது கையை நடராஜர்போல் வைத்திருக்கும் நிலையைப் பார்க்கும்போது நடனமாடும் கோலம்போல் தெரிகிறது.
கைவிரல்களைப் பாருங்கள். விரல்களில் உள்ளங்கை பக்கம் மூன்று மடிப்புகளும் இடது கை விரல்களில் மேல்புறத்தில் காணப்படும் சுருக்கங்களும் நகங்களும்கூட நிஜம்போல் வடித்த சிற்பியின் திறமைக்குத் தலைவணங்குகிறேன். இடையில் குறுவாளும் அதில் தொங்கும் சாமரம் போன்ற குஞ்சலமும் சிறப்பு.
இடதுகைக் கக்கத்தில் வில்லையும், இடையில் உள்ள ஆடை, அணிமணிகளையும் பார்க்கும்போது வேடர்களும், குறவர்களும் நிறைய அணிமணிகளுடன் மிகவும் வளமாகவும் செழிப்பாகவும் வாழ்ந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.