

மற்றவர்கள் நம்மை பாகுபாடாக நடத் தும்போது அதை மனவலியுடன் எதிர் கொண்டிருப்போம். ஆனால், நம்மிடமும் அத்தகைய பாகுபாடு காட்டும் மனோபாவம் இருப் பதை ஏனோ நாம் உணர்வதில்லை. உணர்ந்தாலும் அதைத் தவறென்று நாம் நினைப்பதில்லை.
வாழும் இடம், பேசும் மொழி, செய்யும் தொழில், பின்பற்றும் மதம், சாதி, பாலினம், பொருளாதார நிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து சக மனிதர்கள் மீது பாகுபாடு காட்டுகிறவர்களாக இருக்கிறோம். நகரங்களில் இந்தப் பாகுபாடு இல்லை என்று சிலர் கூறலாம். ஆனால், அங்கும் பாகுபாடுகள் இருக்கவே செய்கின்றன. நிறம், வயது, படிப்பு, உடல் குறைபாடு, புறத்தோற்றம் ஆகியவற்றை வைத்து சக மனிதர்களை எடைபோடுகிறார்கள்.
பாகுபாடு காட்டுவதைப் பற்றி புனித விவிலியம் என்ன சொல்கிறது என்று பாருங்கள். ‘ஒரே மனிதனிலிருந்து எல்லா நாட்டுக்குமான மக்களையும் உருவாக்கி, அவர்களைப் பூமி முழுவதும் குடியிருக்க வைத்திருக்கிறார்’ என்று அப்போஸ்தலர் புத்தகம் அதிகாரம் 17இல் 26வது வசனம் எடுத்துக்காட்டுகிறது.
அப்படிப்பட்ட கடவுள், இவ்விஷயத்தில் எப்படிப்பட்டவர் என்பதை அப்போஸ்தலரான தூய பேதுரு எடுத்துக்காட்டும்போது, “கடவுள் பாரபட்சம் காட்டாதவர் என்பதையும், அவருக்குப் பயந்து சரியானதைச் செய்கிறவன் எந்தத் தேசத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் இப்போது நான் நன்றாகப் புரிந்துகொண்டேன்” என அதே புத்தகத்தில் பதிவுசெய்திருக்கிறார். ஆக, பாகுபாடு என்பது மனிதர்களாகிய நம்முடைய மிக மோசமான செயல்களில் ஒன்று.
அதேபோல், விண்ணையும் மண்ணையும் படைத்த கடவுள், தாம் தேர்ந்துகொண்ட மனிதர் களில் ஒருவராகிய சாமுவேலிடம் பேசியபோது, “இவன் தோற்றத்தையோ உயரத்தையோ பார்க்காதே. மனிதர்களாகிய நீங்கள் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. நீங்கள் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறீர்கள். ஆனால், நான் இதயத்தைப் பார்க்கிறேன்” என்று சொன்னதை சாமுவேல் புத்தகம் அதிகாரம் 17இல் 7ஆவது வசனம் நமக்குச் சாட்சியாகச் சொல்கிறது.
விவிலியம் காட்டும் பாதையில் நடந்து, உங்கள் மனதிலிருந்து ‘பாகுபாடு’ எனும் அழுக்கினைக் கழுவி உங்களைச் சுத்தப்படுத்திகொள்ள முடிவு செய்துவிட்டீர்களா? இதோ இன்னும் சில எளிய வழிகாட்டல்கள்: சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை மோசமானவர்கள் என்று மற்றொரு பிரிவு மக்களைச் சேர்ந்த சிலரோ பலரோ சொன்னால், அந்தப் பிரிவைச் சேர்ந்த எல்லாருமே அப்படிப்பட்டவர்கள் இல்லை எனும் யதார்த்தத்தை மனதில் இருத்துங்கள்.
ஏனென்றால் எந்தப் பிரிவைச் சேர்ந்தவர் என்றாலும் மற்றவர்களைப் பற்றிய எல்லாமும் நமக்குத் தெரியாது என்பதை மனதில் வையுங்கள். உண்மையைத் தேடித் தெரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். மெய்யான வரலாறு அதற்கு உங்களுக்குத் துணை நிற்கும். பாகுபாடு எந்த வழியில் வந்திருந்தாலும் அது ‘வெறுப்பு’ எனும் செல்லாத நாணயத்தின் இன்னொரு பக்கம்.
தொகுப்பு: ஜெயந்தன்