

அமெரிக்க சாகித்யகர்த்தாக்கள் மன்றம் (American Composers Forum) என்னும் அமைப்பின் சார்பாக சிறந்த சாகித்யகர்த்தாவுக்கான விருதைப் பெற்ற முதல் இந்தியர், தமிழர் என்னும் பெருமைக்குச் சொந்தக்காரர் டி.என்.பாலா.
இந்த விருதை இவருக்குப் பெற்றுத் தந்தது, தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனையின் இசையை அடியொட்டி முருகனின் மீது இவர் பாடியிருக்கும் முருக பஞ்சரத்னம் பாடல்களின் தொகுப்புதான். அப்படிப்பட்ட டி.என்.பாலா, முருகனின் அருளைப் பெற எழுதிய பாடல்தான் ‘விளையாட இது நேரமா?’. மதுரை மணி அய்யரிடம் சங்கீதம் கற்றுக்கொண்டவர் டி.என்.பாலசுப்ரமணியன் (இசை உலகில் டி.என்.பாலா).
‘விளையாட இது நேரமா?’ பாடல் மிகவும் எளிமையானது. ஆனால், அதன் அர்த்தம் அடர்த்தியானது.
“இறைவன் உன்னிடம் என்னுடைய வினைப் பயனைக் கூறி, அதிலிருந்து என்னை விடுவிக்க உன்னிடம் கோரிக்கை வைக்கிறேன். நீயோ என் மீது பாராமுகமாய் இருக்கிறாயே..” என்கிற வேதனையோடு முருகனை வேண்டும் தொனியில் டி.என்.பாலா எழுதிய பாடல் ‘விளையாட இது நேரமா முருகா’. இந்தப் பாடலை கர்னாடக இசை மேடைகளில் பட்டிதொட்டி எங்கும் பாடிப் பிரபலப்படுத்தியவர் மகாராஜபுரம் சந்தானம்.
மிருதங்கம், கஞ்சிரா போன்ற வாத்தியங்களை வாசிப்பதும் பாலாவுக்குக் கைவந்த கலை. சாகித்யங்களை எழுதும் திறமையும் பெற்றவர். கர்னாடக இசைத் துறையில் இவர் நிகழ்த்தியிருக்கும் சாதனைக்காக 1994ஆம் ஆண்டில் கிளீவ்லேண்ட் தியாகராஜ உத்ஸவத்தில் இவர் கவுரவிக்கப்பட்டிருக்கிறார்.
முருகனைப் போற்றிப் பாடும் இந்தப் பாடலை ஷண்முகப்ரியா ராகத்திலேயே டி.என்.பாலா வெகு சிறப்பாக அமைத்திருப்பார். சிறுவன் ஆகாஷ் கீபோர்டிலேயே இந்தப் பாடலுக்கான தாளக்கட்டை நிர்வகித்து அருமையாக இந்தக் காணொளியில் வாசித்திருக்கிறான்.
இசை அறிஞர் பி.வி.எஸ்.ஜெகதீசனிடம் கர்னாடக இசையை கீபோர்டில் வாசிக்கக் கற்றுக் கொண்டிருக்கும் ஆகாஷுக்கு பூர்வீகம் மயிலாடுதுறை, குறுங்குளம். விளையாடத் துடிக்கும் பருவத்தில் இருக்கும் பாலகன் சிரத்தையோடு ‘விளையாட இது நேரமா’ வாசிக்கும் நேர்த்தியும் ராகத்தின் ஆதார ஸ்ருதியோடு முழுப் பாடலையும் அனுபவித்து வாசிக்கும் அழகையும் பார்த்தால் நீங்களும் பாராட்டுவீர்கள்.
பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=WnrB5kuHIrE