

ஸ்ட்ரம் என்டர்டெயின்மென்ட் தயாரித்து வெளியிட்டிருக்கும் இந்த இசைக் காணொளியில் ஊன்றிக் கவனித்தால் பல சிறப்புகளை உங்களால் உணர முடியும். இசைப் பேரரசி எம்.எஸ்.சுப்புலட்சுமி, முத்துசுவாமி தீட்சிதரின் `ரங்கபுர விஹார' கீர்த்தனையைப் பாடிக் கேட்டிருப்போம். இதோ இன்றைய இசை வானில் பிரகாசிக்கும் இளம் நட்சத்திரமான சூர்யகாயத்ரி தனக்கு மூத்த தலைமுறையைச் சேர்ந்த பாடகரின் வழியிலும் பாடாந்தரத்தின் மரபு மாறாமலும் இந்தப் பாடலை பாடியிருப்பதைப் பாருங்கள். சூர்யகாயத்ரி பாடுவதைக் கேட்கும்போது, மூத்த தலைமுறையையும் இளைய தலைமுறையையும் இணைக்கும் பாலமாக இசை மாறியிருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
இதமான வருடலோடு தொடங்கும் சூர்யகாயத்ரியின் குரலோடு பெரி தியாகராஜுவின் வயலினும் நாராயணாவின் வீணையும் மல்லிகார்ஜுனாவின் நாகசுரமும் இயைந்து ஒரு ஜுகல்பந்தி விருந்தை நம் செவிகளுக்குப் படைக்கின்றன.
இந்தப் பாடலை ஹரிஷ் சிவராமகிருஷ்ணன் தொண்டரடிப்பொடி ஆழ்வாரின், "பச்சைமா மலைபோல் மேனி / பவளவாய் கமலச் செங்கண் / அச்சுதா அமரர் ஏறே / ஆயர்தம் கொழுந்தே என்னும் / இச்சுவை தவிர யான்போய் / இந்திர லோகம் ஆளும் / அச்சுவை பெறினும் வேண்டேன் / அரங்கமா நகர் உளானே" பாடலை விருத்தமாகப் பாடிவிட்டு, பிருந்தாவன சாரங்கா ராகத்தின் அழகுகளை ஆலாபனையில் வெளிப்படுத்திப் பாடியிருக்கும் காணொளியும் காணக் கிடைக்கிறது. ஹரிஷின் ரங்கபுர விஹாரா கண்களையும் கருத்தையும் கவரும் குரோட்டன்ஸ்தான். ஆனால், சூர்யகாயத்ரியின் ரங்கபுரம், துளசி.
சூர்யகாயத்ரி படிப்படியாக உச்ச ஸ்தாயியை எட்டிப் பிடிக்கும் லாவகமும் லாவண்யமும் மிகவும் இயல்பாக வெளிப்படுகிறது. சம்ஸ்கிருதமாக இருந்தாலும் வார்த்தைகளின் உச்சரிப்பு தெளிவாக இருக்கிறது. ரங்கனின் பெருமை பேசும் வரிகளும் அதன் அர்த்த சவுந்தர்யங்களும் கேட்பவரின் மனதை விசாலப்படுத்துகிறது.
மிகவும் பிரபலமான இந்தப் பாடலை மூத்த கர்னாடக இசைக் கலைஞர்கள் பலரும் பாடியிருக்கின்றனர். முழுக்க முழுக்க கர்னாடக இசையின் பின்னணியில் இந்தப் பாடலைக் கேட்பது பரமானந்தம். பிருந்தாவன சாரங்கா ராகத்தின் தன்மை மாறாமல் இந்தத் தலைமுறைக்கு ஏற்ப அதே பாடலை கேட்பதும் ஆனந்தமாகத்தான் இருக்கிறது.
எம்.எஸ்.சுப்புலட்சுமி அனைத்திந்திய வானொலி நிலையத்தில் இந்தப் பாடலைப் பாடியிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபையிலும் `ரங்கபுர விஹாரா’வைப் பாடியிருக்கிறார். குரோட்டன்ஸோ, துளசியோ மனத்தை மகிழ்வித்தால் சரி.
பாடலைக் காண: https://www.youtube.com/watch?v=CABcibpobDE