Published : 02 Jun 2022 07:40 AM
Last Updated : 02 Jun 2022 07:40 AM

தாத்தாவான சுரைக்காய் சித்தர்

மஹேந்திரவாடி உமாசங்கரன்

சுரைக்காய் சித்தரின் இளமைப் பருவம் பற்றி சரிவரத் தெரியவில்லை. இவர் 1700ஆம் ஆண்டு தோன்றி 1902ஆம் ஆண்டு வரை வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. சுரைக்காய் சித்தருக்கு தீட்சை வழங்கி ஆட்கொண்ட மகானாக அந்தப் பகுதியில் வாழ்ந்த மீனா நாதர் போற்றப்படுகிறார். அவர்தான் `கமண்டலயதி' என்னும் திருநாமத்தை சுரைக்காய் சித்தருக்குச் சூட்டியிருக்கிறார்.

சித்தரின் தோற்றம்

சுரைக்காய் சித்தர் அவரது சிரத்தில் பெரிய தலைப்பாகை கட்டியவராய் சமய வேற்றுமை பாராட்டாமல், சில நேரம் திருமண் நாமமும் சில நேரம் திருநீறும் அணிந்த கோலத்துடன் காட்சி தருவார். அகன்ற நெற்றி. கறுத்துத் திரண்ட புருவம். அருள் ஒளி பொழியும் கண்கள். நரைத்த தாடி. புயத்தில் சுரைக் குடுக்கைகள் கட்டிய காவடி. ஒரு கையில் தடி. இன்னொரு கையில் இரு நாய்களைப் பிணைத்திருக்கும் கயிறுகளைப் பிடித்தபடி வலம் வந்த இவர், எல்லா உயிர்களின் துன்பத்தையும் போக்குவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார்.

திருப்பதி முதல் சென்னை வரை அவரின் பாதம் படாத இடமே இல்லை என்று சொல்லுமளவுக்கு எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறார். அளவில்லாத சித்துக் களை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.

ஒருமுறை, குப்புசாமி என்னும் பக்தர் சுரைக்காய் சித்தரை திருப்பதிக்கு அழைத்துச் சென்றார். உடன் சென்ற பக்தர்கள் மூலவரை மெய்மறந்து துதித்தபோது, சுரைக்காய் சித்தர் மாயமாகிவிட்டார். எல்லோரும் செய்வதறியாது திகைத்து நின்றபோது, மூலவரின் பின்புறத்திலிருந்து மெதுவாக நடந்து வந்து பக்தர்களுடன் சேர்ந்து கொண்டாராம் சுரைக்காய் சித்தர். ராஜபிளவை (முதுகில் வரும் கட்டி) வந்த ஒருவருக்கு ஆவாரை இலைப்பற்றுப் போட்டு குணப்படுத்தியிருக்கிறார். வாயில்லா ஜீவன்களிடமும் அன்பையும் கருணையையும் பொழிந்தார்.

பிராணிகளிடமும் காருண்யம்

சுரைக்காய் சித்தரின் பக்தர் செங்கல்வராயன் ஒருமுறை அவரை உணவருந்த அழைக்க, சித்தரோ “ஓர் உயிர் உணவுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறது. அதற்கு உணவு கொடுத்துவிட்டு வருகிறேன்” என்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாது நடந்து, தொலைவில் இருந்த சேரிப் பகுதியில் நோய்வாய்ப்பட்டிருந்த ஒரு நாய்க்குத் தான் எடுத்துச் சென்ற உணவை அளித்தாராம். அதன்பிறகே அவர் உணவருந்தினாராம்.

சுரைக்காய் சித்தருக்குப் பல சீடர்கள் இருந்தனர். அவர்களில் முக்கியமான வர்கள் சட்டிப் பரதேசி, குமரகுப்பம் சுவாமிகள், நந்தனார் சுவாமி, மடுகு சுவாமிகள், முந்தப் பரதேசி, மூடாலம்மா, மங்கம்மா ஆகியோர். இவர்களில் மங்கம்மா தாயாரின் சமாதி சுரைக்காய் சித்தர் கோயிலுக்குள்ளேயே அமைந்திருக்கிறது.

சித்தர் கோயில்

1902ஆம் ஆண்டில் சித்தர் சுவாமிகள் சென்னையிலிருந்து ஆந்திர மாநிலத்தில் உள்ள நாராயணவனம் சென்றார். சித்தியடைவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, தன் உடலில் உஷ்ணம் அதிகம் இருப்பதால் உடலில் நீரூற்றச் சொன்னார். அடியார்கள் நூற்றுக்கணக்கான குடங்களில் நீரெடுத்து அவரின் மேனியில் ஊற்றினர். அதன் பிறகு, அபய ஹஸ்த முத்திரைகளோடு வடக்கு நோக்கி அமர்ந்தார். அடியார்கள் கற்பூரம் ஏற்ற, சித்தர் அவரின் அருகில் அமர்ந்திருந்த புருஷோத்தமன் என்னும் பக்தரின் தோளில் சாய்ந்தார். பிறகு அடியார்களால் சுரைக்காய் சித்தருக்கு சமாதிக் கோயில் அமைக்கப்பட்டது.

நாராயணவனத்தில்  கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்கும்  பராசரேஸ்வரர் கோயிலுக்கும் அருகில் இந்த சித்தர் கோயில் இருக்கிறது. சித்தர் சமாதிக்கு மேல் சித்தரின் கற்சிலை வடிவம் உள்ளது. கருவறைக்கு ஒரு விமானம் அழகு சேர்க்கிறது. கருவறைக்கு முன்புறம் ஓர் அக்னி குண்டம் எப்பொழுதும் எரியும் நிலையில் இருக்கிறது.

தாத்தாவான சித்தர்

சித்தர் பயன்படுத்திய சுரைக் குடுக்கை கள், தடி, பாதக்குறடு போன்றவை அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சித்தருக்குப் பணிவிடை செய்துவந்த மங்கம்மா தாயாரின் சமாதிக் கோயிலும் சித்தர் கோயிலுக்கு உள்ளேயே பிராகாரத்தில் உள்ளது. அலங்காரம், அபிஷேகம் முடிந்தவுடன் சித்தரின் சமாதியை மூன்று முறை பக்தர்கள் வலம் வர அனுமதிக்கப்படுகின்றனர்.

தினமும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகள் தவிர, பௌர்ணமி, அமாவாசை, பஞ்சமி போன்ற தினங்களில் விசேஷமாக அபிஷேகம், தியானம், அன்ன தானம் போன்றவை நடைபெறுகின்றன.

சாமானிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்த சுரைக்காய் சித்தரை இந்தப் பகுதியில் இருக்கும் மக்கள் `சுரைக்காய் தாத்தா' என்றே அழைக்கின்றனர்.

சுரைக்காய் சித்தரைப் பற்றிய நூல்கள்

l விவேக சிந்தாமணி என்கிற பத்திரிகை சுரைக்காய் சித்தரைப் பற்றிய செய்திகளை வெளியிட்டுள்ளது.
l 1911ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் ஒரு நூல் வெளிவந்தது.
l வடமொழி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் சித்தரைப் பற்றிய பாடல்கள் உள்ளன.
l 1900ஆம் ஆண்டில் ராமச்சந்திர குருசாமி என்னும் அன்பர் பத்துப் பாடல்களில் சுரைக்காய் சுவாமிகளின் மகிமைகளைப் பாடியுள்ளார்.
l மே.வி. வேணுகோபாலப் பிள்ளை, தெ.போ.மீனாட்சிசுந்தரனார், ‘தணிகைமணி’ வ.சு.செங்கல்வராய பிள்ளை, அருட்கவி சேதுராமனார் போன்ற தமிழறிஞர்கள், சுரைக்காய் சுவாமிகள் மீது துதிப் பாடல்களை இயற்றி உள்ளனர். 1962ஆம் ஆண்டு 60ஆவது குருபூஜை அன்று இந்தப் பாடல்கள் அடங்கிய நூல் வெளிவந்தது.
l 1912ஆம் ஆண்டில்  ராம பக்தர் என்பவர் சுவாமிகள் பற்றிப் பாடிய 12 பாடல்கள் `சுரைக்காய் ராமசுவாமிகாரு மங்களம்' என்னும் நூலாக வெளிவந்தது.
l காஸிம் தாஸ் என்னும் முஸ்லிம் பக்தர் பாடிய தெலுங்குப் பாடல்கள் `ஞானாம்ருத ரஸமு' என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x