

அன்பும் அறிவும் இல்லாமல் மனிதர்களுக்கு வாழ்வே கிடையாது. இவை இரண்டும் மனித ஆன்மாவிலிருந்து நேரடியாகச் சுரக்கக்கூடியவை. இறைவன் நமக்கு அளிக்கும் சோதனைகளில் மிகக் கடுமையானது அன்பின் அடிப்படையில் வருவதே. இந்தச் சோதனை நம் உடலிலிருந்து உயிரைப் பிடுங்கி எடுப்பதற்குச் சமமானது. வறுமை, நோய், கஷ்டம் போன்ற அனைத்து சோதனைகளையும் பல்லைக் கடித்துக்கொண்டு பொறுமையாகக் கடந்து செல்லும் மனிதன், அன்பின் அடிப்படையிலான சோதனையில்தான் நிலை தடுமாறிப் போகிறான்.
ஆன்மிகப் பாதையில் செல்பவர்கள் அனைவருமே இறுதியாக அன்பைக்கொண்டே சோதிக்கப்படுகின்றனர். இந்தச் சோதனையின் வடிவம் மட்டும் ஆளுக்கு ஆள் வேறுபடும். சிலருக்குப் பெற்றோரைக் கொண்டு சோதனை. சிலருக்குப் பிள்ளைகளைக் கொண்டு சோதனை. சிலருக்கு மனைவியைக் கொண்டு சோதனை, இன்னும் சிலருக்குக் காதலன் அல்லது காதலி என்கிற பெயரில் சோதனை. அப்போது ஏற்படும் துயருக்கும் கண்களில் வழியும் கண்ணீருக்கும் அளவே கிடையாது. மனம் கவலையில் மூழ்கும். உடல் பலவீனம் அடையும். என்னை மட்டும் இறைவன் இப்படிச் சோதிக்கிறான் என ஆன்மா கதறியழும். தன் நேசர்களைப் புடம் போட்ட தங்கமாக மாற்ற இறைவன் அளிக்கும் மருந்தே இந்தச் சோதனை.
தாயின் அன்பு
நோயுற்ற குழந்தை சுகம் அடைய தாய் தன் குழந்தைக்கு மருந்து கொடுக்க முனைகிறார். மருந்தின் கசப்பினால் மருந்தைக் குடிக்க முடியாது என்று குழந்தை அழுகிறது. அலறுகிறது. சுற்றி நிற்கும் உறவினர்கள் பரிதாபத்துடன் பார்க்கின்றனர். வழக்கமாகத் தன் குழந்தையின் சிறு அழுகையைக்கூடத் தாங்கிக்கொள்ள முடியாமல், குழந்தை எதை வேண்டுகிறதோ அதை உடனே செய்து விடும்.
தாய், நோயுற்று இருக்கும் சூழலில் குழந்தையின் விருப்பத்திற்கு எதிராகச் செயலாற்றுகிறாள். காரணம், அப்போது அவளுக்கு வேண்டியதெல்லாம் தன் குழந்தையின் ஆரோக்கியமும் தன் குழந்தைக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்கிற எண்ணமும் மட்டுமே. இதேபோல்தான், தன் நேசர்களின் மீது அளவில்லா அன்பு கொண்டுள்ள இறைவன், தன் நேசனை, உலக மாயை என்னும் நோயிலிருந்து விடுவித்து இறைமையைத் தன்னோடு இணைத்துக்கொள்ள நாடுகிறான். அப்போது அவன் கொடுக்கும் கசப்பான மருந்துதான் இந்த அன்பின் அடிப்படையிலான சோதனை.
கசப்பே மருந்து
தாய் கொடுக்கும் கசப்பான மருந்தைக் குடிக்காமல் கதறியழும் குழந்தையைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கும் உறவினர்கள் யாரும் தாயை ஏசுவதில்லை. தாய் படும்பாட்டைப் பார்த்து அவள் பாசத்தைப் புகழ்கின்றனர். மாறாக, குழந்தை அழுதாலும் அதன் விருப்பத்துக்கு மாறான அந்த மருந்தை அது எப்படியாவது குடிக்க வேண்டும் என்றே நினைக்கின்றனர். அதற்காகத் தாய்க்கு உதவியும் செய்கின்றனர். இந்த உறவினர்களைப் போன்றவர்கள்தாம் நாம் உதவி தேடி நிற்கும் பெரியார்கள். அவர்கள் நபிமார்களாக இருக்கட்டும், வலிமார்களாக இருக்கட்டும்.
அவர்களுக்கு உங்கள் உள்ளத்தின் நிலைமை தெரியும். நீங்கள் இப்போது எத்தகைய சூழலை எதிர்கொண்டு வருகிறீர்கள் என்பதும் தெரியும். ஆனால், அவர்கள் கூறும் வழிமுறைகளை உங்கள் மனம் ஏற்றுக்கொள்ளாது. காரணம், நீங்கள் குழந்தையின் ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். எனவே, நீங்கள் அவர்களிடம் முறையிட்டால், அவர்கள் வெறுமனே ஆறுதல் வார்த்தை மட்டும் கூறுவார்கள். ‘இன்ஷா அல்லாஹ் உனக்காக துஆ செய்கிறேன்’ என்று சொல்வார்கள். அது மருந்து கசப்பிற்குப் பயந்து அழும் குழந்தை மீது அன்பு கொண்ட உறவினர்கள் அதன் வாயில் தேனைத் தொட்டு வைப்பது போன்றது.
சோதனையின் வெற்றி
இறுதியாக அடிபட்டு, அடிபட்டு உங்கள் உள்ளம் மரத்துப்போய் விடுகிறது. உலக ஆசாபாசம் என்னும் மாயையை விட்டு அது விலகிச் செல்கிறது. நீங்கள் யாரைக் கொண்டு சோதனை செய்யப்பட்டீர்களோ அவர்களின் அன்பு உங்கள் உள்ளத்தை விட்டும் போய் விடுகிறது. இப்போது எதுவும் வேண்டாம், இறைவனும் அவன் அருளும் மட்டும் எனக்குப் போதும், இறைவனின் நாட்டத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன் எனும் நிலைக்கு நீங்கள் ஏற்றமடைவீர்கள். இந்த ஏற்ற நிலையே, உங்கள் மீது நடத்தப்பட்ட சோதனையின் வெற்றி.
இந்த வெற்றிக்குப் பின்னர், நீங்கள் எதைக் கொண்டு சோதிக்கப்பட்டீர்களோ, அது மீண்டும் உங்கள் காலடியில் வந்து சேரக்கூடும். அப்போது உங்கள் மனம் இறைவனை மட்டுமே நாடி நிற்கும் நிற்கும். எதை எண்ணி ஒரு காலத்தில் கண்ணீர் வடித்தீர்களோ, இப்போது அது சாதாரண ஒன்றாக உருமாறி நிற்கும். அந்த அன்பின் பிரிவும், ஏற்பும் உங்களுக்குத் துயரை அளிக்காது. கண்ணீரை வடிக்காது. அவற்றின் இருப்பையும் இல்லாமையையும் சமநிலையுடன் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் நீங்கள் இருப்பீர்கள். பிரிவற்ற உறவு என்று எதுவும் நம் வாழ்வில் இல்லாத சூழலில், இந்த நிலையில் நமக்கு நிம்மதி கிடைக்கும். மனத்தின் சமநிலையை எப்போதும் காக்கும்.
- தொகுப்பு: நிஷா