பக்தியை ஒன்றிணைக்கும் கைலாய வாத்தியங்கள்

பக்தியை ஒன்றிணைக்கும் கைலாய வாத்தியங்கள்
Updated on
2 min read

ஏ.ஆர். ரஹ்மான் கிராமி விருது வென்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தில் பாடிய ஒரே தமிழ்ப் பாடகி மதுமிதா. இவருடைய தாயார் வீணை இசைக் கலைஞர் ஹேமலதா மணி. இவருடைய சகோதரி கர்னாடக இசைக் கலைஞரும் திரையிசைப் பாடகியுமான சாருலதா மணி. இப்படி இசைமயமான குடும்பத்திலிருந்து கர்னாடக இசையின் வழியாகத் திரையிசையிலும் பிரபலமான பாடகியாக வலம்வந்த மதுமிதா தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

யோகா வகுப்புகளையும் இசை வகுப்புகளையும் ஆஸ்திரேலியாவில் நடத்தும் மதுமிதா அண்மையில் ‘ஐ யாம்’ (I AM) என்னும் இசை ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். இதில் எட்டுப் பாடல்கள் உள்ளன. காயத்ரி மந்திரம், ராம நாமத்தின் பெருமை போன்றவற்றை ஆங்கிலம், தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்தத் தொகுப்பில் இருக்கும் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதம். பாடலுக்கான இசையில் பழமையான கைலாய வாத்தியங்கள் எனப்படும் தாள வாத்தியங்கள், காற்று வாத்தியங்களை வாசிப்பதில் பிரபலமான கோசை நகரான் குழுவினரைக் கொண்டு வாசிக்க வைத்து, தீர்க்கமான இசையைச் சேர்த்திருக்கும் சிறப்பைச் செய்திருக்கிறார் மதுமிதா.

அமைதியை அளிக்கும் இசை

“கர்னாடக இசையின் ஆதார ஸ்ருதியோடு பாடும் பாடல்களை, மதம், இனம், கலாச்சார எல்லைகளைக் கடந்து உலக மக்கள் அனைவருக்கும் அமைதியைத் தரும் நோக்கத்தை முன்னிறுத்திதான் இந்த இசைக் கோப்புகளை உருவாக்கினேன்” என்னும் மதுமிதா, “ஆஸ்திரேலியாவில் நான் எடுக்கும் யோகா வகுப்பில் பயிற்சி செய்பவர்களுக்கும் சரி, பயணம் செய்பவர்களுக்கும் சரி, இந்த இசை அமைதியைக் கொடுப்பதாக இருக்கும்” என்கிறார்.

“நம் மொழியின் பெருமை யைக் காப்பதைப் போன்றே நம்முடைய தொன்மையான இசைக் கருவிகள் எழுப்பும் ஒலியையும் பாதுகாப்பதை என்னுடைய கடமையாக நினைத்தேன். இந்த நோக்கத்தை உலகளாவிய தளத்தில் செயல்படுத்தும் ஒரு சிறிய முயற்சியாகவே இந்த இசை மாலையை நான் பார்க்கிறேன்.

இந்த இசைத் தொகுப்பில் இருக்கும் பாடல்களுக்கான கைலாய வாத்தியங்களின் இசையை சென்னையிலிருந்து கலைஞர்கள் வாசிக்க, பாடல்களை எழுதி இசையமைத்து அதற்கான இசைக் கோப்புகளையும் உருவாக்கி, என்னுடைய ஸ்டுடியோவிலேயே உருவாக்கினேன். இப்படி நான் ஆஸ்திரேலியாவில் உருவாக்கிய டிராக்குகளைப் புகழ்பெற்ற சவுண்ட் இன்ஜினீயர் ரஹமத்துல்லாவுக்கு அனுப்பிவைத்தேன். அதற்கு அவர் சரியான, செறிவான, நேர்த்தியான ஒலிச் சேர்ப்புகளைச் செய்து அனுப்பினார். பேரிடர் காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத நிலையிலும் தொழில்நுட்பத்தின் மூலமாகத் தரத்தில் சமரசமில்லாமல் மிகப் பெரிய இசைப் பணியைச் செய்துமுடித்த திருப்தி ஏற்பட்டிருக்கிறது.

திருமந்திரம் என்னும் சிவயோக நூலில் இருந்து சில பாடல்களை ஒரு டிரான்ஸ் ஜானரில் இசையமைத்து உள்ளேன். காயத்ரி மந்திரத்தை சம்ஸ்கிருதத்தில் பாடி, அதன் விளக்கத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதி இசையமைத்துள்ளேன். என்னுடைய அம்மா ஹேமலதா மணி தமிழில் வரிகளை எழுதியிருக்கிறார்.

உலகம் மூன்றிலும் ஒளி வடிவாய் உதிக்கும் கதிரே / உயிர் சக்தியே /காரிருளை நீக்கும் என் உள்ளொளியே / எனை இயக்குவாய் அறிவின் ஜோதியே... எனப் பாடல் விரியும். மற்ற பாடல்கள் கீர்த்தனை வடிவில் அமைந்திருக்கும். ஒரு பாடல் குருவின் மகிமையைப் பேசும்.

ஒரு பாடலை சாருமதி ராகத்திலும் சிவனின் தாண்டவத்தை விளக்கும் பாடலை ரேவதி ராகத்திலும் அமைத்திருப்பேன். சிதம்பரம் நடராஜரை நாடும் ஒரு ஜீவாத்மாவாக ஒரு யோகியாக ஒரு பாடகியாக என்னை நான் பாவித்து எழுதிய பாடல் இந்த ‘சிதம்பரம்’.

யோகமுள்ள யோகி நான்

யோக அமுதம் தேடினேன்

மகா விஷத்தைப் பருகியவனின்

பதம் பிடித்து உருகினேன்...

- என்று சில வரிகள் வரும். நம் தமிழிசையின் கைலாய வாத்தியங்களை இதில் நேரடியாகப் பயன்படுத்த நினைத்தேன். கோசை நகரான் அவர்களின் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ஆஸ்திரேலியாவிலிருந்து அவரைத் தொடர்புகொண்டு பேசினேன்.

கொக்கரை, திருச்சின்னம், கௌரி காலம், பிரம்ம தாளம், பறை, உடல், கோணதாரை, உடுக்கை போன்ற வாத்தியங்களின் ஒலியை இந்தத் தொகுப்பில் பதிவுசெய்திருக்கிறேன். இந்தக் கலைஞர்களுடன் சேர்ந்து இன்னும் பல பாடல்களை உருவாக்குவேன்.

ராக சொரூப சரஸ்வதி

இந்த இசைத் தொகுப்பில் ‘சரஸ்வதி’ என்னும் இசைக் கோப்பில் சரஸ்வதி மந்திரம், அதை விளக்கும் ஆங்கிலக் கவிதை, மகாகவி பாரதியாரின் ‘வெள்ளைத் தாமரை பூவில் இருப்பாள்’ மூன்றையும் ‘சரஸ்வதி’ என்னும் ராகத்தில் ஒருங்கிணைத்துள்ளேன்” என்றார்.

ராகங்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருக்கும் விதம், பாடல்களின் ஊடாகப் பிரச்சார நெடியில்லாமல் நம்முடைய கலாச்சாரப் பெருமைகளை அடுக்கியிருக்கும் விதம், வேதங்கள், திருமந்திரம், பகவத்கீதை, காயத்ரி மந்திரம் போன்றவற்றுக்கான ஆங்கில விளக்கங்களுடன் வெளிநாடுகளில் வாழும் மக்களுக்கும் யோகா பயில்ப வர்களுக்கும் ஆன்மிகத் தேடலில் உள்ளவர்களுக்கும் ஒரு செவியடக்கப் பதிவாக இந்த இசை மாலையின் பதிவுகள் உள்ளன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in