

பால்யத்தில் நீங்கள் விளையாடும்போது, எதிர்பாராமல் கீழே விழுந்து, காயம்பட்டு வலியால் துடித்திருப்பீர்கள். அப்போது ஓடோடி வந்து உங்களை நெஞ்சுக் கூட்டோடு அணைத்துக்கொண்டு, உங்களுக்கு உடனடி ஆறுதலைக் கொடுத்தவர் உங்கள் தாய் அல்லது தந்தையாக இருப்பார்கள்.
அவர்கள் அருகில் இல்லாத நேரத்தில் உங்களுடைய அண்ணனோ, அக்காவோகூட அந்த ஆறுதலை வழங்கியிருக்கலாம். அவர்கள் உங்கள் காயத்தைக் கழுவி, அதற்கு மருந்திடும்போதும் கட்டுபோடும்போதும் உங்கள் மனம் இன்னும் கூடுதலான ஆறுதலைப் பெற்றிருக்கும்.
ஆனால், நாம் அனைவரும் பெரியவர்களாக வளர்ந்து, வாழ்க்கையை முழுமையாக எதிர்கொள்ளும்போது சமூகத்தில் நிலவும் பலவித அழுத்தங்களும் நிச்சயமற்ற சூழ்நிலைகளும் மோசமான சுற்றுச்சூழலும் பலவிதமான பிரச்சினைகளை நமக்குக் கொண்டுவந்து சேர்க்கலாம். பலருக்கு வேலை பறிபோயிருக்கலாம். ‘அய்யோ…! இனி என்னுடைய குடும்பத்தை எப்படிக் காப்பேன்?’ என்று ஆறுதல்படுத்த ஆள் இல்லாமல் கவலை உங்களை வருத்தியிருக்கலாம். சிலருடைய மணவாழ்க்கை முறிந்துபோயிருக்கலாம். எப்போது குணமாகும் என்பதே தெரியாமல், நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கலாம். நீங்கள் முற்றிலும் எதிர்பாராத இழப்பாக, உங்கள் ரத்த பந்தத்தில் ஒருவர் இறந்திருக்கலாம்.
எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் தவித்தாலும் அப்போது உங்கள் மனம் தேடும் மகத்தான மருந்து ஆறுதல்! அதை உங்கள் உறவுகளும் நண்பர்களும் கொடுப்பது வாழ்வின் பெரும்பேறுதான். அவர்களுடைய ஆறுதல் உங்களைத் தேற்றலாம். ஆனால், உங்கள் உள்காயத்தைக் குணமாக்கி மனதுள் வடிந்துகொண்டிருக்கும் கண்ணீரைத் துடைத்து, உங்களை மீண்டெழச் செய்யும் ஆறுதல் யாரிடமிருந்து உங்களுக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள். இந்நேரம் உங்ளுடைய மனமே அதைக் கூறியிருக்கும். ஆம்! அவர் வேறு யாருமல்ல; சர்வ வல்லமையுள்ள இறைவன்தான்.
அப்போஸ்தலரான புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் கடிதத்தில் 3ஆம் வசனத்தைப் பாருங்கள்: “நம் எஜமானாகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தந்தையாக இருக்கிறவருக்குப் புகழ் சேரட்டும். அவர் கனிவும் இரக்கமும் உள்ள பரலோகத் தந்தை. எல்லாவிதமான ஆறுதலின் கடவுள். நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் அவர் நமக்கு ஆறுதல் தருகிறார். அவருடைய மகனை நமக்கான ஆறுதலாக அனுப்பினார். அவரிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைப்பதால் எப்பேர்ப்பட்ட சோதனையில் இருப்பவர்களுக்கும் நம்மால் ஆறுதல் தர முடிகிறது” என்று ஓர் அருட்பணியாளராகச் சாட்சி பகிர்ந்திருக்கிறார்.
அதேபோல், இறைவன் தருகிற ஆறுதலைப் பெற நாமும் அவரை நெருங்கிச் செல்ல வேண்டும். உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெற அவரிடம் ‘அப்பாயின்ட்மென்ட்’ வாங்காமல் எப்படி ‘பிரிஸ்கிரிப்ஷன்’ பெற முடியாதோ அப்படித்தான், “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்று யாக்கோபு புத்தகம், அதிகாரம் 4இல் 8ஆவது வேத வசனம் எடுத்துச் சொல்கிறது..
தொகுப்பு: ஜெயந்தன்