

‘இசையால் வசமாகா இதயம் எது?’ என்னும் கேள்வி மூன்று முறை எதிரொலிக்கும். அதன்பின், அதற்கான பதிலாக ‘இசையால் வசமாகா இதயம் எது / இறைவனே இசை வடிவம் எனும்போது தமிழ் இசையால் வசமாகா இதயம் எது..’ எனப் பாடல் வளரும். இசையையும் இறையையும் ஒரே தராசில் நிறுத்திப் பார்க்கும் இந்தப் பாடலை கீதப்ரியன் எழுதியிருப்பார். இந்தப் பாடலின் மூலமாக இசையின் நுட்பங்களைத் தம்முடைய காத்திரமான குரலில் அடுக்கடுக்காக அலசியிருப்பார் டி.எம்.எஸ். இந்தப் பாடலைக் கேட்பவர்கள் இறைவனிடமும் இசையிடமும் ஒருங்கே வசமாகிவிடுவார்கள்.
‘கிருஷ்ண விஜயம் திரைப்படத்தில் எஸ்.வி.சுப்பய்யா நாயுடு இசையில் ‘ராதே நீ என்னை விட்டுப் போகாதடி’ என்னும் பாடலைப் பாடி தமிழ்த் திரையுலகில் அறிமுகம் ஆனார் டி.எம்.எஸ். தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம் ஆகிய சில மொழிகளிலுமாக மொத்தம் 10,000 பாடல்களுக்கும் அதிகமாகப் பாடியிருக்கிறார். தவிர, சுமார் 2,500 தனி, பக்திப் பாடல்களையும் பாடியிருக்கிறார்.
இறை அநுபூதி
திரைப்படங்களில் நாயகனுக்காகப் பின்னணி பாடினாலும் அவர் இறைவனைச் சிறப்பித்துப் பாடிய இசைப் பாடல்களால் என்றென்றைக்கும் அவருக்கு இறை அநுபூதி கிடைக்கும்.
‘கற்பகவள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன்’, ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்’, ‘உள்ளம் உருகுதையா’ போன்ற பாடல்களில் பல கடவுளர்களையும் மகிழ்வித்தவர் டி.எம்.சௌந்தரராஜன்.
டி.எம்.எஸ். பழனியில் தங்கியிருந்தபோது இஸ்லாமிய இளைஞர் ஒருவர், ‘உள்ளம் உருகுதடா’ என்று தொடங்கும் கவிதையைப் படித்துக்கொண்டிருந்தார். அதைக் கேட்டு, இதை எழுதியவர் யார் என்று விசாரித்திருக்கிறார். அவருக்கும் தெரியவில்லை. அவரைப் படிக்கச் சொல்லி, வரிகளை எழுதிக் கொண்டு, அதில் ‘உருகுதடா’ என்று முருகனை மிகவும் உரிமையாகக் கவிஞர் குறிப்பிடும் இடங்களை மட்டும் ‘உருகுதய்யா’ என்று அன்பைச் சுரக்கும் வார்த்தைகளைப் போட்டு, அதற்கு மெட்டமைத்து டி.எம்.எஸ்.பாடியிருக்கிறார். ஆனால், அதை எழுதியவர் யார் என்ற தேடலை அவர் தொடர்ந்தபடி இருந்தார்.
ஒரு முறை, வட சென்னை தம்பு தெருவில் இருக்கும் காளிகாம்பாள் கோயிலுக்குச் சென்றிருக்கிறார். அங்கே கோயிலுக்குள் வலம் வரும்போது, ‘உள்ளம் உருகுதடா’ பாடல் கல்லில் பொறிக்கப்பட்டு அதன் கீழே ‘ஆண்டவன் பிச்சை’ என்று எழுதி இருந்தது. ‘ஆண்டவன் பிச்சை’ என்பவர் ‘துறவி மரகதம்மா' என்பதைப் பின்னாளில் பல முயற்சிகளுக்குப் பின் அறிந்தார் டி.எம்.எஸ்.
கற்பனைக்கு முகவரி கொடுத்தவர்
ஓர் அஞ்சல் அட்டையில் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்’ என்று தொடங்கி சில வரிகளோடு ஒரு கடிதம் டி.எம்.எஸ்ஸுக்கு வந்திருந்தது. அந்த வரிகளில் பொதிந்திருந்த அருளை உணர்ந்து அதற்கு மெட்டமைத்து இசை சேர்த்து, அந்தப் பாடல் வானொலியில் என்றைக்கு ஒலிபரப்பாகிறது என்னும் தகவலையும், ‘அந்தப் பாடலுக்கான சன்மானத்தையும் உங்களுக்குத் தரவேண்டும்’ என்று அந்தக் கவிஞருக்கு மறக்காமல் கடிதம் எழுதினார் டி.எம்.எஸ். அந்தக் கவிஞர்தான் தமிழ்த் திரையுலகில் தனக்கெனத் தனிப் பாதையைப் பின்னாளில் அமைத்துக்கொண்ட கவிஞர் வாலி!
https://www.youtube.com/watch?v=akNoOtOAums