காஞ்சிபுரம் சஞ்சீவராயர் கோயிலும் வற்றாத அய்யங்கார்குளமும்

காஞ்சிபுரம் சஞ்சீவராயர் கோயிலும் வற்றாத அய்யங்கார்குளமும்
Updated on
3 min read

'கோயில் நகரம்' என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில்களுக்குப் பஞ்சமில்லை. புகழ்பெற்ற கோயில்கள் காஞ்சிபுரத்தைச் சுற்றி ஏராளம். அவற்றில் புகழ்பெற்ற பழமையான ஒரு கோயில் அய்யங்கார்குளத்தில் உள்ளது. அது, சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில்.

பிரம்மாண்ட கோயில்

காஞ்சிபுரத்திலிருந்து கலவைக்குச் செல்லும் சாலையில் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது அய்யங்கார்குளம். பாலாற்றின் கரைக்கே அருகே இயற்கை எழிலுடன் காட்சி தருகிறது இந்த ஊர். அய்யங்கார்குளத்தை அடைந்தவுடனே முதலில் கண்ணில் தென்படுவது சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் கோயில்தான். இந்தக் கோயிலை ‘கற்றளிக் கோயில்’ என்கிறார்கள். அதாவது, கருங்கற்களை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி, சுண்ணாம்பு சேர்க்காமல் கட்டப்பட்ட கோயில். கோயிலின் முன்புறம் நெடிந்துயர்ந்த தூண்கள் பிரம்மாண்டமாகக் காணப்படுகின்றன. கோபுரம், மூலவர் விமானம், மூன்று சுற்று பிராகாரங்கள், உள் பிராகாரத்தில் கல்யாண மண்டபங்கள், வெளிப் பிராகாரத்தில் நான்கு திசைகளிலும் அலங்கார மண்டபங்கள், வடக்கு வாயிலில் கோபுரம் என நேர்த்தியாகவும் கலை அம்சத்துடனும் உள்ளது கோயில்.

மூன்று சுற்று பிராகாரங்களுடன் கூடிய இந்தக் கோயிலின் உள்ளே சென்றவுடன் 50 தூண்களுடன் கூடிய மகாமண்டபமும் 25 தூண்கள் கொண்ட அர்த்த மண்டபமும் அழகாக உள்ளன. பார்ப்பதற்கு பழமையாகவும் பாழடைந்தது போலவும் காணப்படும் இந்தக் கோயில் கிருஷ்ண தேவராயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டது. ஆஞ்சநேயர் கோயில் அய்யங்கார்குளத்தில் வந்ததற்கு ஒரு சுவாரசியமான கதையைச் சொல்கிறார் இக்கோயிலின் பூசாரி.

மூலிகை மகிமை

“இந்தக் கோயிலில் உள்ள சஞ்சீவராயர் ஆஞ்சநேயர் இருகரம் கூப்பிய நிலையில் அயோத்தி இருக்கும் வடக்குத் திசையைப் பார்த்தபடிதான் இருப்பார். ராமருக்கும் ராவணனுக்கும் போர் நடந்தபோது, இந்திரஜித் செலுத்திய கொடிய அஸ்திரத்தால் லட்சுமணன் மூர்ச்சையாகிவிட்டார். லட்சுமணனைக் காக்க அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்தபோது, அதன் ஒரு பகுதி இங்கே விழுந்துவிட்டது. அதிலிருந்து சுயம்புவாகத் தோன்றியவர்தான் சஞ்சீவிராய ஆஞ்சநேயர். தமிழகத்திலேயே வடக்கு பார்த்த ஆஞ்சநேயர் கோயில் இதுதான். இவ்வளவு பெரிய தனிக்கோயில் ஆஞ்சநேயருக்கு இருப்பதும் இங்கு மட்டும்தான். இந்தக் கிராமத்தில் சஞ்சீவி மூலிகை பரவிக் கிடக்கிறது. எனவே, இந்தக் கிராமத்தில் உள்ளவர்கள் இதுவரை பாம்பு, தேள் என எந்த விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட்டதில்லை. இந்தப் பகுதியில் எங்குமே விஷ ஜந்துகளைப் பார்க்கவே முடியாது. எல்லாமே சஞ்சீவராயரின் மகிமை” என்று கோயில் தலபுராணத்தைச் சொல்கிறார் கோயில் பூசாரி.

கோயிலின் கருவறையைச் சுற்றிவரும்போது தவழ்ந்துதான் வரவேண்டியிருக்கிறது. அந்த அளவுக்குக் குறுகலாக அமைத்திருக்கிறார்கள். கருவறையைச் சுற்றியுள்ள இடம் குளிர்ச்சியாகவே இருக்கிறது. கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் கருவறை இருக்கும்படி நுணுக்கமாக கோயில் கருவறையை அமைத்திருக்கிறார்கள் என்று பெருமையாக சொல்லும் தங்கவேலு, இன்னொரு விஷயத்தையும் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.
“இந்தக் கோயிலிலிருந்து முன்பு ஆஞ்சநேயர் விக்ரஹத்தை சிலர் திருடி சென்றுவிட்டார்கள். ஆனால், திருடியவர்களால் நீண்ட தூரம் சிலையைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியவில்லை. அதிகப் பாரம் காரணமாக ஓரிடத்தில் சிலையைப் போட்டுவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்கள். பிறகு சிலையை மீட்டு மீண்டும் கோயில் கருவறையில் நிறுவினார்கள். இது ஆஞ்சநேயரின் மகிமையால் நிகழ்ந்த நிகழ்வு” என்கிறார் கோயில் பூசாரி.

பிரம்மாண்ட குளம்

இக்கோயிலின் பின்புறத்தில் படித்துறையுடன் கூடிய பிரம்மாண்டமான குளம் உள்ளது. பார்ப்பதற்கு ஏரி போல காணப்படும் இந்தக் குளம் 133 ஏக்கர் பரப்பளவில் விரிந்துகிடக்கிறது. அய்யங்கார்குளம் என இந்த ஊருக்குப் பெயர் வருவதற்கு இந்தக் குளம்தான் காரணம். இந்தப் பிரம்மாண்ட குளமும் இந்தக் கிராமத்துக்குப் பெருமை சேர்க்கிறது. கிருஷ்ணதேவராயர் ஆட்சியின்போது அவரது உதவியுடன் லட்சுமிகுமார தாததேசிக அய்யங்கார் என்பவர் இந்தக் குளத்தை வெட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே அவர் பெயர் தாங்கியபடி இந்தக் கிராமத்துக்கு ‘அய்யங்கார்குளம்’ என்று பெயர் வந்ததாகவும் கூறுகிறார்கள். ஆனால், இந்தக் குளத்துக்கு ‘ஸ்ரீதாத சமுத்திரம்’ என்று இன்னொரு பெயரும் இருக்கிறது.

வற்றாத குளம்

இந்தக் குளத்தை அதிசய குளமாக சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பார்க்கிறார்கள். எப்போதும் இந்தக் குளத்தில் தண்ணீர் இருப்பதால், ஊரில் குடிநீர் தட்டுப்பாடு வந்ததில்லை என்கிறார்கள். அது மட்டுமல்ல, வழக்கமாக ஆறுகளில் மட்டுமே சற்று பெரிய படித்துறை இருக்கும். ஆனால், இந்தக் குளத்திலேயே பெரிய படித்துறை இருக்கிறது. சஞ்சீவராயர் கோயிலின் பின்புற வாசல் படித்துறையுடன் முடிகிறது. அந்தப் படித்துறையிலிருந்து 100 மீட்டர் தூரம் வரை உள்ள பகுதியில் தண்ணீர் எப்போதுமே இருக்கிறது. கோடைக் காலத்தில்கூட இந்தக் குறிப்பிட்ட பகுதியில் தண்ணீர் ததும்பும் என்று பெருமையாகச் சொல்கிறார்கள் ஊர்க்காரர்கள்.

இந்தக் குளத்தில் எந்தக் காலத்திலும் தண்ணீர் இருக்க என்னக் காரணம் என்று அந்தப் பகுதியில் விசாரித்தபோது, குளத்தில் கிணறு இருப்பதாகவும், அந்தக் கிணறிலிருந்து தண்ணீர் எப்போதும் ஊறிக்கொண்டே இருப்பதாகவும் சொல்கிறார்கள். இன்னும் சிலர், மழைக் காலத்தில் சேரும் தண்ணீர்தான் வற்றாமல் எப்போதும் இங்கே இருக்கிறது என்கிறார்கள். எப்போதும் இங்கே தண்ணீர் இருக்க ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும், கோடை காலத்தில்கூட அய்யங்கார்குளத்தில் தண்ணீர் வற்றி பார்த்ததேயில்லை என்பதை மட்டும் எல்லோருமே உறுதியாகச் சொல்கிறார்கள்.

குளத்தைச் சுற்றி சிற்பங்கள்

இந்த அய்யங்கார்குளத்தின் கரையைச் சுற்றி கற்பாறைகளைக் கொண்டு அடுக்கடுக்காகச் சுவர் எழுப்பி இருக்கிறார்கள். அந்தக் காலத்திலேயே இப்படி ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அந்தக் கற்பாறைகளுக்கு இடையே அழகிய சாமி சிற்பங்களும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாதர் பள்ளிக்கொண்டிருப்பதைப் போன்ற சிற்பம் உள்ளிட்ட பல சிற்பங்களும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல பாறைகளுக்கு நடுவே கல்லால் ஆன தட்டும் அதனருகில் காய்கறிகள் வைத்துக்கொள்ள சிறு குழியும் காணப்படுகின்றன. அந்தக் காலத்தில் சாமிக்கு இத்தட்டிலேயே உணவுப் படைத்திருக்கிறார்கள் என்றும் யாத்ரீகர்களாக வருபவர்கள், தட்டில் வைத்து சாப்பிடவும், குழியில் காய்கறிகளை வைத்துக்கொள்ளவும் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள் என்றும் இருவேறு கருத்துகள் சொல்லப்படுகின்றன.

ஆனால், சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்துக்கொள்ள ஏதுவாகவே இந்தக் குளத்தைச் சுற்றி இந்த ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அய்யங்கார்குளத்தைச் சுற்றியுள்ள இந்த அழகிய வேலைப்பாடுகளும் பார்ப்பவர்களை ஈர்க்கத் தவறவில்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in