

கத்தோலிக்கத் திருச்சபையின் தலைமையிடமான வாடிகனில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தமிழ்க் கிறிஸ்தவப் பாடல்கள் முழங்க தமிழ்நாட்டைச் சேர்ந்த தேவசகாயம் கடந்த ஞாயிறு அன்று புனிதராக்கப்பட்டார். இந்த நிகழ்வை உலகம் முழுவதும் இருக்கும் தமிழர்கள் மதமாச்சரியங்களைக் கடந்து கொண்டாடிவருகின்றனர்.
தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்து மீது நம்பிக்கை வைத்து அதன்படி சத்தியமும் நன்மையுமாக வாழ்பவர்கள் புனிதர்கள். வாழ்ந்த காலத்தில் பெறும் நற்பெயரும் அவர்கள் மீது மக்களுக்கு உள்ள ஆராதனையும்தான் புனிதருக்கான முதன்மையான அடையாளம். அவர்கள் ‘தெய்வத்தின் சொந்தம்’ என மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். இவர்கள் ‘இறைவனின் தூதர்’ என்கிற பக்தி வர வேண்டும். இப்படியான புனிதர்கள் பலர் உண்டு. தேவசகாயம் மற்ற புனிதர்களிலிருந்து விசேஷமானவர்.
19-ம் நூற்றாண்டுக்குப் பிறகு இந்தியாவிலிருந்து புனிதராக்கப்பட்ட வர்கள் 11 பேர்தான். இவர்களில் இந்தியர்கள் 6 பேர். அவர்களுள் மதபோதகரல்லாத, திருமணம் முடித்த சாதாரணர் தேவசகாயம் மட்டுமே. மேலும், முதல் தமிழ்ப் புனிதர் என்கிற சிறப்பும் இவருக்கு உண்டு. இவருக்கு முன்பு 2019-ல் கேரளத்தைச் சேர்ந்த மரியம் திரசியா (1876-1926) புனிதராக்கப்பட்டார்.
தேவசகாயம், 22, டிசம்பர், 2003இல்புனிதர் பட்டத்துக்கான முதல் நிலையான ‘இறை ஊழியர் நிலை’யாக அறிவிக்கப்பட்டார். 28, ஜூன், 2012இல் ‘வணக்கத்துக்கு உரிய நிலை’யாக அறிவிக்கப்பட்டார். 2, டிசம்பர், 2012இல்அவருக்கு ‘அருளாளர்’ பட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இப்போது ‘புனிதர்’ பட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவசகாயம், இன்றைய கன்னியா குமரி மாவட்டம் நட்டாலம் என்னும் ஊரில் 1712இல் இந்து மதத்தில் பிறந்தவர். இயற்பெயர் நீலகண்டன். இவருடைய தந்தை திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் பூஜிக்கும் நம்பூதிரியாக இருந்தவர். தாய், நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர். தனது தாய்மாமன் வீட்டில் வளர்ந்த நீலகண்டன் பக்தியில் சிரத்தையுடன் இருந்தார். இளம் வயதில் தற்காப்புக் கலைகளையும் கற்றிருந்தார். தமிழ், மலையாளம், சம்ஸ்கிருதம் எனப் பல மொழிகளையும் கற்றிருந்தார். இவருக்கு எளிதாக அரசாங்கத்தில் வேலை கிடைத்தது. பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயிலின் நிர்வாகப் பொறுப்பையும் விரைவிலேயே நீலகண்டனுக்கு அன்றைய திருவிதாங்கூர் அரசர் மார்த்தாண்ட வர்மா அளித்தார். மேலும், அவரைக் கருவூல அதிகாரியாகவும் அரசர் நியமித்தார்.
இதற்கிடையில் 1741இல் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும் டச்சுக் கடற்படைக்கும் இடையில் போர் நடந்தது. திருவிதாங்கூர் வரலாற்றில் முக்கியமான போராகக் கருதப்படும் இந்தக் குளச்சல் போரில் டச்சுப் படை தோல்வி அடைந்தது. இந்தப் போரில் டச்சுத் தளபதி இஸ்டகியஸ் டி லனாய், திருவிதாங்கூர் படைகளிடம் சரண் அடைந்தார். அவரைக் கொல்லாமல் சிறையில் வைத்திருந்தார் அரசர். தனது படையை மேம்படுத்த அவரைப் பணிக்க அரசர் ஆலோசித்தார். இந்தக் காலகட்டத்தில்தான் பத்மநாபபுரம் அரண்மனையை மார்த்தாண்டவர்மா புதுப்பித்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், உதயகிரியில் கோட்டை ஒன்றின் கட்டுமானப் பணியிலும் டிலனாயை ஈடுபடுத்தினார். அப்போது அதிகாரியாக இருந்த நீலகண்ட பிள்ளைக்கும் டிலனாய்க்கும் நட்பு மலர்ந்தது.
புனித லாசர்
திருமணம் முடித்துச் சில மனச் சங்கடங்களில் இருந்த நீலகண்டனுக்கு, டிலனாய் ஆதரவாய் இருந்ததுடன், சங்கடங்களிலிருந்து மீளும் மார்க்கமாகக் கிறிஸ்தவத்தைப் பரிந் துரைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
நீலகண்டன், கிறிஸ்தவ சமயப் போதனைகளால் கவரப்பட்டார். இதையடுத்து, திருவிதாங்கூர் சமஸ் தானத்தின் ஆட்சிக்கு அப்பால் இருந்த வடக்கன்குளத்தில் கிறிஸ்தவராக 1745-ல்திருமுழுக்குப் பெற்றார். ‘லாசர்’ என்னும் பெயரில் அவர் கிறிஸ்தவர் ஆனார். இந்த ஹீப்ரூ சொல்லுக்கான பொருளான ‘தேவசகாயம்’ என்னும் பெயரில் பின்னால் அறியப்பட்டார். இவருடன் இவரது மனைவியும் மதம் மாறினார். இவரது மத மாற்றம் அரசர் உள்படப் பலருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தேவசகாயம் வழக்கம்போல் அரசாங்கப் பணியைத் தொடர்ந்தபடியே தெய்வ ஊழியத்தையும் செய்தார்.
வணங்கப்படும் புனித மலை
அவரது போதனைகள் பலரின் மனங்களிலும் மதம் சார்ந்த மாற்றங்களை நிகழ்த்தின. நான்கைந்து ஆண்டுகள் ஆயின. இவரது செயல்பாடு, அதிகாரத்தில் உள்ள இந்துக்கள் மத்தியில் விரோதத்தை ஏற்படுத்தியது. அரசாங்கம் பின்பற்றும் மதத்துக்கு எதிரான நடவடிக்கை என அரசரும் நம்பினார். இதனால், தேவசகாயம் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். “அரசாங்க விவரங்களை உளவு சொன்னதாக ராஜதுரோகக் குற்றச்சாட்டில்தான் அவர் கைதுசெய்யப்பட்டார்” என திருவிதாங்கூர் தரப்பில் சொல்லப் பட்டது.
என்றாலும், அது பொய்க் குற்றச் சாட்டு எனப் பரவலாக மறுக்கப் படுகிறது. அவர் மீது கடுமையான சித்ரவதைகள் செய்யப்பட்டன. சில ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு அவர் ஆரல்வாய்மொழிக்கு அருகில் உள்ள காற்றாடி மலையில் அரசரின் உத்தரவின்பேரில் சுடப்பட்டு இறந்தார். அவரது உடல் பாகங்கள் விலங்கு களுக்கு இரையாக வீசப்பட்டதாகச் சொல்லப் படுகிறது. கண்டெடுக்கப்பட்ட அவரது உடலின் பாகங்கள் கோட்டாறு புனித சவேரியார் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டன. அவர் கொல்லப்பட்ட மலை இன்று திருத்தலமாக வணங்கப் படுகிறது.
- ஜெயகுமார்