

மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிகச் சிறந்தது நரசிம்ம அவதாரம். ஹிரண்யனைத் தன் கூரிய நகங்களால் கிழித்துப்போட்டு “கடவுள் தூணிலும் இருக்கிறார்; துரும்பிலும் இருக்கிறார்” என்று வாதிட்ட பிரகலாதனின் வார்த்தையை மெய்ப்பித்து, ஹிரண்யனின் அட்டகாசத்தால் அமைதி இழந்து அவதியுற்ற தேவர்களைக் காப்பாற்றினார் என்பது புராணத்தின் வழியாக விரியும் ஆன்மிக வரலாறு.
ஹிரண்யனை வதம் செய்து முடிந்த பின்னும் அவரது ஆக்ரோஷம் தணிய வில்லை. அரக்கனின் குருதியைக் குடித்ததால் அரக்க குணம் பகவானை ஆட்கொண்டு அவரது உக்கிரம் அடங்காது ஆட்டி வைத்தது. எதிர்பார்க்காத அசுரத்தன்மையை ஆண்டவனிடம் கண்ட தேவர்கள் செய்வதறியாது தவித்தனர். நரசிம்மரின் தணியாத இந்தக் கோபத்தை தணிக்க தேவர்கள் மட்டுமன்றி பிரகலாதனும் என்னென்னமோ செய்து பார்த்துத் தோல்வியுற்றனர்.
தேவர்களும் முனிவர்களும் சிவபெருமானிடம் சரணடைந்து நரசிம்மத்தின் சினத்தையும், அதனால் விளையும் அச்சத்தையும் போக்க முறையிட்டுக் கொண்டார்கள். இதைக் கேட்டு மனம் நெகிழ்ந்த சிவபெருமான், தன்னுடைய பூதகணங்களின் தலைவன் அகோர மூர்த்தியை அனுப்பினார். பூத கணங்களின் தலைவனாலும் நரசிம்மரை சாதாரண நிலைக்குக் கொண்டுவர முடியவில்லை. எனவே ருத்ர மூர்த்தியான சிவபெருமான் நரசிம்மரின் கோபம் தணிக்க மனித உடலும், விலங்கும் கலந்த ஒரு வடிவம் எடுத்தார். அதற்குப் பெயர் சரப பட்சி.
சரப பட்சி என்பது காட்டுக்கே அரசனான சிங்கத்தையே கொல்லும் வல்லமை கொண்டது. இப்படிக் காட்சி கொடுத்த சிவபெருமானை நாம் சரபேஸ்வரர் என்று அழைத்து வழிபடுகிறோம். சரபேஸ்வரர் எட்டுக் கால்களைக் கொண்டவர். மான், மழு, சர்ப்பம், அக்னி என்னும் நான்கினையும் தம் நான்கு கரங்களில் தாங்கியிருந்தார். சந்திரன், சூரியன், அக்னி எனும் மூன்றினையும் குணமாகக் கொண்ட முக்கண்களோடு, கூர்மையான நகங்களோடு, அதிபயங் கரமான பற்களுடன் வெளியில் நீண்டு தொங்கிக் கொண்டிருக்கும் நாக்கையும் கொண்டவராக சரபேஸ்வரர் விளங்கினார். இரண்டு புறத்திலும் இறக்கைகளாக பிரத்யங்கரா தேவியும், துர்கா சூலினியும் இருக்க, இரு தொடைகளாக ரோக தேவதையும், எமனும் அமைய நீண்ட வாலும், கருடனைப் போல் மூக்கும், காளியைப் போல் பல்லும் கொண்ட தோற்றத்தை சரபேஸ்வரர் எடுத்தார்.
இரண்டு இறக்கைகளிலும் இருந்த பிரத்யங்கரா தேவியும், சூலினியும் சக்தியாக விளங்க பறந்து வந்த சரபேஸ்வரர், நரசிம்மரின் ரஜோ குணம் முற்றிலும் மாற பல வகைகளில் முயற்சி செய்தார். அப்படியும் அவரது உக்கிரம் தணியாததால் கடைசியில் அவரை தனது மார்போடு அணைத்துக்கொள்ள நரசிம்மரின் சினம் தணிந்தது. தன் சுய உணர்வு பெற்றார்.
நரசிம்மரையே நிதான நிலைக்குக் கொண்டு வந்த சரபரைத் துதித்தால் எந்த ஒரு எதிர் சக்தியையும் எளிதில் அழிக்கக்கூடிய வல்லமை வரும். வாழ்வில் நிம்மதி வருவது உறுதி. சத்ரு சம்ஹாரமே சரபேஸ்வரரின் சிறந்த சக்தி. எதிரிகளின் தீய எண்ணம் ஈடேறாது காக்கும் கவசமே சரபரின் வழிபாடு.
பிரதோஷ காலத்திலும் ராகு காலங்களில், அதுவும் சிறப்பாக ஞாயிறு அன்று ராகு கால வேளையிலும் அமாவாசை, பௌர்ணமி போன்ற நல்ல நாட்களிலும் சரபரை வழிபட்டால் அமைதியாக வாழ அருள் தருவார். நரசிம்மர் ஜெயந்தி அன்று நரசிம்மர் படத்தை வீட்டில் வைத்து வழிபடுவது போன்றே, சரபர் படத்தையும் வைத்து வழிபட நன்மை உண்டாகும்.