

ஆகமமு மாரணமு மரும்பொருளென் றொருங்குரைத்த
ஏகவுரு வாகிநின்றா ரிவரார்சொல் தோழி
மாகநதி முடிக்கணிந்து மணிமன்று ளனவரத
நாகமணி மிளிரநட நவில்வார்காண் பெண்ணே...
திருவருட்பாவின் இரண்டாம் திருமுறையில் ராமலிங்க சுவாமிகள் எழுதியிருக்கும் செய்யுள் இது. கொச்சகக் கலிப்பா என்னும் இலக்கணச் செறிவோடு எழுதப்பட்டிருக்கும் இந்தச் செய்யுளுக்குச் சிறிதும் பதச் சேதம் இல்லாமல் இசையமைத்திருப்பவர் ஒரு பிரபல திரை இசையமைப்பாளர் என்றால் பலருக்கும் நம்புவதற்குக் கடினமாக இருக்கும். அந்தத் திரை இசையமைப்பாளர் சி.சத்யா. பாடியிருப்பவர் பிரபல பின்னணிப் பாடகி சைந்தவி. பிரபல திரை இசையமைப்பாளரான பின்பும் மனத்துக்குப் பிடிக்கும் இத்தகைய ஆன்மிகப் பாடல்களுக்கு விரும்பி இசையமைத்து அந்தக் காணொளிகளைத் தன்னுடைய யூடியூப் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருபவர் சி.சத்யா. குறிப்பாக வள்ளலார் அருளிய திருவருட்பா பாடலான இதற்கு இசையமைத்த தருணம் குறித்து நம்மிடம் அவர் பேசியதிலிருந்து...
“ஆகமமும் ஆரணமும் பாட்டு இரண்டாம் திருமுறையில் வள்ளலார் சுவாமிகள் எழுதியது. இது மிகவும் அரிதான பாடல். என்னுடைய குரு தர்மலிங்கம் சுவாமி 90களின் இறுதியில், வள்ளலார் பாடல்களுக்கு இசையமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது நான் இசையமைப்பாளர் பாலபாரதியிடம் கீபோர்டு வாசித்துக்கொண்டிருந்தேன்.
பாலபாரதி, தர்மலிங்கம் சுவாமிக்காகத் திருவருட்பா பாடல்கள் சிலவற்றுக்கு இசையமைத்தார். என்னையும் சில பாடல்களுக்கு இசையமைக்கச் சொன்னார் தர்மலிங்கம் சுவாமி. அப்படியொரு முறை அவர் என்னிடம் கொடுத்த திருமுறைப் பாடல்தான் இது. வரிகளைப் படித்ததுமே என் மனத்தைத் தாலாட்டியது அந்தப் பாடல். அந்த உணர்வை அப்படியே சிந்தாமல் சிதறாமல் பாடலுக்கான மெட்டில் கொண்டுவர நினைத்தேன். மத்யமாவதி ராகத்தின் அடிப்படையில் இறைவனுக்கான ஒரு தாலாட்டுப் பாடலாகவே அமைத்தேன்.
அப்போது பள்ளி மாணவியான சைந்தவி, கர்னாடக இசையை முறையாகக் கற்றுக்கொண்டிருந்தார். வேறொரு ரெகார்டிங்கிற்காக ஒலிப்பதிவு கூடத்துக்கு வந்திருந்த சைந்தவியிடம் பாடலின் மெட்டை விளக்கினேன். அதை மிகச் சரியாகக் கிரகித்துக்கொண்டு சைந்தவி பாடிய பாடல்தான் இது” என்றார் பழைய நினைவுகளில் திளைத்தபடி இசையமைப்பாளர் சி.சத்யா.
ஆகமமும் காணொளியைக் காண: