

புத்த பூர்ணிமா என்பது புத்தருக்கு ஞானம் கிடைத்த நாள் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில்தான் அவர் பிறந்தார் என்றும், இறந்தார் என்றும் கருதப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதத்தின் பௌர்ணமி தினத்தில் புத்த பூர்ணிமா கொண்டாடப்படும். அதன்படி இன்று புத்த பூர்ணிமா உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
மதத்தை அதன் சடங்குகளிலிருந்தும்மூட நம்பிக்கைகளிலிருந்தும் மீட்டெடுத்த பெருமை புத்தரையே சேரும். பக்தியின் அடிப்படையில் இல்லாமல்அறிவின், தர்க்கத்தின் அடிப்படையில் ஞானத்தைப் போதித்த முதல் குருவும் இவரே. புத்தரின் இயற்பெயர் கௌதம சித்தார்த்தன். புத்தர் என்றால் அறிவு விளங்கப் பெற்றவர் என்று பொருள். இவர் நேபாளத்தின் கபிலவஸ்துவில் பொ.ஆ.மு.543-ல் பிறந்தார். 16 வயதில் யசோதையைத் திருமணம் செய்த புத்தருக்கு ராகுலா என்கிற மகனும் இருந்தார்.
புத்தரின் தவம்
இல்லற வாழ்விலும், அரச வாழ்விலும் ஈடுபாடு இல்லாமல் 29 வயதில் வெளி உலகைக் காணக் கிளம்பினார். மக்கள் படும் துன்பங்களையும், துயரங்களையும் கண்டு மிகவும் மனம் வருந்தினார். அதன்பின் இன்றைய பிஹாரில் உள்ள கயாவில் இருக்கும் போதி மரத்தடியில் ஆறு ஆண்டுகள் கடுந்தவம் செய்து ஞானம் பெற்றார். அதன் பின்னர், புத்த மதம் என்கிற புதிய மதத்தை அவர் உருவாக்கினார்; அதன் கொள்கைகளை உலகறியச் செய்தார். இன்று உலகெங்கும் 5,000 கோடிக்கும் அதிகமான பௌத்தர்கள் உள்ளனர்.
கொண்டாட்டம்
ஆசிய நாடுகளான இலங்கை, சீனா, ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, தைவான், கம்போடியா, திபெத், லாவோஸ் போன்ற நாடுகளில் புத்த பூர்ணிமா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் பிஹாரில் உள்ள புத்த கயாவில் புத்தர் ஜெயந்தி மிகச் சிறந்த முறையில் கொண்டாடப்பட்டுவருகிறது. மகாபோதி கோயில் வண்ணக் கொடிகளாலும் பூக்களாலும் அலங்கரிக்கப்பெற்று விழாக்கோலம் பூண்டிருக்கும். புத்தர் ஞானம் பெற்ற போதி மரத்தடியில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
உலகிலுள்ள பெருவாரியான பக்தர்கள் அங்கே கூடி தங்கள் மரியாதையைப் புத்தருக்குச் செலுத்துவர். புத்தர் ஞானமடைந்த போதி மரத்தையும், அதைச் சுற்றியுள்ள இடங்களையும் வண்ணமயமான பௌத்த மதக் கொடிகளால் அலங்கரித்து அவர்கள் கொண்டாடுவதைப் பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். காலையில் பௌத்த சன்னியாசிகள் ஊர்வலம் நடைபெறும். அதன் பின்னர் எண்ணற்ற பொருட்களை நைவேத்தியம் செய்து பட்சணங்களையும், இனிப்புகளையும் அனைவருக்கும் அளித்து மகிழ்வர்.
பொதுவாக புத்த பூர்ணிமா அன்று, உலகெங்கும் இருக்கும் பௌத்த மதத்தினர் பௌத்த மடங்களிலும், மத அரங்குகளிலும், வீடுகளிலும் வழிபடுதல், உபதேசங்களைப் படித்தல், புத்த மத நூல்களிலிருந்து வசனங்களை இடைவிடாது ஓதுதல் போன்ற செயல்களில் மூழ்கி இருப்பர். இந்த நன்னாளில் உலகெங்கும் இருக்கும் பௌத்தர்கள் வெண் நிற ஆடையை அணிவர்.
புத்தரின் நான்கு முக்கிய போதனைகள்
புத்தர் காட்டும் வழி
புத்தரை அறியாதவர்கள், பிடிக்காதவர்கள் குறைவு. பௌத்தம் என்பது உயரிய ஞானத்தோடும், மனத்தூய்மையோடும், நல்வாழ்வோடும் தொடர்புடைய ஓர் உயர்ந்த கருத்தியல். சாதி, மதம், இனம், மொழி, நாடு உள்ளிட்ட பாகுபாடுகளைக் கடந்து அது அனைவராலும் இன்று போற்றப்படுகிறது. புத்தரின் போதனைகள், அன்பையும் அறிவையும் தொலைத்து வெறுப்பின் பின் செல்லும் இந்தக் கால மக்களுக்கு, அவர்கள் தொலைத்தவற்றை மீண்டும் பெற உதவும்.
கட்டுரை, படங்கள்: முகமது ஹுசைன்